மேட்டூர் அணை திறந்து 15 நாள்களாகியும் தண்ணீர் வராததால் தாமதமாகும் சம்பா சாகுபடி

மேட்டூர் அணை திறக்கப்பட்டு கிட்டத்தட்ட 15 நாள்களாகியும் இன்னும் பாசனத்துக்கு தண்ணீர் கிடைக்காததால்,  சம்பா சாகுபடிப் பணிகளும் தாமதமாகும் நிலை ஏற்பட்டுளது.
தஞ்சாவூரில் வெண்ணாற்றில் ஓரமாகச் செல்லும் தண்ணீர்.
தஞ்சாவூரில் வெண்ணாற்றில் ஓரமாகச் செல்லும் தண்ணீர்.

மேட்டூர் அணை திறக்கப்பட்டு கிட்டத்தட்ட 15 நாள்களாகியும் இன்னும் பாசனத்துக்கு தண்ணீர் கிடைக்காததால்,  சம்பா சாகுபடிப் பணிகளும் தாமதமாகும் நிலை ஏற்பட்டுளது.
மேட்டூர் அணை ஆகஸ்ட் 13-ஆம் தேதி திறக்கப்பட்டதைத் தொடர்ந்து டெல்டா மாவட்டங்களின் பாசனத்துக்காக கல்லணை ஆக. 17-ஆம் தேதி  திறந்துவிடப்பட்டது. கல்லணை திறக்கப்பட்ட நாளிலிருந்து அதிகபட்சமாக ஒரு வாரத்தில் கடைமடைப் பகுதிக்குத் தண்ணீர் சென்றுவிடும். ஆனால், கல்லணை திறக்கப்பட்டு 10 நாள்கள் கடந்தும்கூட இன்னும் இடைப்பட்ட பகுதிகளுக்கே தண்ணீர் முழுமையாகச் சென்றடையவில்லை.
மேட்டூர் அணையிலிருந்து விநாடிக்கு குறைந்தது 22,000 கனஅடி வீதம் தண்ணீர் திறந்துவிடப்பட்டால்தான்,  கடைமடைப் பகுதியைச் சென்றடையும். ஆனால், மேட்டூர் அணையிலிருந்து 15 நாள்களாக விநாடிக்கு 10,000 கனஅடி வீதம் மட்டுமே திறந்துவிடப்படுகிறது. இதனால், கல்லணையிலிருந்து காவிரி, வெண்ணாறு, கல்லணைக் கால்வாய் ஆகியவற்றில் மொத்தமே ஏறத்தாழ 6,000 கனஅடிக்குள்தான் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. 
கல்லணையிலிருந்து செவ்வாய்க்கிழமை மாலை நிலவரப்படி விநாடிக்கு காவிரியில் 1,802 கனஅடி யும், வெண்ணாற்றில் 1,800 கனஅடியும், கல்லணைக் கால்வாயில் 2,017 கனஅடியும் மட்டுமே தண்ணீர் திறந்துவிடப்படுகிறது. ஆறுகளில் தூர்வாரும் பணி, குடிமராமத்து பணி நடைபெறுவதால், இந்த 3 ஆறுகளிலும் தண்ணீர் குறைவாக விடப்படுகிறது. இதனால், காவிரி, வெண்ணாற்றில் நீரோட்டத்தின் வேகம் குறைவாக இருக்கிறது. 
இதனிடையே, இந்தக் குறைந்த அளவு தண்ணீர் காவிரியிலிருந்து அரசலாற்றிலும், வெண்ணாற்றிலிருந்து வெட்டாறு, குடமுருட்டியிலும் பிரித்து விடப்படுகிறது. எனவே, இந்த ஆறுகளில் தண்ணீர் செல்வதிலும் தாமதம் நிலவுகிறது. இதன் காரணமாகக் கடைமடைப் பகுதிக்கு மட்டுமல்லாமல், இடைப்பட்ட பகுதிகளுக்கே இன்னும் தண்ணீர் முழுமையாகச் சென்றடையாத நிலை தொடர்கிறது. 
காவிரியில், கல்லணையிலிருந்து 33-ஆவது கி.மீ. தொலைவில் உள்ள திருவையாறில் ஒரு ஓரமாகத்தான் தண்ணீர் செல்கிறது. கல்லணைக் கால்வாயில் கடைமடைப் பகுதிக்குச் சென்றாலும், பாசன வாய்க்கால்களில் பாயும் அளவுக்கு இல்லை. இதனால், மேட்டூர் அணை திறக்கப்பட்டு 15 நாள்களாகியும் வயல்களுக்குத் தண்ணீர் கிடைக்கவில்லை.
இதுகுறித்து தஞ்சை மாவட்ட காவிரி விவசாயிகள் பாதுகாப்புச் சங்கச் செயலர் சுவாமிமலை சுந்தர. விமல்நாதன் தெரிவித்தது: கல்லணையிலிருந்து தண்ணீர் திறந்துவிடப்பட்ட ஐந்தாவது நாளில் காவிரியில் 120 கி.மீ. தொலைவில் உள்ள கடைமடைப் பகுதியான பூம்புகாருக்குத் தண்ணீர் செல்வது வழக்கம். ஆனால், கல்லணையிலிருந்து 60 கி.மீ. தொலைவில் உள்ள சுவாமிமலைக்கே 7-ஆவது நாளில்தான் தண்ணீர் வந்தது. இன்னும் மயிலாடுதுறையை கூட சென்றடையவில்லை எனக் கூறப்படுகிறது. 
கொள்ளிடம் மூலம் வீராணத்துக்கு தண்ணீர் அனுப்புவதற்குக் காட்டும் ஆர்வத்தை டெல்டாவில் சாகுபடிக்குத் தண்ணீர் கொண்டு செல்வதில் காட்டவில்லை. தூர்வாரும் பணியை இப்போது செய்கின்றனர். இதற்காக தண்ணீர் குறைவாக விடுகின்றனர். காவிரி, வெண்ணாற்றில் குறைந்தது விநாடிக்கு தலா 5,000 கன அடி வீதம் தண்ணீர் திறந்துவிடப்பட்டால்தான் கடைமடைப் பகுதிக்குத் தண்ணீர் செல்லும் என்றார் விமல்நாதன்.
பொன்னவராயன்கோட்டை வா. வீரசேனன் தெரிவித்தது:
ஆறுகளில் தண்ணீர் வந்தாலும் பெயரளவுக்குத்தான் இருக்கிறது. கல்லணைக் கால்வாயில் கடைமடைப் பகுதிக்குத் தண்ணீர் சென்றாலும், பாசன வாய்க்கால்களில் பாயவில்லை. ராஜாமடம் வாய்க்கால், கல்யாண ஓடை, வடகால் வாய்க்கால் ஆகியவற்றில் தண்ணீர் சென்றாலும், தரையை ஒட்டியே ஓடுகிறது. பாசன வாய்க்கால்களில் தண்ணீர் பாய்ந்தால்தான் வயலுக்குத் தண்ணீர் கிடைக்கும். அதற்கு வாய்ப்பில்லாத நிலையே தொடர்கிறது. கல்லணையிலிருந்து கல்லணைக் கால்வாயில் விநாடிக்கு 4,000 கன அடி வீதம் தண்ணீர் திறந்துவிடப்பட்டால்தான், சாகுபடிக்குத் தண்ணீர் கிடைக்கும் என்றார் வீரசேனன்.
எனவே, மேட்டூர் அணை திறக்கப்பட்டால், தண்ணீர் கிடைக்கும் என எதிர்பார்த்த விவசாயிகளுக்கு ஏமாற்றமே மிஞ்சியுள்ளது. இதனால், சாகுபடிப் பணிகளைத் தொடங்குவதிலும் தாமதம் நிலவுகிறது.
மேலும், 150 முதல் 160 நாள்கள் வயதுடைய நீண்ட கால விதை நெல் ரகங்களை செப்டம்பர் முதல் வாரத்துக்குள் விதைத்தால்தான், அக்டோபர், நவம்பர் மாதங்களில் வடகிழக்குப் பருவ மழையால் ஏற்படும் பாதிப்பைத் தவிர்க்க முடியும். ஆனால், நீண்ட கால விதை ரகங்களை விதைப்பதற்கான கால அவகாசம் குறைந்து வருகிறது. நீண்ட கால விதை நெல் ரகங்கள் மீது மிகுந்த நம்பிக்கை வைத்துள்ள விவசாயிகள் தண்ணீர் வருமா என ஏக்கத்துடன் காத்துக் கிடக்கின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com