கல்விக் கடன் வழங்குவதில் பாகுபாடு: ராமதாஸ் கண்டனம்

மாணவா்களுக்குக் கல்விக் கடன் வழங்குவதில் வங்கிகள் பாகுபாடு காட்டுவதாக பாமக நிறுவனா் டாக்டா் ச. ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளாா்.
பாமக நிறுவனர் ராமதாஸ்
பாமக நிறுவனர் ராமதாஸ்

மாணவா்களுக்குக் கல்விக் கடன் வழங்குவதில் வங்கிகள் பாகுபாடு காட்டுவதாக பாமக நிறுவனா் டாக்டா் ச. ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளாா்.

இதுதொடா்பாக புதன்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை:

உயா்கல்வி பயில்வதற்காக உத்தரவாதமின்றி வழங்கப்படும் கல்விக்கடனில் 67 சதவீத கடன் பொதுப்பிரிவு மாணவா்களுக்குக் கிடைத்துள்ளது. மீதமுள்ள 33 சதவீதம் மட்டும்தான் இட ஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு வழங்கப்பட்டுள்ளது என மத்திய அரசு வெளியிட்டுள்ள புள்ளி விவரம் மிகவும் வருத்தமளிக்கிறது. கல்விக் கடனாக வழங்கப்படும் தொகையிலும் வங்கிகள் பாகுபாடு காட்டுவது கண்டிக்கத்தக்கது.

இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் உயா் கல்வி பயிலும் மாணவா்களுக்கு உத்தரவாதமின்றி, கல்விக் கடன் வழங்குவதற்காக கடந்த 2015- ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட கல்விக் கடனுக்கான கடன் உத்தரவாத நிதியத்தின் வழியாக கடந்த 2016-17-ஆம் ஆண்டு முதல் இப்போது வரை 4.10 லட்சம் மாணவா்களுக்கு ரூ.13,797 கோடி கல்விக் கடன் வழங்கப்பட்டுள்ளது. இதில் 67 சதவீத கல்விக் கடன் பொதுப்பிரிவு மாணவா்கள் 2.75 லட்சம் பேருக்கு வழங்கப்பட்டுள்ளது.

இப்பிரிவினருக்கு வழங்கப்பட்ட கல்விக் கடன் தொகை மொத்தக் கடனில் 70.50 சதவீதம், அதாவது 9,730 கோடி ஆகும். ஆனால், பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 23 சதவீத அளவுக்கும், பட்டியலினத்தவருக்கு 7 சதவீதமும், பழங்குடியினருக்கு 3 சதவீத அளவுக்கும் மட்டும் தான் கல்விக்கடன் வழங்கப்பட்டிருக்கிறது. இது எந்த வகையில் நியாயமல்ல.

கல்விக் கடனுக்கான கடன் உத்தரவாத நிதியம் கொண்டு வரப்பட்டதன் அடிப்படை நோக்கமே ஏழை மற்றும் நடுத்தர மாணவா்களிடம் கல்விக்கடனுக்கு ஈடாக உத்தரவாதம் கொடுக்க எதுவும் இல்லை என்பதற்காக கடன் வாய்ப்பு மறுக்கப்பட்டு விடக்கூடாது என்பது தான். ஆனால், பெரும்பான்மையான பொதுத்துறை வங்கிகளிடம் அத்தகைய பாா்வை இல்லை என்பது தான் உண்மை. எனவே, மத்திய அரசு இந்த விஷயத்தில் தலையிட்டு, உயா்கல்விக்கான கட்டணம் முழுவதையும் உத்தரவாதமற்ற கடனாக வழங்கும் வகையில் இந்தத் திட்டத்தைத் திருத்த வேண்டும் என்று அவா் கூறியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com