பன்னீர் திராட்சை சாகுபடியில் கம்பம் பள்ளத்தாக்கு விவசாயிகள்: புவிசார் குறியீடு பெற அரசு உதவ கோரிக்கை

தேனி: தேனி மாவட்டம், கம்பம் பள்ளத்தாக்குப் பகுதியில் ஒட்டுக்கட்டி வளர்க்கப்படும் வீரிய ரக திராட்சைக் கொடிகள் பயனளிக்காததால், 50 ஆண்டுகளுக்கு முந்தைய பாரம்பரிய கருப்பு பன்னீர் திராட்சை சாகுபடிக்கு

தேனி: தேனி மாவட்டம், கம்பம் பள்ளத்தாக்குப் பகுதியில் ஒட்டுக்கட்டி வளர்க்கப்படும் வீரிய ரக திராட்சைக் கொடிகள் பயனளிக்காததால், 50 ஆண்டுகளுக்கு முந்தைய பாரம்பரிய கருப்பு பன்னீர் திராட்சை சாகுபடிக்கு விவசாயிகள் மீண்டும் திரும்பி வருகின்றனர்.
 கம்பம் பள்ளத்தாக்குப் பகுதியில் 5,000 ஏக்கர் பரப்பளவில் திராட்சை சாகுபடி நடைபெற்று வருகிறது. இங்கு நிலவும் சீதோஷ்ணம், மண் மற்றும் நீரின் தன்மையால் வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் ஆண்டுக்கு மூன்று பருவங்களில் திராட்சை அறுவடை நடைபெறுகிறது.
 கர்நாடகம் மற்றும் மகாராஷ்டிர மாநிலங்களில் இருந்து விதையில்லா திராட்சை வரத்து இல்லாத ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில், கம்பம் பள்ளத்தாக்கு திராட்சை மட்டுமே சந்தையை ஆக்கிரமிக்கிறது. கம்பம், கூடலூர், சுருளிப்பட்டி, குளப்பகவுண்டன்பட்டி, நாராயணத்தேவன்பட்டி காமயகவுண்டன்பட்டி, அணைப்பட்டி, ராயப்பன்பட்டி ஆகிய பகுதிகளில் பாரம்பரிய ரகமாக கருப்பு பன்னீர் திராட்சை சாகுபடியிலும், சின்னமனூர், ஓடைப்பட்டி பகுதியில் தாம்சன் பச்சை விதையில்லா திராட்சை சாகுபடியிலும் விவசாயிகள் ஈடுபட்டு வந்தனர்.
 ஆண்டுக்கு ரூ.280 கோடி வர்த்தகம்
 கம்பம் பள்ளத்தாக்குப் பகுதியில் உற்பத்தியாகும் திராட்சை கேரளம், மதுரை, திருச்சி, சென்னை ஆகிய பகுதிகளுக்கு விற்பனைக்கு அனுப்பப்படுகிறது. திராட்சை தோட்டங்களில் ஏக்கர் ஒன்றுக்கு ஆண்டுக்கு சராசரி 16 ஆயிரம் கிலோ வரை திராட்சை அறுவடை செய்யப்படுகிறது. மாவட்டத்தில் ஆண்டுக்கு சராசரி 80 ஆயிரம் டன் திராட்சை அறுவடை செய்யப்பட்டு, மொத்தம் ரூ.280 கோடி மதிப்பில் வர்த்தகம் நடைபெறுகிறது.
 திராட்சைப் பழம் சீசனுக்கு ஏற்ப குறைந்தபட்சம் கிலோ ரூ.25 முதல் அதிகபட்சம் கிலோ ரூ.110 வரை விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்படுகிறது. மழை காலங்களில் திராட்சை விலை கிலோ ரூ.25-க்கும் கீழ் சரியும்போது, விற்பனை வாய்ப்பின்றி அறுவடை செலவுக்கு கூட கட்டுபடியாகாமல் திராட்சை பழங்கள் கொடியிலேயே அழுகி வீணாகும் நிலையும் ஏற்படுவதுண்டு.
 ஒட்டுரக திராட்சை சாகுபடியில் ஆர்வம்
 திராட்சை விவசாயத்தில் உரம், பூச்சிக் கொல்லி மருந்துகள், வேலையாள்கள் செலவு ஆகியவை முக்கிய நடைமுறை செலவுகளாக உள்ளது. பருவநிலை மாற்றம், பூச்சி நோய் தாக்குதல், நிலையற்ற விற்பனை விலை ஆகியவற்றால் திராட்சை விவசாயம் நலிவடையத் தொடங்கியது. இந்நிலையில், பாரம்பரிய பன்னீர் திராட்சை மற்றும் விதையில்லா பச்சை திராட்சை சாகுபடியை கைவிட்டு, அதிக மகசூல் தரும் வீரிய ஒட்டுரக திராட்சை கொடி வளர்ப்பில் இளம் தலைமுறை விவசாயிகள் ஆர்வம் காட்டத் தொடங்கினர்.
 தோட்டக் கலைத் துறை மூலம் கம்பம் பள்ளத்தாக்கு முன்னோடி திராட்சை விவசாயிகள் மகாராஷ்டிரத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டு, ஒட்டுரக திராட்சை சாகுபடி தொழில்நுட்பத்தை பார்வையிட்டனர். இதன் அடிப்படையில், கடந்த 2014-ஆம் ஆண்டு முதல் 50 ஆண்டுகளுக்கு முந்தைய பாரம்பரிய கருப்பு பன்னீர் திராட்சை, பச்சை விதையில்லா திராட்சை கொடிகளை அகற்றி விட்டு, வீரிய ஒட்டு ரக திராட்சை சாகுபடிக்கு விவசாயிகள் மாறினர்.
 தேனி மாவட்டம், ஆனைமலையன்பட்டியில் செயல்பட்டு வரும் தேசிய திராட்சை ஆராய்ச்சி நிலையம் சரத், கிருஷ்ணா சரத், சூப்பர் சோனாக், ரெட் குலோப் ஆகிய ஒட்டுரக திராட்சை கொடிகளை விவசாயிகளுக்கு வழங்கி வருகிறது.
 பயனற்ற ஒட்டுரக திராட்சை சாகுபடி
 விவசாயிகளுக்கு ஒட்டு ரக திராட்சை குச்சிகளை வழங்கும் திராட்சை ஆராய்ச்சி நிலையம் மற்றும் தோட்டக்கலைத் துறை கொடி வளர்ப்பு, சாகுபடி தொழில்நுட்பம், பயிர் பாதுகாப்பு முறைகள் குறித்தும், தோட்டங்களில் செயல் விளக்கத் திடல் அமைத்தும் விவசாயிகளுக்கு பயிற்சி அளிப்பது இல்லை. ஒட்டு ரக திராட்சை கொடிகள் மூலம் மகசூல் அதிகமாக இருந்தாலும், நிறம் மற்றும் தரம் குறைந்திருப்பதால் சந்தையில் போதிய விலை கிடைப்பதில்லை. சீதோஷ்ண மாற்றத்துக்கு ஏற்ப பயிர் பாதுகாப்பு செலவு வழக்கத்தை விட அதிகமாக உள்ளது என்று விவசாயிகள் கூறுகின்றனர்.
 ஒட்டுரக திராட்சை சாகுபடி மூலம் கூடுதல் மகசூல் கிடைத்தாலும், உற்பத்திச் செலவு அதிகரிப்பு, வேலையாள்கள் பற்றாக்குறை, விற்பனை வாய்ப்பின்மை ஆகியவற்றால், தற்போது தோட்டங்களில் ஒட்டுரக திராட்சை கொடிகளை அகற்றி விட்டு பாரம்பரிய பன்னீர் திராட்சை கொடி வளர்ப்புக்கு விவசாயிகள் திரும்பி வருகின்றனர்.
 அரசு பாராமுகம் என விவசாயிகள் புகார்
 இதுகுறித்து சுருளிப்பட்டியைச் சேர்ந்த திராட்சை விவசாயி கி.முகுந்தன் கூறியது:
 ஒட்டுரக திராட்சை சாகுபடியில் தோட்டக்கலைத் துறை மற்றும் திராட்சை ஆராய்ச்சி மையம் சார்பில் சீசனுக்கு ஏற்ப உரம், பூச்சிக் கொல்லி மருந்துகள் பரிந்துரைக்கப்படுவதில்லை. எனவே, தனியார் மருந்து கம்பெனி பிரதிநிதிகள் பரிந்துரைக்கும் பல்வேறு ரசாயன மருந்துகளை பயன்படுத்த வேண்டியுள்ளது. இதனால் உற்பத்திச் செலவு அதிகரிக்கிறது. திராட்சை ஆராய்ச்சி நிலையம், மகசூலை பாதுகாக்க தொழில்நுட்ப ஆலோசனை வழங்குவதில்லை. கம்பம் பள்ளத்தாக்கின் சீதோஷ்ண நிலைக்கு ஏற்பவும், குளிர்ப்பதன கிட்டங்கியில் இருப்பு வைப்பதற்கும் வாய்ப்பு உள்ள பிரத்யேக ஒட்டுரக திராட்சையை ஆராய்ச்சி செய்து பரிந்துரை செய்யவில்லை.
 கம்பம் பள்ளத்தாக்கில் பணப் பயிரான திராட்சை சாகுபடி மீது அரசு பாராமுகம் காட்டி வருகிறது.
 திராட்சை சாகுபடிக்கு அரசு சார்பில் மானியம், பயிர்க்காப்பீடு, உரம், பூச்சிக் கொல்லி மருந்து மானியம் வழங்கப்படுவதில்லை. தற்போது இடைத் தரகர்கள் ஆதிக்கத்தால், நேரடிக் கொள்முதல் நடைமுறையும் மாற்றப்பட்டு விட்டது.
 இந்நிலையில், ஒட்டுரக திராட்சை சாகுபடியால் விவசாயிகளுக்கு எவ்வித பயனும் ஏற்படவில்லை.
 எனவே, கம்பம் பள்ளத்தாக்கில் பாரம்பரிய கருப்பு பன்னீர் திராட்சைக்கு புவிசார் குறியீடு பெற்றுத் தந்து, கருப்பு பன்னீர் திராட்சை சாகுபடியை மேம்படுத்துவதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
 ஓடைப்பட்டியைச் சேர்ந்த திராட்சை விவசாயி வெங்கடேசன் கூறியது: ஒட்டுரக திராட்சை கொடி வளர்ப்பில் பருவநிலை மாற்றத்தால் பல்வேறு சிரமங்களை சந்திக்க வேண்டியுள்ளது. மகசூல் அதிகரித்து காணப்பட்டாலும் கூடுதல் உற்பத்திச் செலவு, குறைந்தபட்ச விலை நிர்ணயமில்லாதது ஆகியவற்றால் ஒட்டு ரக திராட்சை சாகுபடியில் விவசாயிகள் நஷ்டத்தையே சந்தித்து வருகின்றனர்.
 எனவே, விவசாயிகள் தற்போது பாரம்பரிய கருப்பு பன்னீர் திராட்சை சாகுபடிக்கு திரும்பி வருகின்றனர். பல இடங்களில் திராட்சை சாகுபடியை கைவிட்டு மாற்றுப் பயிராக கோவைக்காய், பாகற்காய், அவரைக்காய், பேஷன் பூரூட் ஆகிய பந்தல் காய்கறி சாகுபடி நடைபெற்று வருகிறது.
 நலிவடைந்து வரும் திராட்சை விவசாயத்தை பாதுகாக்க திராட்சை கொள்முதலை முறைப்படுத்தவும், புதிய விற்பனை வாய்ப்புகளை ஏற்படுத்தித் தரவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
 - கோ.ராஜன்
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com