மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு பட்டியல்: வெளி மாநிலத்தவர் எனக் கூறப்படும் 126 பேர் பதிலளிக்க உத்தரவு

தமிழகத்தில் நடைபெற்ற மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு பட்டியலில்  வெளி மாநிலத்தவர் எனக் கூறப்படும் 126 மாணவர்கள்,


தமிழகத்தில் நடைபெற்ற மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு பட்டியலில்  வெளி மாநிலத்தவர் எனக் கூறப்படும் 126 மாணவர்கள், இருப்பிட சான்று விவரத்துடன், எதன் அடிப்படையில் கலந்தாய்வில் கலந்து கொண்டனர் என்பது குறித்து பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை திங்கள்கிழமை உத்தரவிட்டது.
தமிழகத்தில் 23 அரசு மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. இதில் 85 சதவீத இடங்கள் தமிழகத்தைச் சேர்ந்தவர்களுக்கும், 15 சதவீத இடங்கள் பிறமாநிலத்தவருக்கும் ஒதுக்கப்படுகின்றன. ஆனால், இந்த முறையில் மருத்துவ மாணவர் சேர்க்கை நடக்கவில்லை. எனவே 2019-20 கல்வியாண்டிற்கான மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வை ரத்து செய்ய வேண்டும். மேலும் இளங்கலை மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வுப் பட்டியலில் வெளி மாநில மாணவர்களை நீக்கிவிட்டு, மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வுப் பட்டியலை வெளியிட்டு, அதனடிப்படையில் மருத்துவக் கலந்தாய்வு நடத்த உத்தரவிட வேண்டும் என மதுரையைச் சேர்ந்த சோம்நாத், நேயா, ஸ்ரீலதா ஆகியோர் மனு தாக்கல் செய்திருந்தனர்.
இந்த மனு ஏற்கெனவே விசாரணைக்கு வந்தபோது, இது குறித்து தமிழக சுகாதாரத்துறை செயலரிடம், அரசு வழக்குரைஞர் விளக்கம் பெற்றுத் தெரிவிக்க உத்தரவிடப்பட்டிருந்தது. 
இந்நிலையில் இந்த மனு நீதிபதி ஆர்.சுரேஷ்குமார் முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது மருத்துவக் கலந்தாய்வு பட்டியலில் வெளிமாநிலத்தவர் எனக் கூறப்படும் 126 பேரை நீதிமன்றம் தாமாக முன்வந்து இவ்வழக்கில் சேர்க்கிறது. மேலும் அவர்கள் அனைவரும் இருப்பிட சான்று விவரத்துடன், எதனடிப்படையில் கலந்தாய்வில் கலந்துகொண்டனர் என்பது குறித்து பதிலளிக்க  உத்தரவிட்டு வழக்கை ஆகஸ்ட் 26-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com