டெல்டா பாசனத்துக்காக கல்லணை திறப்பு: 3.73 லட்சம் ஹெக்டேரில் சம்பா சாகுபடி செய்யத் திட்டம்

டெல்டா மாவட்டங்களின் சம்பா பருவப் பாசனத்துக்காக கல்லணை சனிக்கிழமை திறக்கப்பட்டது.
டெல்டா மாவட்டங்களின் பாசனத்துக்காக கல்லணை சனிக்கிழமை திறந்துவிடப்பட்டதைத் தொடர்ந்து, காவிரியில் பாய்ந்தோடும் தண்ணீர். (வலது)  கல்லணையிலிருந்து சனிக்கிழமை காவிரியில் தண்ணீர் திறந்துவிடுவதற்கான பொத்தானை
டெல்டா மாவட்டங்களின் பாசனத்துக்காக கல்லணை சனிக்கிழமை திறந்துவிடப்பட்டதைத் தொடர்ந்து, காவிரியில் பாய்ந்தோடும் தண்ணீர். (வலது)  கல்லணையிலிருந்து சனிக்கிழமை காவிரியில் தண்ணீர் திறந்துவிடுவதற்கான பொத்தானை

டெல்டா மாவட்டங்களின் சம்பா பருவப் பாசனத்துக்காக கல்லணை சனிக்கிழமை திறக்கப்பட்டது.

காவிரி டெல்டா பாசனத்துக்காக, மேட்டூர் அணையிலிருந்து ஆக. 13-ஆம் தேதி காலை முதல் தண்ணீர் திறந்துவிடப்பட்டு வருகிறது. தொடக்கத்தில் விநாடிக்கு 3,000 கன அடி வீதம் தண்ணீர் திறந்துவிடப்பட்ட நிலையில், படிப்படியாக விநாடிக்கு 10,000 கன அடி வீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.

இந்தத் தண்ணீர் வெள்ளிக்கிழமை இரவு கல்லணைக்கு வந்தது. இதைத் தொடர்ந்து, கல்லணையிலிருந்து சனிக்கிழமை முற்பகல் 11 மணியளவில் டெல்டா பாசனத்துக்காக, காவிரியில் அமைச்சர்கள் ஆர். காமராஜ் (உணவுத்துறை) , ஓ.எஸ். மணியன் (கைத்தறி மற்றும் துணிநூல் துறை), சி. விஜயபாஸ்கர் (மக்கள் நல்வாழ்வுத் துறை), இரா. துரைக்கண்ணு (வேளாண் துறை), வெல்லமண்டி என். நடராஜன் (சுற்றுலாத் துறை), எஸ். வளர்மதி (பிற்படுத்தப்பட்டோர் நலன் மற்றும் சிறுபான்மையினர் நலத் துறை), புதுச்சேரி வேளாண் துறை அமைச்சர் கமலக்கண்ணன் ஆகியோர் தண்ணீரைத் திறந்துவிட்டு மலர்த் தூவி வணங்கினர். இதையடுத்து, வெண்ணாறு, கல்லணைக் கால்வாய், கொள்ளிடத்திலும் அவர்கள் தண்ணீரை திறந்து விட்டனர்.

அப்போது, கல்லணையிலிருந்து  காவிரி, வெண்ணாறு, கொள்ளிடத்தில் விநாடிக்கு தலா 1,000 கன அடி வீதமும், கல்லணைக் கால்வாயில் 500 கன அடி வீதமும் என மொத்தம் விநாடிக்கு 3,500 கன அடி வீதம் தண்ணீர் திறந்துவிடப்பட்டது.

கடைமடைப் பகுதிக்கு  விரைந்து செல்ல நடவடிக்கை:  கல்லணைத் தலைப்பிலிருந்து திறந்துவிடப்பட்ட தண்ணீர் காவிரி, வெண்ணாறு, கல்லணைக் கால்வாய் ஆகியவற்றின் கடைமடைப் பகுதிகளுக்கு விரைந்து செல்ல நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், அக்டோபர் இறுதி வரை சம்பா சாகுபடிக்குத் தங்கு தடையின்றி தண்ணீர் வழங்க வேண்டிய நிலை உள்ளதால், நீர் பங்கீட்டில் தேவைக்கேற்ப மாறுபாடுகள் செய்து, சிக்கனத்தைக் கடைப்பிடிக்க வேண்டியது அவசியமாகிறது எனவும், பருவமழைக்கேற்ப நீர்ப்பங்கீடு மாற்றிக் கொள்ளலாம் என்றும் பொதுப்பணித் துறை அலுவலர்கள் தெரிவித்தனர்.

அமைச்சர்கள் எஸ். வளர்மதி, வெல்லமண்டி என். நடராஜன், இரா. துரைக்கண்ணு, சி. விஜயபாஸ்கர், மாநிலங்களவை உறுப்பினர் ஆர். வைத்திலிங்கம், ஆட்சியர் ஆ. அண்ணாதுரை, அமைச்சர்கள் ஆர். காமராஜ், ஓ.எஸ். மணியன், புதுச்சேரி அமைச்சர் கமலக்கண்ணன், தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தின் பொதுச் செயலர் பி.ஆர். பாண்டியன்.

3.73 லட்சம் ஹெக்டேரில் சாகுபடி: கல்லணையிலிருந்து தண்ணீர் திறந்துவிடப்படுவதால், தஞ்சாவூர் மாவட்டத்தில் 1.05 லட்சம் ஹெக்டேரிலும், திருவாரூர் மாவட்டத்தில் 1.27 லட்சம் ஹெக்டேரிலும், நாகை மாவட்டத்தில் 90,000 ஹெக்டேரிலும், புதுக்கோட்டை மாவட்டத்தில் 10,000 ஹெக்டேரிலும், கடலூர் மாவட்டத்தில் 41,000 ஹெக்டேரிலும் என மொத்தம் 3.73 லட்சம் ஹெக்டேரில் சம்பா சாகுபடி மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டுள்ளதாக  வேளாண் துறை அலுவலர்கள் தெரிவித்தனர்.

விழாவில் மாநிலங்களவை உறுப்பினர் ஆர். வைத்திலிங்கம், அரசுத் தலைமைக்  கொறடா தாமரை எஸ். ராஜேந்திரன், மாவட்ட ஆட்சியர்கள் ஆ. அண்ணாதுரை (தஞ்சாவூர்), சு. சிவராசு, (திருச்சி), சீ. சுரேஷ்குமார், (நாகை), டி. ஆனந்த் (திருவாரூர்), பி. உமாமகேஸ்வரி (புதுக்கோட்டை), டி.ஜி. வினய் (அரியலூர்), சட்டப்பேரவை உறுப்பினர்கள் சி.வி. சேகர் (பட்டுக்கோட்டை), மா. கோவிந்தராசு (பேராவூரணி), ஜெ.கே.என். ராமஜெயலிங்கம் (ஜயங்கொண்டம்), பாரதி (சீர்காழி), ராதாகிருஷ்ணன் (மயிலாடுதுறை), பவுன்ராஜ் (பூம்புகார்), ஆறுமுகம் (கந்தர்வகோட்டை),  மாநிலங்களவை முன்னாள் உறுப்பினர் டி. ரத்தினவேல்,  தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தின் பொதுச் செயலர் பி.ஆர். பாண்டியன் உள்ளிட்ட விவசாய சங்கத் தலைவர்கள், பொதுப்பணித் துறை திருச்சி மண்டலத் தலைமைப் பொறியாளர் ராமமூர்த்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com