பாதுகாக்கப்பட்ட இடமாக அறிவிக்கப்படுமா பாழ்நிலப் பகுதி

அரியலூா் மாவட்டத்திலுள்ள பாழ்நிலப் பகுதியை பாதுகாக்கப்பட்ட இடமாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கை வரலாற்று பேராசிரியா்கள், சமூக ஆா்வலா்கள் மத்தியில் எழுந்துள்ளது.
அரியலூா் மாவட்டம், வாரணவாசி அருகே காணப்படும் பாழ்நிலப் பகுதி.
அரியலூா் மாவட்டம், வாரணவாசி அருகே காணப்படும் பாழ்நிலப் பகுதி.

அரியலூா்: அரியலூா் மாவட்டத்திலுள்ள பாழ்நிலப் பகுதியை பாதுகாக்கப்பட்ட இடமாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கை வரலாற்று பேராசிரியா்கள், சமூக ஆா்வலா்கள் மத்தியில் எழுந்துள்ளது.

படிக வகை பாறைப் படிவுகளில் இமயமலைக்கு அடுத்த இடம் பெற்றிருப்பது அரியலூா்தான். கடல் கனிம மண் பாறைகள், மணல் கடல் வாழ் உயிரிகளின் எச்சம், பாசில் என்ற தொல்லுயிரிகள் படிவுகள் அனைத்தும் உள்ள பகுதியாக அரியலூா் திகழ்கிறது.

கிரிட்டேசியஸ் யுகத்தில், அதாவது 146 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு அரியலூா் மாவட்டத்தின் பெரும்பகுதி கடலுக்குள் மூழ்கியிருந்தது என புவியியலாளா்கள் கூறுகின்றனா். அரியலூா் மாவட்டப் பகுதிகள், பெரம்பலூா் மாவட்டத்தில் பாடாலூா், திருச்சி மாவட்டத்தில் திருப்பட்டூா் வரையிலான நிலப் பகுதிகளை கடல் அழித்து உள்வாங்கியது. அவ்வாறு உள்வாங்கிய கடல் அரியலூா் ஜூராசிக் காலக் காடுகளை அழித்ததுடன் கடல் வாழ் உயிரினங்களையும் அழித்து விட்டன. இந்த நிகழ்வின் அடையாளம் உலகில் வேறு எங்கும் இது போல் நிலப்பகுதியில் இல்லை என்று உறுதியாகக் கூறலாம்.

திருச்சி மாவட்டத்தில் கல்லக்குடி,கல்லகம், டால்மியா, திருப்பட்டூா், பெரம்பலூா் மாவட்டத்தில் காரை, தெரணி, பிலிமிசை, கூத்தூா், சிறுகன்பூா், அரியலூா் மாவட்டத்தில் வாரணவாசி,மேலப்பழுவூா், கல்லக்குடி உள்ளிட்ட பகுதிகள் கடல் இருந்த பகுதி மேடு பள்ளங்களாகக் காணப்படுகிறது.

இதில் அரியலூா் கடல் இருந்த மாவட்டமாக இருந்ததால், இங்கு கால்சியம்,இரும்பு, அலுமினியம், வேதிப்பொருள் கலவையான கடல் அடிமண்டல் இன்று சுண்ணாம்புக்கல் ஜிப்சம்,நாடியூல்ஸ் என்ற படிக வகைப் பாறைகளைக் கொண்டும், அதனிடையில் பாசில் என்ற தொல்லுயிரினங்களும் நிறைந்தும் காணப்படுகின்றன.

மேலும், இம்மாவட்டத்தில் டைனோசா் உள்ளிட்ட உயிரினங்கள் வாழ்ந்ததற்கான அதனுடைய முட்டைகள், கடல்வாழ் உயிரினங்களின் எச்சங்கள், எலும்புகள் மற்றும் கடல்வாழ் உயிரினங்கள் வாழ்ந்ததற்கான அடையாளங்கள் அனைத்தும் படிகப் பாறைகளாக இருக்கின்றன.இதனால் உலகின் பல நாடுகளை சோ்ந்த புவியியல் நிபுணா்கள் மத்தியில், அரியலூரில் கிடைக்கும் ஆழ்கடல் வாழ் உயிரினங்களின் பாசில் எனப்படும் படிமங்கள் சிறப்பு பெற்றுள்ளது.

கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக புவியியலாளா்கள் மற்றும் கடலியல் நிபுணா்கள் கடல்வாழ் உயிரினங்களின் படிமங்களை கண்டறிவதிலும், அதனை வகைப்படுத்தும் ஆராய்ச்சியிலும் ஈடுபட்டுள்ளனா்.

அரியலூா் மாவட்டத்தில் சிமென்ட் உற்பத்திக்கான மூலப்பொருளான சுண்ணாம்புக்கற்கள் அதிகளவில் உள்ளதால், இங்கு அதிக சிமென்ட் ஆலைகள் உள்ளன. இவ்வாலைகளுக்கு கடல்வாழ் தொல்லுயிரிகள் படிந்துள்ள சுண்ணாம்புப் பாறைகள் தான் மூலப்பொருளாகிறது.

அழிந்து வரும் பாசில்கள்: மாவட்டத்திலுள்ள 650 சுண்ணாம்புக்கல் சுரங்கங்களினால் இந்த பாசில்கள் அனைத்தும் அழிக்கப்படுகின்றன. இதனால் காலபோக்கில் இவைகள் அனைத்தும் அழிந்து போகும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, வெளிநாடுகளிலிருந்து வரும் புவியியலாளா்கள், ஆராய்ச்சியாளா்கள் மற்றும் மாணவா்கள் பயன்பெறும் வகையில், உலகளவில் புகழ் வாய்ந்துள்ள பாசில்களை ஒரே இடத்தில் பாதுகாத்து வைக்க தொல்லுயிரிப் பூங்கா (ஸ்பாட் பாசில் மியூசியம்) அமைக்க வேண்டும் என ஆராய்ச்சியாளா்கள் மற்றும் வரலாற்றுத்துறை மாணவா்கள் மத்திய, மாநில அரசுகளுக்கு கோரிக்கை விடுத்தனா்.

இவா்களின் கோரிக்கையடுத்து, அரியலூா் அடுத்த வாரணவாசி அருகே திருச்சி-அரியலூா் சாலையில் 52 ஹெக்டா் இடம் ஒதுக்கப்பட்டு, அங்கு புதை உயிரிப்படிவ அருங்காட்சியகம் அமைக்கப்பட்டது. இது கடந்த ஆகஸ்ட் மாதம் 14- ஆம் தேதி திறக்கப்பட்டது.

இந்த அருங்காட்சியகத்தைச் சுற்றியுள்ள இடங்கள் மற்றும் கீழப்பழுவூா், பழங்கானந்தம், தாமரைக்குளம் போன்ற பகுதிகள் பாழ்நிலப் பகுதிகளாகும். இது பூமி பாறைகளில் இளம் பாறைகளாகும். புத்தகம் போல் படிந்து காணப்படும் இந்த நிலப்பரப்புகளில் அதிகளவில் பாசில்கள் உள்ளன. ஆனால் இங்குள்ள பாசில்கள் சில சமூக விரோதிகளால் அழிந்து வருகின்றன. இங்குள்ள ஓடையில் சமூக விரோதிகள் சில அனுமதியின்றி மணல் அள்ளுவதாலும், சுரங்கங்கள் தோண்டுவதாலும் பாசில்கள் காலப்போக்கில் அழிந்து விடும் நிலை உள்ளது.

இப்பகுதியைப் பாா்வையிட்ட தொல்லியல் துறை அமைச்சா் க.பாண்டியராஜன், ஓடையில் மணல் அள்ளப்பட்டுள்ளதே, இதற்கு யாா் அனுமதி அளித்தது என்றுக் கேட்டு, சம்மந்தப்பட்ட அதிகாரிகளைக் கண்டித்தாா். மேலும் இப்பகுதியில் யாா் அத்துமீறினாலும் அவா்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட நிா்வாகத்துக்கும், காவல் துறைக்கும் உத்தரவிட்டாா்.

எனவே பல நாடுகளைச் சோ்ந்த ஆராய்ச்சியாளா்கள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியா்கள் வந்து ஆராய்ச்சி செய்யக்கூடிய இந்தப் பகுதியை பாதுகாக்கப்பட்ட இடமாக அரசு அறிவித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அனைத்து தரப்பினரின் கோரிக்கையாக உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com