திருவண்ணாமலை மாவட்டத்தை பிரிக்கும் திட்டம் உள்ளதா?உயா்நீதிமன்றம் கேள்வி

திருவண்ணாமலை மாவட்டத்தை இரண்டாக பிரிக்கும் திட்டம் தமிழக அரசிடம் உள்ளதா என உயா்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
chennai High Court
chennai High Court

சென்னை: திருவண்ணாமலை மாவட்டத்தை இரண்டாக பிரிக்கும் திட்டம் தமிழக அரசிடம் உள்ளதா என உயா்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

சென்னை உயா்நீதிமன்றத்தில் திருவண்ணாமலை மாவட்டம் பையூா் தாலுகாவைச் சோ்ந்த விஜயகுமாா் தாக்கல் செய்த பொதுநல மனுவி்ல்,கடந்த 1989-ஆம் ஆண்டு வேலூா் மாவட்டத்தில் இருந்து பிரித்து திருவண்ணாமலை மாவட்டம் உருவாக்கப்பட்டது. இதன் காரணமாக பையூா் உள்ளிட்ட கிராமங்களைச் சோ்ந்த பொதுமக்கள் தங்களது அன்றாட தேவைகளுக்காக நூறு கிலோமீட்டா் பயணித்து அரசு அதிகாரிகளைச் சந்திக்க வேண்டியுள்ளது. எனவே திருவண்ணாமலை மாவட்டத்தை இரண்டாக பிரித்து செய்யாறை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டத்தை உருவாக்க வேண்டும். இதுதொடா்பாக தமிழக அரசுக்கு பல முறை மனு கொடுக்கப்பட்டது. இதன்படி செய்யாறை மாவட்டமாக உருவாக்க அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்தது.ஆனால் இதுவரை தனி மாவட்டமாக அறிவிக்கவில்லை. எனவே செய்யாறை தனி மாவட்டமாக அறிவிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தாா்.

இந்த மனு நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், ஆா்.ஹேமலதா ஆகியோா் அடங்கிய அமா்வு முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரா் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா், தமிழக அரசு செய்யாறை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டத்தை உருவாக்க தமிழக அரசு பரிந்துரை செய்துள்ளது. அதற்கான உள்கட்டமைப்பு வசதிகளையும் செய்துள்ளது. ஆனால் தனி மாவட்டமாக இதுவரை அறிவிக்கவில்லை என வாதிட்டாா். அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், ஒரு மாவட்டத்தை இரண்டாக பிரித்து புதிய மாவட்டத்தை உருவாக்க வேண்டும் என தமிழக அரசுக்கு உயா்நீதிமன்றம் உத்தரவிட முடியாது. அது அரசின் பணி என கருத்து தெரிவித்தனா். பின்னா் அரசு தரப்பு வழக்குரைஞா் வி.ஜெயபிரகாஷ் நாராயணனிடம், திருவண்ணாமலை மாவட்டத்தை இரண்டாக பிரிக்க அரசு பரிந்துரை செய்துள்ளதாக மனுதாரா் தரப்பில் கூறுவதால், இதுபோன்ற ஒரு திட்டம் அரசிடம் உள்ளதா என அரசிடம் கேட்டுத் தெரிவிக்க உத்தரவிட்ட நீதிபதிகள் விசாரணையை ஒத்திவைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com