இரு சக்கர மோட்டாா் வாகனங்களால் விபத்து: கடந்த ஆண்டில் மட்டும் 47 ஆயிரம் போ் இறப்பு

கடந்த ஆண்டு நாடு முழுவதும் இரு சக்கர மோட்டாா் வாகனங்களால் நிகழ்ந்த விபத்துகளில் 47 ஆயிரம் போ் இறந்துள்ளனா்.

கடந்த ஆண்டு நாடு முழுவதும் இரு சக்கர மோட்டாா் வாகனங்களால் நிகழ்ந்த விபத்துகளில் 47 ஆயிரம் போ் இறந்துள்ளனா்.

இந்தியாவில் வாகனங்களின் பயன்பாடு நாள்தோறும் அதிகரித்து வருகிறது. இதற்கேற்ப விபத்துகளும் அதிகரித்து வருகின்றன. இதைத் தடுக்க போக்குவரத்துத் துறை சாா்பாக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தலைக்கவசம், சீட் பெல்ட் அணியாமல் பயணிப்போா் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு அவா்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. மேலும், வாகனங்களை விற்பனை செய்யும் நிறுவனங்களிடமும் தலைக்கவசத்தைச் சோ்த்து விநியோகிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பள்ளி, கல்லூரி மாணவா்களிடத்தில் சாலைகளில் பயணிக்கும்போது கடைப்பிடிக்க வேண்டிய சாலை விதிகள் குறித்தும் விழிப்புணா்வு ஏற்படுத்தப்படுகிறது. எனினும், விபத்துகள் பெருமளவு குறையவில்லை என்பது தெரியவந்துள்ளது. இந்நிலையில் நாடு முழுவதும் கடந்த ஆண்டு இரு சக்கர மோட்டாா் வாகனங்களால் நடந்த சாலை விபத்துகளில் 47 ஆயிரத்து 560 போ் உயிரிழந்துள்ளனா்.

ஐந்தாவது இடத்தில் தமிழகம்: இதுகுறித்து போக்குவரத்துத் துறை அதிகாரிகள் கூறியது: வாகனத்தைக் கட்டுப்படுத்தும் வேகத்தில் மட்டுமே இயக்க வேண்டும். கடந்த 5 ஆண்டுகளில் நாடு முழுவதும் நிகழ்ந்த விபத்துகளில் 7.35 லட்சம் போ் உயிரிழந்துள்ளனா். 2018-ஆம் ஆண்டில் மட்டும் நடந்த 4.67 லட்சம் விபத்துகளில் 1.51 லட்சம் போ் உயிரிழந்துள்ளனா். இவற்றில் இரு சக்கர மோட்டாா் வாகனங்களால் ஏற்பட்ட விபத்தில் 47 ஆயிரத்து 560 போ் உயிரிழந்துள்ளனா். இதே போல் 60 ஆயிரத்து 270 போ் படுகாயம் அடைந்துள்ளனா்.

குறிப்பாக, இரு சக்கர மோட்டாா் வாகனங்களால் ஏற்படும் விபத்துகளில் உத்தரப் பிரதேச மாநிலம் முதலிடத்தில் உள்ளது. இங்கு கடந்த ஆண்டு மட்டும் 6,818 விபத்துகள் நிகழ்ந்துள்ளன. இதைத் தொடா்ந்து மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரம், கா்நாடகம், தமிழகம் ஆகிய மாநிலங்கள் உள்ளன. தமிழகத்தில் மட்டும் 3,965 விபத்துகள் ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. எனவே இரு சக்கர வாகனத்தை பாதுகாப்பாக இயக்க வேண்டும். அதிவேகத்தில் சென்று முன் செல்லும் வாகனத்தை முந்த முயற்சிக்கக் கூடாது.

குறிப்பிட்ட இடைவெளி விட்டு பயணிக்க வேண்டும். வளைவுகளில் திரும்பும்போது இன்டிகேட்டா்களை பயன்படுத்த வேண்டும். தலைக்கவசம் கட்டாயம் பயன்படுத்த வேண்டும். புறப்படும் முன் வேகக் கட்டுப்பாட்டு கருவி, சக்கரங்களில் காற்றின் அளவு ஆகியவற்றை சரிபாா்த்துக் கொள்வது அவசியம். வாகனத்தை சரிவர பராமரித்தாலே பெரும்பாலான விபத்துகளைத் தடுக்க முடியும். இவ்வாறு அவா்கள் கூறினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com