Enable Javscript for better performance
தனிக்கொடி, தனிச்சின்னத்துடன் தனிநாடு அமைத்த நித்யானந்தா!- Dinamani

சுடச்சுட

  

  தனிக்கொடி, தனிச்சின்னத்துடன் தனிநாடு அமைத்த நித்யானந்தா!

  By DIN  |   Published on : 04th December 2019 10:49 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  nithyananda1

   

  மத்திய லத்தீன் அமெரிக்காவின் ஈக்வடாரில் உள்ள தீவை நித்யானந்தா வாங்கியுள்ளதாக உறுதிபடுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன. அதனை தனிக்கொடி, தனிச்சின்னம் உள்ளிட்டவற்றுடன் ‘கைலாசா’ என்று பெயரிட்டு தனிநாடாக உருவாக்கியுள்ளதாக அவரது ஆசிரமம் நடத்திவரும் வலைத்தளத்தின் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

  நித்யானந்தா தனது யூடியூப் சேனலில் செவ்வாய்க்கிழமை மாலை நேரலையில் ட்ரினிடாட் மற்றும் டொபாகோவுக்கு அருகிலுள்ள ஒரு தீவில் இருந்து “பரமசிவன் ஞானம்” மற்றும் “பரமசிவ விஞ்ஞானம்” பற்றிய சொற்பொழிவை நிகழ்த்தினார். நித்தியானந்தாவின் கடவுச்சீட்டு காலாவதியான போதிலும், எவ்வாறு நாட்டை விட்டு வெளியேற முடிந்தது என்று போலீஸார் விசாரிக்கையில், அதிர்ச்சியூட்டும் வகையில், மத்திய லத்தீன் அமெரிக்காவின் ஈக்வடாரில் உள்ள தீவை நித்யானந்தா வாங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

  அவரது ஆசிரமம் நடத்திவரும் வலைத்தளத்தின் மூலம் ‘கைலாசா’ என்று பெயரிடப்பட்ட இந்த தனித் தீவை நித்யானந்தா உருவாக்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அதற்கென சொந்தக் கொடி அமைத்து அதை ரிஷப துவஜா என்று பெயரிடப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் கடவுச்சீட்டு மற்றும் இமயமலையில் நந்தியுடன் நித்தியானந்தா இருப்பது போன்று சின்னம் உருவாக்கப்பட்டு, இது ஒரு இந்து நாடு என்று குறிப்பிட்டுள்ளது.

  "தங்கள் சொந்த நாடுகளில் இந்து மதத்தை பின்பற்றுவதற்கான உரிமையை இழந்து உலகெங்கிலும் இருந்து வெளியேற்றப்பட்ட இந்துக்களால் உருவாக்கப்பட்ட எல்லைகள் இல்லாத நாடு" என்று இது விவரிக்கப்பட்டுள்ளது.

  இந்த புதிய நாட்டில் கோயில் சார்ந்த சுற்றுச்சூழல் அமைப்பு, மூன்றாம் கண்ணுக்கு பின்னால் உள்ள அறிவியல், யோகா, தியானம், குருகுலக் கல்விமுறை, உலகளாவிய இலவச சுகாதார அமைப்பு, இலவசக் கல்வி, இலவச உணவு மற்றும் அனைவருக்கும் கோயில் சார்ந்த வாழ்க்கை முறை வழங்கப்படும் என்று அந்த வலைத்தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த நாட்டின் மொழிகளாக ஆங்கிலம், சமஸ்கிருதம் மற்றும் தமிழ் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

  இதையடுத்து, வாங்கிய நிலத்தை அல்லது ஒரு தீவை ‘தனி நாடாக’ அறிவிப்பது ‘நகைச்சுவையல்ல’ என்று மத்திய வெளிவிவகாரத்துறை அமைச்சக வட்டாரங்கள் சுட்டிக்காட்டின. "மற்ற நாடுகள் இதை ஒரு நாடாக ஏற்றுக்கொள்ள வேண்டும், ஐக்கிய நாடுகள் சபையும் அதை அங்கீகரிக்க வேண்டும். எனவே இதை பெரிதாக எடுத்துக் கொள்ள வேண்டிய அவசியமில்லை” என்று தெரிவித்துள்ளது.

  நித்யானந்தாவின் வலைத்தளத்தை புலனாய்வு அமைப்புகள் கடந்த சில வாரங்களாக உன்னிப்பாக கண்காணித்து வருகின்றன. “இது 2018 இல் உருவாக்கப்பட்டது மற்றும் சில மாதங்களுக்கு முன்பு புதுப்பிக்கப்பட்டது. அமெரிக்காவின் டெக்ஸாஸின் டல்லாஸுக்கு அருகே இதன் பயன்பாடு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது” என்று புலனாய்வு வட்டாரங்கள் தெரிவித்தன.

  முன்னதாக, குஜராத்தில் நித்யானந்தா நடத்தும் ஆசிரமத்தில் உள்ள தனது இரண்டு மகள்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய அரசிடம் விரைவில் புகார் அளிக்க உள்ளதாக பெங்களூருவைச் சேரந்த ஜனார்த்தன ஷர்மா தெரிவித்தார். இதுதொடர்பாக அவர் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது,

  லோபமுத்ரா (21) மற்றும் நந்திதா (18) ஆகிய எனது இரு மகள்களையும் மீட்க முடியவில்லை. அவர்கள் வலுக்கட்டாயமாக அங்கு அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். எனது மகள்கள் உள்பட பல்வேறு பெண்கள் வெளிநாட்டுக்கு கடத்திச் செல்லப்பட்டுள்ளதாக அறிகிறேன்.

  இது தொடர்பாக போலீஸார் விசாரணை நடத்த வேண்டும். மத்திய அரசு உடனடியாக இந்த விவகாரத்தில் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். இது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகம், வெளியுறவுத் துறை அமைச்சகத்தில் புகார் அளிக்கவுள்ளேன் என்றார். 

  இதனிடையே குஜராத் உயர் நீதிமன்ற உத்தரவுப்படி, நித்யானந்தா ஆசிரமத்தில் குஜராத் புலனாய்வுத்துறை அதிகாரிகள் சனிக்கிழமை தீவிர சோதனை நடத்தினர். ஆசிரமத்தின் மேலாளர்கள் உட்பட அங்கிருந்தவர்களிடமும் விசாரணை மேற்கொண்டனர். அப்போது அங்கு நித்யானந்தா இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

  தொடர் புகார் காரணமாக குஜராத் மாநிலம் ஹீராபூரில் உள்ள நித்யானந்தா நடத்தும் ஆசிரமத்தை, மாவட்ட நிர்வாகம் அதிரடியாக மூடி திங்கள்கிழமை நடவடிக்கை எடுத்துள்ளது. இதையடுத்து ஆசிரமதத்தில் இருந்த அனைவரும் உடனடியாக வெளியேற்றப்பட்டனர். தனியார் பள்ளியில் நித்யானந்தா ஆசிரமம் சட்டவிரோதமாக செயல்பட்டு வந்ததாகவும் புகார் அளிக்கப்பட்டுள்ளது. 

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai