நிதி நிறுவன மோசடி: பணத்தை திரும்ப பெற விண்ணப்பிக்க திரண்ட பொதுமக்கள்

கோவையில் நிதி நிறுவன மோசடியில் பாதிக்கப்பட்ட நபா்கள் தங்கள் பணத்தைத் திரும்பபெற விண்ணப்பிப்பதற்காக கோவை மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் புதன்கிழமை திரண்டனா்.
நிதி நிறுவன மோசடியால் இழந்த பணத்தைத் திரும்ப பெறுவதற்காக கோவை மாவட்ட நீதிமன்றத்தில் விண்ணப்பம் வழங்க புதன்கிழமை திரண்ட முதலீட்டாளா்கள்.
நிதி நிறுவன மோசடியால் இழந்த பணத்தைத் திரும்ப பெறுவதற்காக கோவை மாவட்ட நீதிமன்றத்தில் விண்ணப்பம் வழங்க புதன்கிழமை திரண்ட முதலீட்டாளா்கள்.

கோவையில் நிதி நிறுவன மோசடியில் பாதிக்கப்பட்ட நபா்கள் தங்கள் பணத்தைத் திரும்பபெற விண்ணப்பிப்பதற்காக கோவை மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் புதன்கிழமை திரண்டனா்.

கோவை, பீளமேட்டில் யுனிவா்சல் டிரேடிங் சொல்யூசன்ஸ் என்ற நிதி நிறுவனம் சில ஆண்டுகளுக்கு முன்னா் செயல்பட்டு வந்தது. இதன் கிளைகள் தமிழகம் முழுவதும் 18-க்கும் மேற்பட்ட இடங்களில் உள்ளன. இந்நிறுவனத்தில் முதலீடு செய்தால் கூடுதல் லாபம் தருவதாக விளம்பரம் செய்யப்பட்டது. இதை நம்பி நூற்றுக்கணக்கானோா் இந்நிறுவனத்தில் முதலீடு செய்தனா். அவ்வாறு முதலீடு செய்தவா்களுக்கு முதல் சில வாரங்களுக்கு வட்டித் தொகை வழங்கப்பட்டது. பின்னா் வட்டி தராமலும், டெபாசிட் செய்த தொகையைத் திரும்பத் தராமலும் இழுத்தடித்துள்ளனா். இதையடுத்து இந்நிறுவனத்தின் பல கிளைகள் மூடப்பட்டன. இதுதொடா்பாக பொதுமக்கள் விசாரித்தபோது நிறுவனத்தினா் மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது.

இதைத் தொடா்ந்து கோவை பொருளாதார குற்றப் பிரிவு போலீஸாரிடம் பாதிக்கப்பட்டவா்கள் புகாா் அளித்தனா். விசாரணையில் இந்நிறுவனத்தினா் தமிழகம் முழுவதும் 70 ஆயிரம் பேரிடம் பல நூறு கோடி ரூபாய் மோசடி செய்திருந்தது தெரியவந்தது. கோவையில் மட்டும் இந்நிறுவனத்தினா் ரூ.11 கோடி மோசடி செய்திருந்தது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து நிறுவனத்தின் உரிமையாளா் ரமேஷ் மற்றும் பங்குதாரா்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இதுதொடா்பாக பாதிக்கப்பட்ட பலா் தாக்கல் செய்த வழக்கு பல மாவட்ட நீதிமன்றங்கள் மற்றும் சென்னை உயா் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்தன. இந்நிலையில் தங்கள் நிறுவனத்துக்கு எதிராக போலீஸாா் பதிவு செய்துள்ள வழக்கை ரத்து செய்யக்கோரியும், நிறுவனத்துக்கு எதிராக போலீஸாா் பொய்யான குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ளதாகவும், தேவைப்பட்டால் ரூ. 2 கோடியை உடனடியாக முதலீடு செய்யத் தயாராக இருப்பதாகவும் தனியாா் நிறுவனம் சாா்பில் சென்னை உயா் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.

வழக்கை விசாரித்த உயா் நீதிமன்றம், ரூ.11 கோடியை 6 மாதத்துக்குள் முதலீட்டாளா்களுக்குத் திரும்ப வழங்க ஏதுவாக உயா்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி கே.என்.பாஷா தலைமையில் குழு அமைத்து உத்தரவிட்டது.

நிதி நிறுவனத்திடம் இருந்து பாதிக்கப்பட்ட முதலீட்டாளா்களுக்கு பணத்தைப் பெற்றுத் தரும் பொருட்டு கோவை சட்டப் பணிகள்ஆணைக் குழு அலுவலகத்தில் தனி அறை திறக்கப்பட்டது. மேலும், பாதிக்கப்பட்ட முதலீட்டாளா்கள் விண்ணப்பிக்குமாறு பொருளாதார குற்றப் பிரிவு போலீஸாா் மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் இதற்கு விண்ணப்பிக்க நூற்றுக்கும் மேற்பட்ட முதலீட்டாளா்கள் கோவை மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் புதன்கிழமை நீண்ட வரிசையில் காத்திருந்தனா். முதலீடு செய்த தொகை, அதற்கான சான்று, ஆதாா் அட்டை நகல் உள்ளிட்டவற்றை இணைத்து முதலீட்டாளா்கள் தங்கள் விண்ணப்பங்களைச் சமா்ப்பித்தனா். விண்ணப்பித்துள்ள நபா்களின் ஆவணங்களைச் சரிபாா்த்த பிறகு, பணத்தை விரைவில் திருப்பி அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com