குடியுரிமை சட்டத்தால் யாருக்கும் பாதிப்பில்லை: தமிழக முதல்வர் பழனிசாமி

குடியுரிமை திருத்தச் சட்டத்தால் இந்தியாவில் யாருக்கும் பாதிப்பில்லை என்று தமிழக முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
குடியுரிமை சட்டத்தால் யாருக்கும் பாதிப்பில்லை: தமிழக முதல்வர் பழனிசாமி

சேலம்: குடியுரிமை திருத்தச் சட்டத்தால் இந்தியாவில் யாருக்கும் பாதிப்பில்லை என்று தமிழக முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தொடர்ந்து பொய்யான தகவல்களை பரப்பி வருகிறார் என்றும் அவர் கூறியுள்ளார்.

ஒரு நாள் பயணமாக சேலம் வந்த முதல்வர் எடப்பாடி கே பழனிசாமி புதன்கிழமை காலை சென்னை திரும்பினார்.

முன்னதாக, சேலம் ஓமலூர் காமலாபுரம் விமான நிலையத்தில் அளித்த பேட்டி: மத்தியில் திமுக ஆட்சியில் பங்குவகித்தபோது, இலங்கை தமிழர்களுக்கு ஏன் குடியுரிமை பெற்றுத்தரவில்லை. இப்போது, இலங்கைத் தமிழர்களுக்கு அதிமுக துரோகம் செய்துவிட்டதாக ஸ்டாலின் கூறுவது பொய். இலங்கை தமிழர்களுக்காக அதிமுக தொடர்ந்து போராடி வருகிறது. எனவே, ஈழத்தமிழர்கள் பற்றி பேச திமுகவுக்கு எந்த அருகதையும் கிடையாது என்று தெரிவித்தார்.

மேலும் அவர் பேசுகையில், குடியுரிமை சட்டத் திருத்தத்தால் இந்தியாவில் யாருக்கும் பாதிப்பு ஏற்படாது. எந்த மதத்தினருக்கும் சிக்கல் ஏற்படாது. 

இந்தியாவில் வாழும் யாருக்கும், குடியுரிமை திருத்தச் சட்டதால் எந்த பாதிப்பும் ஏற்படாது என்று பிரதமர் மோடியும், மத்திய அமைச்சர் அமித் ஷாவும் தெளிவுபடுத்திவிட்டனர். இலங்கைத் தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்கப்பட வேண்டும் என்பதுதான் அதிமுகவின் நிலைப்பாடு என்றும் முதல்வர் பழனிசாமி திட்டவட்டமாகக் கூறியுள்ளார்.

தொடர்ந்து பேசிய முதல்வர் பழனிசாமி, இலங்கை தமிழருக்கு அதிமுக துரோகம் இழைத்துள்ளதாக மு.க.ஸ்டாலின் தெரிவித்தது முழுமையான பொய்.  இலங்கை தமிழர்களுக்கு உதவி செய்வதுபோல் நாடகம் ஆடிக் கொண்டிருக்க கூடிய கட்சி திமுக தான். 13 ஆண்டு காலம் திமுக ஆட்சியில் இருக்கும் போது இலங்கை தமிழர்களுக்கு குடியுரிமை பெற்று தர ஏன் வலியுறுத்தவில்லை? 

இலங்கை அதிபர் ராஜபட்சே வைத்த விருந்தில் கலந்து கொண்டு பரிசு பொருட்களை  கனிமொழி உள்ளிட்ட திமுகவினர் வாங்கினார்கள். இலங்கை தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்குவது குறித்து தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்.

இலங்கையில் ஒன்றரை லட்சம் தமிழர்கள் கொன்று குவிக்க காரணமாக இருந்த திமுக இலங்கை தமிழருக்கு நன்மை செய்வதாக நாடகம் ஆடி வருகிறது. 1.5 லட்சம் தமிழர்களை இலங்கையில் கொன்று குவித்த போது அதற்கு எதிராக திமுக எந்த போராட்டமும் நடத்தவில்லை பதவிதான் பெரிதாகக் கருதி மத்திய அரசுக்கு எதிராக போராடவில்லை.

போர் நிறுத்தப்பட்டதாக  கருணாநிதி அளித்த தகவலின் அடிப்படையில் வெளியே வந்த தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்டனர். இதற்குப் பின்னரும் இலங்கை அதிபர் ராஜபட்சேவை திமுக எம்பிக்கள் கனிமொழி, டி .ஆர். பாலு சந்தித்து பரிசு வாங்கியவர்கள் என்பதை மக்கள் சிந்தித்து பார்க்க வேண்டும்.

குடியுரிமை சட்டத்தை பொறுத்தவரையில் இந்தியர்கள் யாரும் எந்த மதத்தினரும் பாதிக்கப்பட மாட்டார்கள் என பிரதமரும் உள்துறை அமைச்சரும் தெளிவான விளக்கம் அளித்து உறுதியளித்துள்ளனர்.

இலங்கை தமிழர்களுக்கு இரட்டைக் குடியுரிமை வழங்க வேண்டும் என முதல்வராக ஜெயலலிதா இருந்தபோது பிரதமரிடம் கோரிக்கை மனு வழங்கப்பட்டுள்ளது. அதனை மீண்டும் வலியுறுத்துவோம்.

தமிழகத்தில் அரசால் பொதுமக்களுக்கு வழங்கப்படும் அனைத்து நலத்திட்ட  உதவிகளும் இலங்கைத் தமிழர்களுக்கும் வழங்கப்பட்டு வருகிறது,  அதிமுக கொறடா உத்தரவின் பேரிலே அதிமுக எம்பிக்கள் மேலவையில் வாக்களித்தனர்.


கந்து வட்டி தடைச் சட்டத்தை அதிமுக அரசுதான் கொண்டு வந்தது இந்த சட்டத்தை கடுமையாக அமுல்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. கந்துவட்டி கொடுமை நிகழ்ந்தால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.


உச்ச நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகும் உள்ளாட்சித் தேர்தலை சந்திக்க திமுகவிற்கு மனமே வரவில்லை, மக்களை சந்திக்கும் எண்ணமே இல்லை.  தொடர்ந்து தேர்தல் ஆணையத்தை மிரட்டும் விதமாக நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து வருகின்றனர். ஏதாவது ஒரு காரணத்தைக் கண்டுபிடித்து நீதிமன்றம் சென்று வருகிறார்கள்.

மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்த மற்றவர்கள் எழுதிக் கொடுத்ததை ஸ்டாலின் பேசுகிறார்.

மக்களிடையே அதிமுக மற்றும் கூட்டணிக் கட்சிகளுக்கு இடையே அதிகமாக செல்வாக்கு இருப்பதால் தேர்தலை சந்திக்க திமுகவும் அதன் கூட்டணி கட்சிகளும் பயப்படுகின்றன.

மு.க.ஸ்டாலினுக்கு தில் இருந்தால் தெம்பு இருந்தால்  திராணி இருந்தால் இந்த தேர்தலை சந்திக்க வேண்டும் என்று கூறியுள்ளார் முதல்வர் பழனிசாமி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com