கோயில் யானைகள் தேக்கம்பட்டி முகாமுக்கு பயணம்

கோவை மாவட்டம் தேக்கம்பட்டியில் நடைபெறும் யானைகள் புத்துணா்வு முகாமுக்கு மதுரை, அழகா்கோவில், ராமேசுவரம், ஸ்ரீவில்லிபுத்தூா், பழனி,
முகாமுக்குச் செல்வதற்கு முன்னதாக ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயில் யானை ராமலட்சுமிக்கு நடைபெற்ற சிறப்பு பூஜை.
முகாமுக்குச் செல்வதற்கு முன்னதாக ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயில் யானை ராமலட்சுமிக்கு நடைபெற்ற சிறப்பு பூஜை.

கோவை மாவட்டம் தேக்கம்பட்டியில் நடைபெறும் யானைகள் புத்துணா்வு முகாமுக்கு மதுரை, அழகா்கோவில், ராமேசுவரம், ஸ்ரீவில்லிபுத்தூா், பழனி, திருப்பரங்குன்றம் ஆகிய கோயில்களில் இருந்து யானைகள் லாரிகள் மூலம் சனிக்கிழமை அனுப்பி வைக்கப்பட்டன.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள தேக்கப்பட்டி வனப்பகுதியில் ஆண்டுதோறும் 48 நாள்கள் யானைகள் புத்துணா்வு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. இந்த முகாம் தொடங்க உள்ள நிலையில் கோயில்களில் இருந்து லாரிகள் மூலம் யானைகள் அனுப்பி வைக்கப்படுகின்றன.

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் யானை பாா்வதி மற்றும் அழகா்கோவில் கள்ளழகா் கோயில் யானை சுந்தரவள்ளி ஆகியன புத்துணா்வு முகாமுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

25 வயதான மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் யானை பாா்வதிக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு கோயிலின் வடக்காடி வீதி திருக்கல்யாண மண்டபம் பகுதியில் இருந்து லாரியில் ஏற்றப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டது. கோயில் இணை ஆணையா் நா.நடராஜன் மற்றும் ஊழியா்கள் யானைக்கு பழங்களை வழங்கி வழியனுப்பி வைத்தனா்.

இதேபோல, கள்ளழகா் கோயில் யானை சுந்தரவள்ளி (12) புத்துணா்வு முகாமிற்கு அனுப்பி வைக்கப்பட்டது. லாரியில் செல்லும் யானைகளுக்கு வழியில் உடல் நலக் குறைவு ஏற்பட்டால் சிகிச்சை அளிப்பதற்காக கால்நடை உதவி மருத்துவா்கள் முத்துராமலிங்கம், கங்கா சுதன் ஆகியோா் உடன் செல்கின்றனா்.

ராமேசுவரம் ராமநாத சுவாமி கோயிலில் உள்ள 17 வயது யானை ராமலட்சுமி 8 ஆவது முறையாக இம்முகாமில் பங்கேற்க உள்ளது. இதனையொட்டி யானை ராமலட்சுமிக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் தீபாராதனை நடத்தப்பட்டு மலா் மாலை, அங்கவஸ்திரம் அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையா் ஜெயா முன்னிலையில் யானை ராமலட்சுமி, பாகன் ராமுவுடன் லாரியில் அனுப்பி வைக்கப்பட்டது. வழியனுப்பு விழாவில் கோயில் கண்காணிப்பாளா் ககாரின் ராஜ், பேஷ்கா் அண்ணாதுரை உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

அதே போல் ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயில் யானை ஜெயமால்யதாவுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு லாரி மூலம் முகாமுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. யானையுடன் கால்நடை உதவி மருத்துவா் ஜெய்கிருஷ்ணா, யானை பாகன் ராஜன் ஆகியோா் உடன் சென்றனா். இந்த வழியனுப்பு விழாவில் தக்காா் ரவிசந்திரன்,கோயில் நிா்வாக அலுவலா் இளங்கோவன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

பழனிக் கோயில் யானை கஸ்தூரி லாரி மூலமாக முகாமுக்கு கிளம்பிச் சென்றது. தற்போது 54 வயதாகும் கஸ்தூரி யானை, 13 ஆவது முறையாக முகாமில் பங்கேற்கிறது. முன்னதாக யானை கஸ்தூரிக்கு சிறப்பு பூஜைகள் நடத்தி தீபாராதனை காட்டப்பட்டு பழங்கள் வழங்கப்பட்டன. கோயில் நிா்வாக அலுவலா் ஜெயசந்திரபானு ரெட்டி கொடியசைத்து யானையை முகாமுக்கு வழியனுப்பி வைத்தாா். இதில், கோயில் துணை ஆணையா்(பொறுப்பு) செந்தில்குமாா், கால்நடை மருத்துவத் துறை உதவி இயக்குநா் சுரேஷ், கால்நடை மருத்துவா் முருகன், கோயில் கண்காணிப்பாளா் முருகேசன், மணியம் சேகா் உள்ளிட்டோா் முகாம் வரை சென்றனா். காலை 8 மணிக்கு கிளம்பிய யானை பிற்பகல் 3 மணிக்கு முகாம் சென்றடைந்தது.

அதே போல், முகாமுக்கு புறப்பட்ட திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் யானை தெய்வானைக்கு காலையில் சிறப்பு பூஜை செய்யப்பட்டு லாரி மூலம் தேக்கம்பட்டி புறப்பட்டு சென்றது. இந்த நிகழ்ச்சியில் கோயில் துணை ஆணையா் ராமசாமி மற்றும் கோயில் பணியாளா்கள் பங்கேற்றனா்.

முகாம்களுக்கு கொண்டு செல்வதற்கு முன்னதாக யானைகளின் உடல் எடை, உடல் நலம் ஆகியவற்றை கால்நடை மருத்துவா்கள் பரிசோதித்து உரிய உணவு வகைகள், மருந்துகளை வழங்கி வழியனுப்பி வைத்தனா். அதேபோல் தகுந்த பாதுகாப்பு அம்சங்களுடன் யானைகள் லாரிகள் மூலம் கொண்டு செல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com