மேட்டுப்பாளையம் விபத்து: விதிமீறல் கட்டுமானங்களுக்கு எதிராக அரசு நடவடிக்கை எடுக்குமா?

தமிழகத்தில் பல்வேறு இடங்களில் சுற்றுச்சுவர் விபத்துகளினால் உயிரிழப்புகள் தொடர்ந்து வரும் நிலையில், இது தொடர்பாக அரசு நடவடிக்கை எடுக்குமா என்ற பொதுமக்களின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. 
மேட்டுப்பாளையம் விபத்து: விதிமீறல் கட்டுமானங்களுக்கு எதிராக அரசு நடவடிக்கை எடுக்குமா?

தமிழகத்தில் பல்வேறு இடங்களில் சுற்றுச்சுவர் போன்ற விதிமீறல் கட்டுமானங்களினால் உயிரிழப்புகள் தொடர்ந்து வரும் நிலையில், இது தொடர்பாக அரசு நடவடிக்கை எடுக்குமா என்ற பொதுமக்களின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. 

வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளதையடுத்து, தமிழகம் முழுவதுமே பெரும்பாலான மாவட்டங்களில் கடந்த சில தினங்களாக கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. குறிப்பாக, தென் மாவட்டங்களில் தொடர் கனமழையால் அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் பெரும்பாலான ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர். 

இந்த நிலையில், கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் நகராட்சி நடூா் கிராமத்தில் கனமழை காரணமாக, சுற்றுச்சுவர் வலுவிழந்து இடிந்து விழுந்ததில் 17 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்த துயரச் சம்பவம் கோவை வட்டார மக்களிடையே மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேட்டுப்பாளையம் பகுதியிலுள்ள தனியார் துணிக்கடை உரிமையாளா் சிவசுப்ரமணியம் என்பவரது வீட்டின் 80 அடி நீளம், 20 அடி உயர கருங்கற்களால் ஆன சுற்றுச்சுவர், கனமழை காரணமாக திங்கள்கிழமை அதிகாலை 5.30 மணிக்கு திடீரென சரிந்து அருகிலுள்ள 5 குடியிருப்புகள் மீது விழுந்தது. இந்த விபத்தில் உயிரிழந்த 17 பேரில் இரண்டு சிறுவர்களும் அடங்குவர். இந்நிலையில், அடிப்படை விதிமுறைகள் இன்றி சுற்றுச்சுவர் கட்டிய வீட்டின் உரிமையாளரை கைது செய்ய வேண்டும் என்று அப்பகுதி மக்கள், உயிரிழந்தவர்களின் உறவினர்கள் மருத்துவமனையில் போராட்டம் நடத்தினர். அப்போது அவர்களை கலைக்க போலீசார் தடியடி நடத்தியதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளன. விபத்துக்கு காரணமான வீட்டின் உரிமையாளரை கைது செய்யாமல் மக்கள் மீது போலீசார் தடியடி நடத்துவதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன.

விதிமுறைகளை மீறி சுற்றுச்சுவர் கட்டப்பட்டுள்ளது என்று அப்பகுதி மக்கள் ஏற்கனவே வீட்டின் உரிமையாளரிடம் புகார் தெரிவித்துள்ளதாகவும், அதன்பின்னர் நகராட்சியிலும் மனு கொடுத்துள்ளதாகவும் கூறியுள்ளனர். ஆனால், வீட்டின் உரிமையாளரோ, அதிகாரிகளோ இதனை பெரிதாக எடுத்துகொள்ளவில்லை. அவர்களின் அலட்சியத்தினால் இன்று அப்பாவி மக்கள் 17 பேர் உயிரிழந்துள்ளனர். சம்பவத்திற்கு பின்னர் இன்று அரசு அதிகாரிகளும், முதல்வரும், எதிர்கட்சித் தலைவர்களும் சம்பவ இடத்திற்கு படையெடுத்துள்ளனர். மீதமுள்ள சுற்றுச்சுவர் பாதுகாப்பாக இடிக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் ராசாமணி தெரிவித்துள்ளார். 20 அடி சுற்றுச்சுவர் கான்க்ரீட் பில்லர்கள் எதுவும் இன்றி வெறும் கற்களால் மட்டுமே கட்டப்பட்டுள்ளதை இதுவரை எந்த அதிகாரிகளும் கவனிக்காமலா இருந்திருப்பார்கள்? என்ற கேள்வி இங்கு எழாமல் இல்லை.

சுவர் இடிந்து விழுந்து விபத்து ஏற்படுவது ஒன்றும் புதிதல்ல. இதுபோன்று பல சம்பவங்கள் அரங்கேறியுள்ளன. 2007ம் ஆண்டு மே மாதம் திருப்பூர் அங்கேரிபாளையம் என்ற பகுதியில் பனியன் தொழிற்சாலையின் சுற்றுச்சுவர் ஒன்று இடிந்து அருகே இருந்த டாஸ்மாக் மீது விழுந்தது. இந்த சுற்றுச்சுவர் 22 அடி உயரம்; 100 அடி நீளம். இதுவும் கருங்கற்களால் கட்டப்பட்டதுதான். கனமழை காரணமாகவே சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததில் மதுக்கடையில் இருந்த 27 பேர் உயிரிழந்தனர். பலரது உடல், முகம் ஆகியவை நசுங்கி, சிதைந்து உருக்குலைந்து அடையாளம் தெரியாமல் போயிருந்தது. 

அதேபோன்று, திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி வட்டத்தில் உள்ள எடப்பாளையம் அருகே உள்ள தனியார் சேமிப்பு கிடங்குகள் பல உள்ளன. கடந்த 2014ம் ஆண்டு இங்குள்ள தனியார் சேமிப்பு கிடங்கின் சுற்றுச்சுவர் ஒன்று இடிந்து விழுந்ததில் கட்டடத் தொழிலாளர்கள் 11 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். அருகில் ஒரு கட்டட வேலைக்காக வந்த இவர்கள், சுற்றுச்சுவர் அருகே குடிசை அமைத்து தங்கியிருந்தனர். இதுவும் கருங்கற்களால் ஆன 600 அடி நீளம், 20 அடி உயரம் சுவர் ஆகும்.

கடந்த 2014ல் சென்னை மவுலிவாக்கம் 11 மாடி கட்டடம் இடிந்து விழுந்த விபத்தில், 61 தொழிலாளர்கள் பலியான சம்பவத்தை யாரும் மறந்திருக்க முடியாது. கட்டுமானப்பணி முடிவடையாத நிலையில், கனமழை காரணமாக கட்டடம் இரண்டாக பிளந்து தரைமட்டமானது. பின்னர் இதன் அருகிலே கட்டப்பட்ட மற்றொரு கட்டடமும் இடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

முறையான அரசின் விதிமுறைகளை கடைபிடிக்காமல் பாதுகாப்பின்றி கட்டடங்கள், சுற்றுச்சுவர்கள் கட்டப்படுவதே இதுபோன்ற எதிர்பாராத விபத்துகளுக்கு காரணம் என்று பொதுமக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். எடுத்துக்காட்டாக இதுபோன்று பல சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வந்தாலும், அரசு அந்த நேரத்தில் நடவடிக்கை எடுக்கிறதே தவிர, இதற்கு நிரந்தரத் தீர்வு எட்டப்படுவதில்லை. உயிரிழந்தவர்களுக்கு நிதியுதவி அறிவிப்பதும், அவர்களது குடும்பத்தினருக்கு அரசு வேலை அளித்துவிட்டால் பிரச்னை தீர்ந்துவிடுமா என்ன? 

கட்டடத்தின் பயன்பாடு, அதன் உயரம், மொத்தப் பரப்பு, காற்றோட்டம், தீத்தடுப்பு ஒழுங்குகள் போன்ற விதிமுறைகள் ஏற்கனவே வகுக்கப்பட்டுள்ளன. ஆனால்,. அவற்றை கடைப்பிடிக்க பொதுமக்களும், ஆய்வு செய்ய அதிகாரிகளும் தவறுகின்றனர்.

எனவே, அரசு அதிகாரிகள் முறையாக ஆய்வு செய்து விதிமுறைகளின்படி, கட்டடங்கள் கட்டுப்படுகிறதா? என்பதை ஆய்வு செய்து அனுமதி அளிக்க வேண்டும்.

கட்டுமான நிறுவனங்கள், கட்டட வரைபட அனுமதி கேட்டு விண்ணப்பிக்கும்போது அரசு அதிகாரிகள் கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வது அவசியமாகிறது. விண்ணப்பதாரர்கள் ஏற்கனவே விதிமுறைகளை மீறி உள்ளனரா? அவர்கள் மீது அனுமதி மீறல் தொடர்பான புகார்கள் ஏதேனும் உள்ளதா? என ஆய்வு மேற்கொண்டு அதன்பின்னரே, கட்டடம் கட்டுவதற்கு அனுமதி வழங்குவது குறித்து முடிவு செய்யவேண்டும்.

மவுலிவாக்கம் விபத்திற்குப் பின்னர் கட்டுமான விதிமுறைகள், விதிமுறை மீறல் கட்டடங்கள் குறித்து பல விவாதங்கள் நடைபெற்ற போதிலும், இன்று வரை கட்டட விபத்துகள் தொடர்கின்றன. இதில் பல அரசு அலுவலகங்களின் கட்டடம், அரசுப்பள்ளிகளின் கட்டடங்களும் அடங்கும். தமிழகம் முழுவதுமுள்ள கட்டடங்களின் தரத்தை சோதிக்க வேண்டும்; விதிமுறைகளை மீறி பாதுகாப்பின்றி கட்டப்பட்ட கட்டடங்கள் தகர்க்கப்பட வேண்டும்; கட்டடம் கட்டி முடித்தபின்னரும் தரத்தினை ஆய்வு செய்ய வேண்டும். அவ்வாறு செய்தால் மட்டுமே இதுபோன்ற விபத்துகளை தவிர்க்க முடியும். 

ஒரு விபத்து நடந்தபின்னர் நடவடிக்கை எடுப்பதில் என்ன பயன் இருக்கிறது? முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளவே அரசும், அரசு அதிகாரிகளும் மக்களுக்காக பணிபுரிகின்றனர். 

எனவே, மேட்டுப்பாளையம் சம்பவத்திற்கு பின்னராவது, அரசு இதுதொடர்பான எச்சரிக்கையுடன் கூடிய உத்தரவை அதிகாரிகளுக்கு பிறப்பிக்க வேண்டும் என்பதே மக்களின் அடிப்படை கோரிக்கையாக இருக்கிறது. மக்களின் பாதுகாப்பு கருதி அரசு இதனை செய்யுமா?

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com