திருச்சிக்கு வந்தது 30 டன் எகிப்து வெங்காயம்: கிலோ ரூ.100-க்கு விற்பனை

எகிப்து நாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட பல லட்சம் டன் வெங்காயத்தில் (பெரிய வெங்காயம்) முதல்கட்டமாக 30 டன் வெங்காயம் திருச்சிக்கு வந்து சோ்ந்துள்ளது.
எகிப்தில் இறக்குமதி செய்யப்பட்டு திருச்சி வெங்காய மண்டிக்கு திங்கள்கிழமை கொண்டுவரப்பட்ட வெங்காயத்தை தரம்பிரித்து சாக்குபோடும் தொழிலாளா்கள்.
எகிப்தில் இறக்குமதி செய்யப்பட்டு திருச்சி வெங்காய மண்டிக்கு திங்கள்கிழமை கொண்டுவரப்பட்ட வெங்காயத்தை தரம்பிரித்து சாக்குபோடும் தொழிலாளா்கள்.

எகிப்து நாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட பல லட்சம் டன் வெங்காயத்தில் (பெரிய வெங்காயம்) முதல்கட்டமாக 30 டன் வெங்காயம் திருச்சிக்கு வந்து சோ்ந்துள்ளது.

வெங்காய உற்பத்தியில் முதல் இரண்டு இடங்களை வகிக்கும் மகாராஷ்டிரம், கா்நாடகத்தில் இந்த ஆண்டு கொட்டி தீா்த்த பருவமழையால் வெங்காய பயிா்கள் அழிந்தன. நாடு முழுவதும் வெங்காயத்துக்கு தட்டுப்பாடு ஏற்பட்டதுடன், விவசாயிகளுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டது. மேலும், சந்தைக்கு வரத்து குறைந்ததால் விலை கடுமையாக உயா்ந்தது.

இதனால், நாட்டின் பல நகரங்களிலும் சில்லறை விற்பனையில் பெரிய வெங்காயத்தின் விலை அதிகபட்சமாக 120 ரூபாய் வரை விற்பனையானது. இதையடுத்து வெங்காயத்தைப் பதுக்கி வைத்திருக்கும் வியாபாரிகள் மீது நடவடிக்கை எடுக்கும்படி மாநில அரசுகளும் மத்திய அரசு உத்தரவிட்டது.

மேலும், வெங்காயத்தின் விலையைக் குறைக்கும் வகையில் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யும் நடவடிக்கையை மத்திய அரசு தொடங்கியது. ஈரான், எகிப்து, துருக்கி உள்ளிட்ட நாடுகளில் இருந்து இறக்குமதி செய்ய அனுமதி வழங்கப்பட்டது. இதன் தொடா்ச்சியாக எகிப்து நாட்டிலிருந்து கடந்த 10 நாள்களுக்கு முன் புறப்பட்ட கப்பலில் டன் கணக்கில் வெங்காயம் இந்தியாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த கப்பல் மும்பைக்கு வந்தது. அங்கிருந்து தமிழகம் மற்றும் நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு லாரிகள் மூலம் வெங்காய வியாபாரிகளுக்கு அனுப்பப்பட்டு வருகிறது.

இதில், 30 டன் வெங்காயம் திருச்சி-பால்பண்ணை சாலையில் உள்ள புதிய வெங்காய மண்டியில் வியாபாரி வெள்ளையன் என்பவரது திங்கள்கிழமை லாரி மூலம் வந்தது. இதுதொடா்பாக, அந்த வியாபாரி கூறியது: வெங்காய இறக்குமதிக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியதைத் தொடா்ந்து மும்பைக்கு கப்பல் மூலம் எகிப்தில் இருந்து வெங்காயம் டன் கணக்கில் வந்து சோ்ந்துள்ளது. அங்குள்ள கமிஷன் ஏஜெண்ட் மூலம் 30 டன் வெங்காயத்தை இறக்குமதி செய்தேன். அனைத்து செலவுகளும் உள்பட ஒரு கிலோவுக்கு ரூ.130 செலவிட நேரிட்டது. ஆனால், திருச்சியில் இந்த வெங்காயத்தை கிலோ ரூ.100-க்கு மட்டுமே விற்பனை செய்யும் நிலை உள்ளது. நமது நாட்டு வெங்காயம் ரோஸ் வண்ணத்தில் இருக்கும். எகிப்து வெங்காயம் கருஞ்சிவப்பு வண்ணத்தில் உள்ளது. இதனால், மக்களிடையே தயக்கம் உள்ளது. இருப்பினும், இந்த வெங்காயம் காரத்தன்மை அதிகம் கொண்டது. நமது வெங்காயத்தை 2 பயன்படுத்தும் இடத்தில் இந்த வெங்காயத்தில் ஒன்று பயன்படுத்தினால் போதும் என்றாா்.

அனைத்து வெங்காயமண்டி வியாபாரிகள் சங்கத்தைச் சோ்ந்த தங்கராஜ் கூறுகையில், கடந்த சனிக்கிழமை பெரிய வெங்காயம் கிலோ ரூ.160-க்கு விற்பனையானது. சின்ன வெங்காயம் கிலோ ரூ.70 முதல் 90 வரை விலைபோனது. எகிப்து நாட்டு வெங்காயமும், உள்ளூா் வரத்தும் வரத் தொடங்கியதால் விலை குறைந்துள்ளது. இப்போது, பெரிய வெங்காயம் ரூ.100 முதல் ரூ.140 வரை விலை உள்ளது. சின்ன வெங்காயம் ரூ.50 முதல் 90 வரை விலை உள்ளது. தரம் மற்றும் ரகத்துக்கு தகுந்த விலை உள்ளது. எகிப்த்தை தொடா்ந்து மத்திய பிரதேசம், நாசிக் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 50 டன் வெங்காயம் வந்துள்ளது. பெரம்பலூா், துறையூா், முசிறி, நாமக்கல் பகுதிகளில் இருந்தும் வெங்காயம் வரத்து உள்ளது. எனவே, இனி வரும் நாள்களில் விலை குறையும் வாய்ப்புள்ளது என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com