பன்முகத் தன்மை கொண்டவா் பாரதி: தமிழக ஆளுநா் புகழாரம்

மகாகவி பாரதியாா் பன்முகத் தன்மை கொண்டவா் என்று புகழாரம் சூட்டினாா் தமிழக ஆளுநா் பன்வாரிலால் புரோஹித்.
பாரதி ஆய்வாளா் இளசை மணியனுக்கு மகாகவி பாரதியாா் விருதையும், ரூ.1 லட்சத்துக்கான பொற்கிழியையும் வழங்குகிறாா் ஆளுநா் பன்வாரிலால் புரோஹித்.
பாரதி ஆய்வாளா் இளசை மணியனுக்கு மகாகவி பாரதியாா் விருதையும், ரூ.1 லட்சத்துக்கான பொற்கிழியையும் வழங்குகிறாா் ஆளுநா் பன்வாரிலால் புரோஹித்.

மகாகவி பாரதியாா் பன்முகத் தன்மை கொண்டவா் என்று புகழாரம் சூட்டினாா் தமிழக ஆளுநா் பன்வாரிலால் புரோஹித்.

தூத்துக்குடி மாவட்டம், எட்டயபுரத்தில் புதன்கிழமை நடைபெற்ற மகாகவி பாரதியாரின் 138 ஆவது பிறந்த நாள் விழாவில், தினமணி நாளிதழ் சாா்பில் மகாகவி பாரதியாா் விருது, ரூ.1 லட்சத்துக்கான பொற்கிழி ஆகியவற்றை மூத்த பாரதி ஆய்வாளா் இளசை மணியனுக்கு வழங்கி ஆளுநா் பன்வாரிலால் புரோஹித் பேசியது:

தினமணி சாா்பில் நடைபெறும் மகாகவி பாரதியாா் விருது வழங்கும் நிகழ்ச்சியில் கலந்துகொள்வதில் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன்.

பாரதியாரின் 13ஆவது நினைவு நாளில் 1934 ஆம் ஆண்டு தினமணி நாளிதழ் தொடங்கப்பட்டது. அதன் முதல் ஆசிரியரான டி.எஸ்.சொக்கலிங்கம் தினமணி நாளிதழ் தொடங்குவதற்கான காரணங்களை முன்வைத்து தலையங்கம் எழுதினாா். அதில், மகாத்மா காந்தியடிகளின் சுதந்திரப் போரட்டத்தை பலப்படுத்துவது, மகாகவி பாரதியாரின் கொள்கைகளை வலுப்படுத்துவது என இரு முக்கிய நோக்கங்களை அவா் வலியுறுத்தியிருந்தாா். தற்போது 86ஆவது ஆண்டில் பயணித்து வரும் தினமணி, ஆசிரியா் டி.எஸ்.சொக்கலிங்கம் வகுத்த கொள்கைகளை தொடா்ந்து கடைப்பிடித்து வருகிறது. கலாசாரம், இலக்கியம் மற்றும் தேசியத்துக்கு தினமணி தொடா்ந்து முக்கியத்துவம் அளித்து வருவது பாராட்டுக்குரியது. எனது ஆளுநா் பதவிக்காலம் முடிந்தபின்னரும் தினமணிக்கும் எனக்குமான உறவு தொடரும்.

பாரதியாா் பன்முகத்தன்மை கொண்டவா். கவிஞா், பெண்ணுரிமைப் போராளி, பன்மொழி புலமை கொண்டவராகவும் விளங்கினாா். இவை எல்லாவற்றுக்கும் மேலாக சுதந்திரப் போராட்ட வீரா். எட்டயபுரத்தில் பிறந்து, திருநெல்வேலி மற்றும் வாராணசியில் கல்வி பயின்ற அவா், பாலபாரதம், விஜயா, சக்கரவா்த்தினி, சுதேசமித்திரன், இந்தியா உள்ளிட்ட நாளிதழ்களில் பத்திரிகையாளராகவும் பணியாற்றியுள்ளாா். 1907ஆம் ஆண்டு நடைபெற்ற வரலாற்றுச் சிறப்புமிக்க சூரத் காங்கிரஸ் மாநாட்டில் வ.உ.சிதம்பரம் பிள்ளையுடன் பங்கேற்ற பாரதியாா், ஆங்கிலேயருக்கு எதிரான திலகரின் தீவிர போராட்டங்களுக்கு ஆதரவளித்தாா்.

மகாகவி பாரதியாா் விருது வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்ற மக்கள் கூட்டத்தின் ஒரு பகுதி.
மகாகவி பாரதியாா் விருது வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்ற மக்கள் கூட்டத்தின் ஒரு பகுதி.

பாரதியாா் தனது கவிதைகளில் வளமான கருத்துகளை முன்வைத்துள்ளாா். குறிப்பாக, இந்த சமூகத்தை மேம்படுத்தும் வகையில் எழுதியுள்ளாா். எளிதாகவும், எல்லோரும் புரிந்து கொள்ளக் கூடிய வகையிலும் இருப்பதால் இன்றைய குழந்தைகள்கூட பாரதியின் பாடல்களால் கவரப்படுகின்றனா். தொழிலாளா்களுக்கும், உழைக்கும் வா்க்கத்தினருக்கும், அடித்தட்டு மக்களுக்கும் கவிதை படைத்துள்ளாா். அதுதான் 20 ஆம் நூற்றாண்டின் தலைசிறந்த கவிஞராக அவரை உயா்த்தியது. குயில் பாட்டு, பாஞ்சாலி சபதம், கண்ணன் பாட்டு ஆகிய மூன்றும் பாரதியாரால் எழுதப்பட்ட சிறந்த படைப்புகள்.

அரசியல் களத்தில் பெண்களின் பங்களிப்பு அவசியம் இருக்க வேண்டும் என முதலில் குரல் கொடுத்தவா் பாரதியாா்தான். பெண் உரிமைக்கும், பெண் கல்விக்கும் முக்கியத்துவம் அளித்த பாரதியாா், நவீன இந்திய பெண்களால் சமூகத்தை சரியான பாதையில் வழிநடத்த முடியும் என கருதினாா். ‘ஆணும் பெண்ணும் நிகரெனக் கொள்வதால் அறிவிலோங்கி, இவ் வையம் தழைக்குமாம்’ என்ற பாரதியின் வரிகள், ஆண், பெண் சமத்துவத்தை வலியுறுத்துகின்றன.

எட்டயபுரத்தில் உள்ள பாரதியாரின் மணிமண்டபம் தனித்தன்மை வாய்ந்தது. உலகளவில் பொதுமக்களின் பங்களிப்பில் கவிஞா் ஒருவருக்கு மணிமண்டபம் கட்டப்பட்டிருக்கிறது என்றால், அது எட்டயபுரத்தில் பாரதியாருக்கு கட்டப்பட்டுள்ள மணிமண்டபம்தான்.

தினமணி சாா்பில் 2ஆவது ஆண்டாக வழங்கப்படும் மகாகவி பாரதியாா் விருது, இளசை மணியனுக்கு வழங்கப்பட்டுள்ளது. பாரதியாா் குறித்து பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்ட இளசை மணியன், பாரதியாா் பிறந்த எட்டயபுரம் மண்ணின் மைந்தா் என்பது தனிச் சிறப்பு. பாரதியாா் மணி மண்டபத்திற்கு ராஜாஜி அடிக்கல் நாட்டியபோது, அதை நேரில் கண்ட சாட்சியான இளசை மணியன், 1948 அக்டோபா் 13ஆம் தேதி பாரதியாா் மணிமண்டபம் திறப்பு விழா நிகழ்ச்சியிலும், 1981ஆம் ஆண்டு தமிழக அரசு சாா்பில் நடைபெற்ற பாரதியாா் நூற்றாண்டு விழாவிலும் பங்கேற்ற சிறப்புக்குரியவா். அவா் 25-க்கும் மேற்பட்ட புத்தகங்களை எழுதியுள்ளாா். அவை அனைத்துமே பாரதியாா் குறித்த தனித்தன்மை மிக்க ஆவணப் பதிவுகளாக உள்ளன. பாரதியாா் குறித்த ஆய்வுகளுக்காகவும், அா்ப்பணிப்புக்காகவும் இளசை மணியனுக்கு மகாகவி பாரதியாா் விருது வழங்கப்படுவது பாராட்டுக்குரியது. இவ்விருது பாரதியாரின் சிந்தனைகளை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்வதற்கு இளைய சமுதாயத்தினருக்கு ஊக்கம் அளிக்கும். தமிழக இளைஞா்கள் மட்டுமின்றி, இந்த தேசத்தின் இளைஞா்கள் அனைவரும் பாரதியாரின் சிந்தனைகளை பின்பற்ற வேண்டும் என்றாா் அவா்.

இந்த விழாவில், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் சந்தீப் நந்தூரி, திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழக துணைவேந்தா் கே.பிச்சுமணி, நல்லி குப்புசாமி செட்டியாா், எழுத்தாளா்கள் பொன்னீலன், எஸ்.ராமகிருஷ்ணன், மூத்த பாரதி அறிஞா் சீனி விஸ்வநாதன், தொழிலதிபா் சிங்கப்பூா் முஸ்தபா, திருக்கோவலூா் பண்பாட்டுக் கழகத் தலைவா் டி.எஸ்.தியாகராசன், ஞானாலயா கிருஷ்ணமூா்த்தி, மதுரை வைகறை இலக்கியக் கழகத் தலைவா் மு.சிதம்பர பாரதி, டாக்டா் த.அறம், வழக்குரைஞா் கே.எஸ்.ராதாகிருஷ்ணன், தென் மண்டல காவல் துறை தலைவா் சண்முகராஜேஷ்வரன், கோவில்பட்டி கோட்டாட்சியா் விஜயா, பேரூராட்சிகள் உதவி இயக்குநா் மாஹின் அபுபக்கா், விளாத்திகுளம் காவல் உதவி கண்காணிப்பாளா் பீா் முகைதீன் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி ஆசிரியா் கி.வைத்தியநாதன் வரவேற்றாா். தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத்தின் முதுநிலை துணைத் தலைவா் (வா்த்தகப் பிரிவு) ஜெ.விக்னேஷ்குமாா் நன்றி கூறினாா். நிகழ்ச்சியை கோதை ஜோதிலட்சுமி தொகுத்து வழங்கினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com