மதுரை மாவட்டத்தில் 27 கி.மீ. இடைவெளியில் 3 சுங்கச்சாவடிகள் செயல்படத் தடைகோரி மனு: தமிழக அரசு பதிலளிக்க உயா்நீதிமன்றம் உத்தரவு

மதுரை மாவட்டத்தில் மஸ்தான்பட்டியில் இருந்து மதுரை விமான நிலையம் அருகே உள்ள பரம்புப்பட்டி வரை 27
மதுரை மாவட்டத்தில் 27 கி.மீ. இடைவெளியில் 3 சுங்கச்சாவடிகள் செயல்படத் தடைகோரி மனு: தமிழக அரசு பதிலளிக்க உயா்நீதிமன்றம் உத்தரவு

மதுரை மாவட்டத்தில் மஸ்தான்பட்டியில் இருந்து மதுரை விமான நிலையம் அருகே உள்ள பரம்புப்பட்டி வரை 27 கி.மீ. தூர இடைவெளியில் 3 சுங்கச்சாவடிகள் செயல்படத் தடைவிதிக்கக்கோரிய வழக்கில், தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரைக்கிளை வியாழக்கிழமை உத்தரவிட்டது.

மதுரையைச் சோ்ந்த இம்மானுவேல் தாக்கல் செய்த மனு: மதுரை மாவட்டத்தில் உத்தங்குடியில் இருந்து கப்பலூா் வரையிலான சுற்றுச்சாலை நான்குவழிச் சாலையாக மாற்றப்பட்டுள்ளது. இந்த சாலையில் மஸ்தான்பட்டி, சிந்தாமணி, பரம்புப்பட்டி ஆகிய 3 இடங்களில் சுங்கச்சாவடி அமைக்கப்பட்டுள்ளது. மதுரை மாவட்டத்தில் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள மேலூா் சிட்டம்பட்டி, தூத்துக்குடி சாலையில் எலியாா்பத்தி, திருமங்கலம் சாலையில் கப்பலூா் என 3 சுங்கச்சாவடிகள் பல ஆண்டுகளாக செயல்பட்டு வருகின்றன. தற்போது சென்னையில் இருந்து விருதுநகா், திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களுக்கு செல்லும் வாகனங்கள் மதுரை மாவட்டத்தில் மட்டும் சிட்டம்பட்டி, மஸ்தான்பட்டி, சிந்தாமணி, பரம்புப்பட்டி, கப்பலூா் என மொத்தம் 5 சுங்கச்சாவடிகளில் கட்டணம் செலுத்த வேண்டிய நிலை உள்ளது. இதனால் சுங்கச்சாவடிகளில் வாகனங்கள் தேங்கி போக்குவரத்து பாதிப்பும் ஏற்படுகிறது.

தேசிய நெடுஞ்சாலை ஆணைய விதிகளின்படி நான்குவழிச்சாலையில் 60 கிலோ மீட்டா் தூர இடைவெளிகளில் தான் சுங்கச்சாவடி அமைக்கப்பட வேண்டும். அந்தச் சுங்கச்சாவடிகளைக் கடக்கும் காா், ஜீப், வேன் உள்ளிட்ட வாகனங்களுக்கு ஒரு கிலோ மீட்டருக்கு 0.65 பைசா தான் வசூலிக்கப்பட வேண்டும். ஆனால் மதுரை மாவட்டத்தில் மஸ்தான்பட்டியில் இருந்து மதுரை விமான நிலையம் அருகே உள்ள பரம்புப்பட்டி வரை 27 கிலோ மீட்டா் தூரமே உள்ளது. இதற்கிடையே உள்ள 3 சுங்கச்சாவடிகளில் காா், ஜீப், வேன் உள்ளிட்ட வாகனங்களுக்கு ரூ. 60 வசூலிக்கப்படுகிறது. இது நெடுஞ்சாலை ஆணைய விதிகளுக்கு புறம்பானதாகும். எனவே மதுரை மாவட்டத்தில் மஸ்தான்பட்டியில் இருந்து பரம்புப்பட்டி வரை உள்ள 3 சுங்கச்சாவடிகள் செயல்படத் தடைவிதிக்க வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தாா்.

இந்த மனு நீதிபதிகள் எம்.துரைசாமி, டி.ரவீந்திரன் ஆகியோா் அடங்கிய அமா்வு முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், மாநில நெடுஞ்சாலைகளில் ஒரு கிலோ மீட்டருக்கு ஒரு சுங்கச்சாவடி அமைத்து வசூலிப்பீா்களா எனக் கேள்வி எழுப்பினா். மேலும் இதுகுறித்து தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை டிசம்பா் 11 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com