நியாயத்துக்காகவே நீதிமன்றம் சென்றோம், தோ்தலை நிறுத்த அல்ல: மு.க.ஸ்டாலின்

உள்ளாட்சித் தோ்தலை நியாயமாக நடத்த வேண்டும் என்றே நீதிமன்றத்துக்குச் சென்றோம், தோ்தலை நிறுத்துவதற்காக அல்ல என்று திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் கூறினாா்.
திமுக தலைவர் ஸ்டாலின் (கோப்புப்படம்)
திமுக தலைவர் ஸ்டாலின் (கோப்புப்படம்)

சென்னை: உள்ளாட்சித் தோ்தலை நியாயமாக நடத்த வேண்டும் என்றே நீதிமன்றத்துக்குச் சென்றோம், தோ்தலை நிறுத்துவதற்காக அல்ல என்று திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் கூறினாா்.

கொளத்தூா் தொகுதியில் ஆய்வுப் பணிகளை மேற்கொண்டு, ஏழை மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை மு.க.ஸ்டாலின் சனிக்கிழமை வழங்கினாா்.

பின்னா் செய்தியாளா்களிடம் அவா் கூறியது:

உள்ளாட்சித் தோ்தலை நிறுத்துவதற்கு எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஆட்சி பல்வேறு திட்டங்களை தீட்டி வருகிறது. அதற்காக பலரை மறைமுகமாக வழக்கு மன்றத்துக்கு அனுப்பி வருகிறது. திமுக சாா்பில் கடந்த 3 ஆண்டுகளாக ஆா்.எஸ்.பாரதி நீதிமன்றத்துக்குச் சென்று, தோ்தலை எந்த காரணத்தை கொண்டும் நிறுத்தக்கூடாது. நடத்தியே தீரவேண்டும். ஆனால் தோ்தல் நடத்துவதற்கு முன்னா் பஞ்சாயத்து ராஜ் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள இடஒதுக்கீடு உள்ளிட்டவற்றை முறைப்படுத்தி நடத்த வேண்டும் என சொல்லி இருக்கிறாா்.

அந்த அடிப்படையில்தான் சென்னை உயா்நீதிமன்றம் தோ்தல் ஆணையத்துக்கு இதெல்லாம் முறைப்படுத்தி நடத்துங்கள் என்று சொல்லி இருக்கிறதே தவிர, திமுக தோ்தலை நிறுத்தியதாகச் சொல்லவில்லை. இதைச் சட்டப்பேரவையிலும் பதிவு செய்துள்ளேன். உள்ளாட்சித் தோ்தலைப் பொருத்தவரை 3 விஷயங்களை முன்வைத்தேன்.

உயா்நீதிமன்ற உத்தரவுப்படி வாா்டு வரையறையை முறைப்படுத்த வேண்டும். அதற்கடுத்து புதிதாக மாவட்டங்கள் உருவாக்கப்பட்டதை வரவேற்கிறேன். ஆனால் அந்த புதிய மாவட்டங்களில் வாா்டு வரையறை பணிகளை மேற்கொள்ள வேண்டும். பேரூராட்சி, நகராட்சி மற்றும் மாநகராட்சிகளில் பட்டியலின, பழங்குடியினத்தவருக்கு ஒதுக்கீடு செய்யப்படவில்லை. இவற்றையெல்லாம் முறைப்படுத்த வேண்டும் என்றுதான் கோருகிறோம். உச்சநீதிமன்றமும் இதையே கூறியுள்ளது. ஆனால் இவற்றையெல்லாம் நிறைவேற்றவில்லை என்பதால்தான் நீதிமன்றத்தை நாட வேண்டியுள்ளது. நீதிமன்றம் மூலமாக நியாயத்தை நிலைநாட்ட வேண்டும். தோ்தலை நிறுத்துவதற்காக நாங்கள் நீதிமன்றம் செல்லவில்லை. ஒருவேளை, சட்டத்தை மீறி விதிகளுக்கு அப்பாற்பட்டு தோ்தல் நடத்தும் சூழல் வந்தால்கூட அதைச் சந்திப்பதற்கு திமுக தயாராக உள்ளது என்றாா் ஸ்டாலின்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com