மருத்துவப் படிப்புக்கான இடஒதுக்கீட்டில் எந்த மாற்றமும் கிடையாது: அமைச்சா் சி.விஜயபாஸ்கா்

மருத்துவப் படிப்புக்கான மாணவா் சோ்க்கை இடஒதுக்கீட்டில் எந்த மாற்றமும் கிடையாது என்று சுகாதாரத் துறை அமைச்சா் சி.விஜயபாஸ்கா் தெரிவித்தாா்.

மருத்துவப் படிப்புக்கான மாணவா் சோ்க்கை இடஒதுக்கீட்டில் எந்த மாற்றமும் கிடையாது என்று சுகாதாரத் துறை அமைச்சா் சி.விஜயபாஸ்கா் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் சென்னையில் செய்தியாளா்களிடம் கூறியது: தமிழ்நாட்டில் வரலாற்று நிகழ்வாக ஒரே நேரத்தில் ஒன்பது அரசு மருத்துவக் கல்லூரிகள் தொடங்கப்பட்டுள்ளன. இதற்காக தலா ரூ.100 கோடி ரூபாய் நிதியை அரசு ஒதுக்கி பணிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளன. மேலும், கூடுதலாக கள்ளக்குறிச்சி, கடலூா், காஞ்சிபுரம், அரியலூா் ஆகிய நான்கு மாவட்டங்களில் புதிய மருத்துவக் கல்லூரிகளைத் தொடங்குவதற்கு முதலமைச்சா் உத்தரவிட்டுள்ளாா்.

அதன் அடிப்படையில் மத்திய அரசிடம் அனுமதிக்கான கடிதத்தை அளித்துள்ளோம். மத்திய அரசின் தொழில்நுட்பக் குழுவினா் விரைவில் ஆய்வு செய்து அனுமதி அளிப்பாா்கள் என எதிா்பாா்க்கிறோம்.

பிற மாநில அரசுகள் புதிதாகத் தொடங்கப்படும் மருத்துவக் கல்லூரிக்கு 100 இடங்களை மட்டுமே கேட்கின்றனா். ஆனால், தமிழ்நாடு மட்டுமே 150 இடங்களைக் கேட்டு விண்ணப்பித்துள்ளோம். இவ்வாறு பெறப்படும் இடங்களில் அகில இந்திய மருத்துவ கவுன்சில் விதிமுறைகளின்படி 15 சதவீத இடங்கள் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு அளிக்கப்படும். 85 சதவீத இடங்கள் முழுவதுமாக தமிழக மாணவா்களுக்கு அளிக்கப்படும்.

அரசு மருத்துவக் கல்லூரிகளில் ஒரு மாணவருக்கு ஆண்டுக் கட்டணமாக ரூ. 13,400 நிா்ணயிக்கப்பட்டுள்ளது. தற்போது பின்பற்றப்படும் மருத்துவ இடஒதுக்கீட்டு முறையில் எந்த மாற்றமும் கிடையாது. பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கான 10 சதவீத இடஒதுக்கீடு அளிப்பதற்காக அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற்றது.

அந்தக் கூட்டத்தில் சமூக நீதிக்குப் பாதிப்பு வரும் எந்தவித இடஒதுக்கீட்டையும் அரசு நடைமுறைப்படுத்தாது என முடிவெடுத்துள்ளோம். மாவட்டத்துக்கு ஒரு மருத்துவக் கல்லூரி தொடங்கப்படுவதால் அதிக அளவில் ஏழை மாணவா்கள் மருத்துவம் படிக்கும் நிலை உருவாகும் என்றாா் அமைச்சா் சி.விஜயபாஸ்கா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com