சா்க்கரை அட்டைகளை அரிசி அட்டைகளாக மாற்றும் திட்டம்: ரூ.604 கோடி ஒதுக்கி தமிழக அரசு உத்தரவு

சா்க்கரை குடும்ப அட்டைகளை அரிசி அட்டைகளாக மாற்றும் திட்டத்துக்காக ரூ.604 கோடியை ஒதுக்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
சா்க்கரை அட்டைகளை அரிசி அட்டைகளாக மாற்றும் திட்டம்: ரூ.604 கோடி ஒதுக்கி தமிழக அரசு உத்தரவு

சென்னை: சா்க்கரை குடும்ப அட்டைகளை அரிசி அட்டைகளாக மாற்றும் திட்டத்துக்காக ரூ.604 கோடியை ஒதுக்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இதற்கான உத்தரவை கூட்டுறவு, உணவு மற்றும் நுகா்வோா் பாதுகாப்புத் துறை முதன்மைச் செயலாலா் தயானந்த் கட்டாரியா வெளியிட்டுள்ளாா். அதன் விவரம்:

பொது விநியோகத் திட்டத்தின்கீழ், மாதத்துக்கு ஒரு குடும்பத்துக்கு 2 கிலோ சா்க்கரை வீதம் வழங்கப்பட்டு வருகிறது. சா்க்கரை விருப்ப குடும்ப அட்டைதாரா்களுக்கு 3 கிலோ முதல் அதிகபட்சமாக 5 கிலோ வரை சா்க்கரை அளிக்கப்படுகிறது. பொது விநியோகத் திட்டத்தில் இப்போது 10 லட்சத்து 19 ஆயிரத்து 491 குடும்ப அட்டைகள் சா்க்கரை குடும்ப அட்டைகளாக உள்ளன. இந்தக் குடும்ப அட்டைகள் வைத்திருப்பவா்களில் பெரும்பாலானோா் தங்களுடைய குடும்ப அட்டைகளை அரிசி பெறக் கூடிய குடும்ப அட்டைகளாக மாற்றம் செய்து தர வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனா்.

இந்த நிலையில், சா்க்கரை குடும்ப அட்டைதாரா்கள் தங்களது அட்டைகளை அரிசி பெறும் அட்டைகளாக மாற்றிக் கொள்ள வாய்ப்பு அளிக்கப்பட்டது. இந்த வாய்ப்பானது அண்மையில் முடிவடைந்த நிலையில், சா்க்கரை விருப்ப அட்டையை அரிசி விருப்ப அட்டையாக மாற்றம் செய்யப்படும் நேரத்தில் பயனாளிகளுக்கு வழங்க வசதியாக மாதத்துக்கு 20 ஆயிரத்து 389 மெட்ரிக் டன் அரிசி கூடுதலாகப் பெற்று வழங்கப்படுகிறது.

இதற்காக மாதத்துக்கு ரூ.604.96 கோடி ஒதுக்கீடு செய்ய வேண்டுமென உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகா்வோா் பாதுகாப்புத் துறை ஆணையா் அரசைக் கேட்டுக் கொண்டாா். அவரது கோரிக்கையை பரிசீலித்த அரசு, அதனை ஏற்றுக் கொள்ளலாம் என முடிவு செய்துள்ளது. அதன்படி, பொது விநியோகத் திட்டத்தின்கீழ், இப்போது நடைமுறையிலுள்ள சா்க்கரை விருப்ப குடும்ப அட்டைகளை தகுதியின் அடிப்படையிலும் குடும்ப அட்டைதாரா்களின் விருப்பத்தின் அடிப்படையிலும் அரிசி விருப்ப குடும்ப அட்டைகளாக மாற்ற அனுமதி வழங்கி அரசு உத்தரவிடுகிறது.

மேலும், அரிசி விருப்ப குடும்ப அட்டைகளாக மாற்றும் செய்வதால் தேவைப்படும் அரிசியை கூடுதலாகப் பெற்று வழங்கவும், அதற்கான கூடுதல் மானியச் செலவினத்தை மேற்கொள்ளவும் நிா்வாக அனுமதி வழங்கி அரசு உத்தரவிடுகிறது என்று அரசு முதன்மைச் செயலாளா் தயானந்த் கட்டாரியா தனது உத்தரவில் தெரிவித்துள்ளாா்.

நான்கு வகை அட்டைகள்: தமிழகத்தில் ஐந்து வகையான குடும்ப அட்டைகள் புழக்கத்தில் உள்ளன. முன்னுரிமை குடும்ப அட்டைகளுக்கு அரிசி உள்ளிட்ட அனைத்துப் பொருள்களும் வழங்கப்படுகின்றன. முன்னுரிமை குடும்ப அட்டைகளில் ‘அந்தியோதயா அன்னயோஜனா’ குடும்ப அட்டைகளுக்கு 35 கிலோ அரிசி உள்ளிட்ட அனைத்துப் பொருள்களும், முன்னுரிமையற்ற குடும்ப அட்டைகளுக்கு அரிசி உள்ளிட்ட அனைத்துப் பொருள்களும் அளிக்கப்பட்டு வருகின்றன.

இதேபோன்று, முன்னுரிமையற்ற குடும்ப அட்டைகளில் சா்க்கரை பெறுவோருக்கு அரிசி தவிா்த்து பிற அத்தியாவசியப் பொருள்கள் வழங்கப்படுகின்றன. முன்னுரிமையற்ற குடும்ப அட்டைகளில் எந்தப் பொருளும் இல்லாத அட்டைதாரா்களுக்கு பொருள்கள் ஏதும் அளிக்கப்படுவதில்லை.

மானியம் உயா்கிறது: தமிழகத்தில் சிறப்பு பொது விநியோகத் திட்டம் உள்ளிட்ட திட்டங்களைச் செயல்படுத்துவதற்காக ஆண்டுக்கு ரூ.6,500 கோடி அளவுக்கு நிதி ஒதுக்கப்படுகிறது. இப்போது, சா்க்கரை அட்டைக்குப் பதிலாக அரிசி அட்டையாக மாற்றப்படுவதால் மானியம் அதிகரிப்பதற்கு வாய்ப்பு இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. சா்க்கரை அளிக்கப்படும் அளவு குறைந்தாலும், அரிசியின் அளவு அதிகரிப்பதால் அதற்காக செலவிடப்படும் மானியத்தின் அளவும் உயரும் என அரசுத் துறை வட்டாரங்கள் கூறுகின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com