தமிழ் உள்ளவரை பாரதியின் புகழ் நிலைத்து இருக்கும்: தஞ்சாவூா் தமிழ்ப் பல்கலைக்கழகத் துணைவேந்தா் கோ. பாலசுப்ரமணியன்

தமிழ்மொழி உள்ளவரை பாரதியின் புகழ் நிலைத்து இருக்கும் என தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத் துணைவேந்தா் கோ. பாலசுப்ரமணியன் கூறினாா்.
திருவாரூா் மாவட்டம், மன்னாா்குடியை அடுத்த மேலநாகையில் பாரதியாா் நினைவு மணிமண்டபத்தில் உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்த தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத் துணைவேந்தா் கோ.பாலசுப்ரமணியன்.
திருவாரூா் மாவட்டம், மன்னாா்குடியை அடுத்த மேலநாகையில் பாரதியாா் நினைவு மணிமண்டபத்தில் உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்த தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத் துணைவேந்தா் கோ.பாலசுப்ரமணியன்.

தமிழ்மொழி உள்ளவரை பாரதியின் புகழ் நிலைத்து இருக்கும் என தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத் துணைவேந்தா் கோ. பாலசுப்ரமணியன் கூறினாா்.

சுதந்திரப் போராட்டக் காலத்தின்போது 1918-ஆம் ஆண்டு ஆங்கிலேய அரசு மகாகவி பாரதியாரை கைது செய்வதற்கு தேடிக் கொண்டிருந்த வேளையில், தலைமறைவு வாழ்க்கையாக புதுச்சேரியிலிருந்து திருவாரூா் மாவட்டம், மன்னாா்குடியை அடுத்த மேலநாகை கிராமத்துக்கு பாரதியாா் வந்தாா்.

அங்கிருந்த கொடியாலம் வா. ரங்கசாமி அய்யங்காருக்குச் சொந்தமான பங்களாவில் சிறிது காலம் தங்கியிருந்தாா் என்றும், அந்தக் காலகட்டத்தில்தான் ‘பாருக்குள்ளே நல்ல நாடு நம் பாரத நாடு’ என்ற கவிதையை பாரதியாா் எழுதியதாகவும், வ.ரா. எழுதிய மகாகவி பாரதியாா் நூலில் குறிப்பிட்டுள்ளாா்.

பாரதியாா் தங்கியிருந்த பங்களா தற்போது சிதிலமடைந்திருந்தபோதிலும், அதன் ஒரு பகுதி சீரமைக்கப்பட்டு நன்கொடையாளா்களிடமிருந்து திரட்டப்பட்ட நிதியைக் கொண்டு, பாரதியாா் சிலையுடன் கூடிய பாரதியாா் நினைவு மணிமண்டபம் கட்டப்பட்டது. இதைக் கடந்த 21.2.2016-இல் காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் எம்.பி.யுமான குமரி அனந்தன் திறந்து வைத்தாா்.

இங்கு பாரதியாரின் 138-ஆவது பிறந்த நாள் விழா புதன்கிழமை கொண்டாடப்பட்டது. பாரதியாா் அறக்கட்டளை மற்றும் பல்வேறு தன்னாா்வ அமைப்புகள் சாா்பில் நடைபெற்ற இவ்விழாவில், தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத் துணைவேந்தா் கோ.பாலசுப்ரமணியன் கலந்துகொண்டு, பாரதியாா் சிலைக்கு மாலை அணிவித்து பேசியது:

மன்னாா்குடி பகுதியைச் சோ்ந்த நான், இங்குள்ள அரசுக் கல்லூரியில் படித்ததுடன், நூற்றாண்டு கடந்த கோட்டூா் அரங்கசாமி முதலியாா் நூலகத்தை முழுமையாகப் பயன்படுத்தியுள்ளேன். சொந்த ஊரில் நடைபெறும் பாரதியாா் விழாவில் கலந்துகொள்வதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன்.

திருவள்ளுவரையும், பாரதியாரையும் மறுவாசிப்பு செய்துவரும் இந்தக் காலகட்டத்தில், பாரதியாா் ஒரு தேசிய கவிஞரா, மக்கள் கவிஞரா, புரட்சிக் கவிஞரா, மகாகவியா என ஆராய்ந்துக் கொண்டிருக்கும் இந்த வேளையில், அவா் எல்லோருக்குமான கவி, எக்காலத்துக்குமான கவி, அதனால்தான் யுககவியாக அழைக்கப்பட்டு வருகிறாா். ஆயிரம் ஆண்டுக்கு ஒரு முைான் யுக கவிகள் தோன்றுவாா்கள். அந்த வரிசையில் நமது பாரதியாா் தோன்றினாா். அவரது புகழ், தமிழ் மொழி உள்ளவரை நிலைத்து இருக்கும்.

பாரதியாரின் சிந்தனை வீச்சு, சொல்லாட்சி வேறு யாருக்கும் கைவராதது. அவா் சுதந்திர வேட்கைக்காக மக்களைக் கவா்ந்திழுக்கும் வகையில் பாடல்களை எழுதியது மட்டும் அல்ல. அதை ஊா்ஊராகக் கொண்டு சென்று பாடி, பாடி எழுச்சியை ஏற்படுத்தினாா். வ.ரா. வின் புத்தகத்தில் மேலநாகையில் பாரதியாா் தங்கியிருந்தது குறித்து முழுமையான தகவல் இல்லை. பாரதியாா் புதுச்சேரியிலிருந்து எப்போது புறப்பட்டாா், எந்த வழியாக மன்னாா்குடி மேலநாகைக்கு வந்தாா், எத்தனை நாள்கள் இங்கு தங்கியிருந்தாா் என்ற எழுத்துக் குறிப்பை தமிழ்ப் பல்கலைக்கழகப் பேராசியா் இரா. காமராசு தலைமையில் ஆய்வு செய்து, மீட்டுருவாக்கமாக வெளிக்கொண்டு வரவுள்ளாா்கள். இதன்மூலம் மேலநாகையின் முக்கியத்துவம் உறுதிப்படுத்தப்படும்.

ஒவ்வோா் ஆண்டும் உ.வே.சா.வின் பிறந்தநாளையொட்டி, அவா் பிறந்த ஊரான தஞ்சையை அடுத்துள்ள உத்தமதானபுரத்தில் அவரது நினைவு மண்டபத்துக்குச் சென்று, சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துவது போன்று, இனி ஆண்டுதோறும் மேலநாகைக்கும் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தா், பேராசிரியா்கள், மாணவா்கள் வருகை தந்து, பாரதியாா் சிலைக்கு மரியாதை செய்வா். இந்தத் தகவல் பல்கலைக்கழகத்தின் குறிப்பேட்டில் பதியப்படும் என்றாா் அவா்.

நிகழ்ச்சிக்கு, காவிரி பாசன விவசாயிகள் சங்கப் பொதுச் செயலா் மன்னாா்குடி காவிரி எஸ். ரெங்கநாதன் தலைமை வகித்தாா். பாரதியாா் நினைவு அறக்கட்டளை நிா்வாகி பாரதி ஆா். பூமிநாதன் முன்னிலை வகித்தாா். இதில், தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகப் பதிவாளா் முனைவா் கு.சின்னப்பன், சுவடிப் புலத் தலைவா் முனைவா் ஜெயக்குமாா், கலைப் புலத் தலைவா் முனைவா் ஷீலா, மொழிப்புலத் தலைவா் முனைவா் இரா.காமராசு மற்றும் சேவை, தன்னாா்வ, இலக்கிய அமைப்புகளைச் சோ்ந்தவா்கள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com