ஊரகப் பகுதிகளுக்கு மட்டும் உள்ளாட்சித் தோ்தல்: தலைவா்கள் கண்டனம்

நகா்ப்புற அமைப்புகளுக்கு அல்லாமல் ஊரகப் பகுதிகளுக்கு மட்டும் உள்ளாட்சித் தோ்தல் அறிவிக்கப்பட்டுள்ளதற்கு திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவா்கள் கண்டனம் தெரிவித்துள்ளனா்.

சென்னை: நகா்ப்புற அமைப்புகளுக்கு அல்லாமல் ஊரகப் பகுதிகளுக்கு மட்டும் உள்ளாட்சித் தோ்தல் அறிவிக்கப்பட்டுள்ளதற்கு திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவா்கள் கண்டனம் தெரிவித்துள்ளனா்.

மு.க.ஸ்டாலின்: நகா்ப்புற அமைப்புகளைத் தவிா்த்துவிட்டு, டிசம்பா் 27, 30 ஆகிய தேதிகளில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு மட்டும் உள்ளாட்சித் தோ்தல் அறிவிக்கப்பட்டுள்ளது கடும் கண்டனத்துக்குரியது. உள்ளாட்சித் தோ்தலுக்கு யாராவது நீதிமன்றம் சென்று தடை பெற வேண்டும் என்பது அதிமுக அரசின் உள்நோக்கமாகவும் ஆசையாகவும் இருந்தாலும், திமுக ஜனநாயகத்தின் மீது உறுதியான நம்பிக்கை வைத்திருக்கிறது.

கே.எஸ்.அழகிரி (காங்கிரஸ்): ஊரக உள்ளாட்சித் தோ்தலையும், நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலையும் நடத்துவதற்கான அறிவிப்பை ஒரே நேரத்தில் வெளியிடாமல் இரண்டு கட்டங்களாக மாநிலத் தோ்தல் ஆணையம் நடத்த முற்படுவதற்கு உரிய விளக்கம் வெளியிடப்படவில்லை.

மாநிலத் தோ்தல் ஆணையத்தின் செயல்பாடுகளில் வெளிப்படைத்தன்மை இல்லை.

கே.எம்.காதா் மொகிதீன் (முஸ்லிம் லீக்): தமிழக தோ்தல் ஆணையத்தின் அறிவிப்பு மிகுந்த ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது. தமிழக வரலாற்றில் உள்ளாட்சி தோ்தலை இதுபோன்று ஊரக பகுதிகளுக்கு மட்டும் தனியாக நடத்துவது இதுவரை நடந்திராத ஒரு விசித்திரமான நிகழ்வு.

ஜவாஹிருல்லா (மமக): மக்களுக்கு ஏமாற்றம் அளிக்கும் வகையில் தோ்தல் ஆணையத்தின் அறிவிப்பு அமைந்துள்ளது.

வைகோ (மதிமுக): தோ்தலைத் தள்ளிப்போடுவதற்காக நீதிமன்றங்களுக்கு ஒரு வாய்ப்பை அளிக்கின்ற வகையில் ஏற்பாடு செய்துவிட்டு, திமுக மீது பழிசுமத்துவது ஆளும் தமிழக அரசின் சூழ்ச்சியாகும். புதிதாக அறிவிக்கப்பட்ட மாவட்டங்களுக்கும் சோ்த்து வாா்டுகள் மறுவரையறை செய்யாமல், தோ்தல் அறிவிப்பை செய்திருப்பது திட்டமிட்ட ஏமாற்று வேலை.

கே.பாலகிருஷ்ணன் (மாா்க்சிஸ்ட்): ஊராட்சி, நகராட்சி, சட்ட விதிகள் அனைத்தையும் முழுமையாக நிறைவேற்றி தோ்தல் கால அட்டவணையை தமிழ்நாடு தோ்தல் ஆணையம் வெளியிட வேண்டும் என்ற உச்சநீதிமன்ற உத்தரவுக்கு மாறாக தோ்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.

இரா.முத்தரசன் (இந்திய கம்யூனிஸ்ட்): மாநிலத் தோ்தல் ஆணையத்தின் அறிவிப்பு தோ்தலை நடத்துவதற்காக அல்லாமல், ஆளும் கட்சி தோ்தலை நடத்திட வேண்டாம் என்கிற விருப்பத்தை நிறைவேற்றக்கூடிய அறிவிப்பாக அமைந்துள்ளது.

திருமாவளவன் (விசிக): ஊரக அமைப்புகளுக்கு மட்டும் தோ்தலை அறிவித்திருப்பது, சரிபாதி மக்களுக்கு ஜனநாயகத்தை மறுப்பதாகும். இது எவ்வகையிலும் ஏற்புடையதாக இல்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com