ஊதிய உயர்வு பிரச்னை: மருத்துவர்களுடன் தமிழக அரசு நாளை பேச்சுவார்த்தை

ஊதிய உயர்வு தொடர்பான கோரிக்கைகளை அரசு மருத்துவர்கள் வலியுறுத்தி வரும் நிலையில், அதுதொடர்பாக அவர்களுடன் தமிழக அரசு செவ்வாய்க்கிழமை (பிப். 12) பேச்சுவார்த்தை நடத்துகிறது.

ஊதிய உயர்வு தொடர்பான கோரிக்கைகளை அரசு மருத்துவர்கள் வலியுறுத்தி வரும் நிலையில், அதுதொடர்பாக அவர்களுடன் தமிழக அரசு செவ்வாய்க்கிழமை (பிப். 12) பேச்சுவார்த்தை நடத்துகிறது. அதில் உடன்பாடு எட்டப்படாவிட்டால் போராட்டம் குறித்த அறிவிப்பை வெளியிடுவோம் என்று மருத்துவர் சங்கங்கள் தெரிவித்துள்ளன.
 காலமுறை ஊதியமும், பிற மாநிலங்களுக்கு நிகராக ஊதிய உயர்வும் வழங்க வேண்டும் என்பது அரசு மருத்துவர்களின் பிரதான கோரிக்கையாக இருக்கிறது. அதுதொடர்பாக ஆய்வு செய்ய மாநில அரசு தரப்பில் குழு அமைக்கப்பட்டதாகவும், அக்குழு அளித்த பரிந்துரைகள் ஏற்கப்படவில்லை என்பதும் அவர்கள் முன்வைக்கும் முக்கிய குற்றச்சாட்டு.
 இந்தச் சூழலில், அக்கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து அரசு மருத்துவர்கள் சங்கங்கள் சார்பில் புற நோயாளிகள் சிகிச்சை புறக்கணிப்பு போராட்டம் கடந்த டிசம்பர் 4-ஆம் தேதி நடைபெற்றது. அதில் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட மருத்துவர்கள் மாநிலம் முழுவதும் பங்கேற்றனர். காலை 8 மணி முதல் மதியம் 1 மணி வரை மருத்துவ சேவைகளில் அவர்கள் ஈடுபடவில்லை.
 இந்தப் போராட்டத்தால் சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களில் உள்ள மருத்துவமனைகளில் புறநோயாளிகள் சிகிச்சை பாதிக்கப்பட்டது. இதனால், பொது மக்கள் கடும் அவதிக்குள்ளாயினர்.
 மருத்துவர்களின் கோரிக்கைகள் நியாயமாகவே இருந்தாலும், அதற்காக மக்களை பாதிக்கும் வகையில் எதிர்ப்பை வெளிப்படுத்துவது சரியல்ல என்று சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டினர்.
 இதனிடையே, அதற்கு அடுத்தகட்டமாக வேலைநிறுத்தப் போராட்டத்தில் அரசு மருத்துவர்கள் ஈடுபட திட்டமிட்ட நிலையில், அதில் உயர் நீதிமன்றம் தலையிட்டு ஆட்சேபம் தெரிவித்தது. இதையடுத்து, போராட்டத்தை தற்காலிகமாக ஒத்திவைப்பதாக மருத்துவர்கள் அறிவித்தனர்.
 இந்த நிலையில், தமிழக அரசின் பிரதிநிதிகள், மருத்துவர் சங்கத்தினருடன் இந்த விவகாரம் தொடர்பாக செவ்வாய்க்கிழமை பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர். இதுகுறித்து சங்க நிர்வாகிகள் கூறுகையில், "பிற மாநில மருத்துவர்களுக்கு இணையான ஊதியம் கேட்டு பல ஆண்டுகளாக போராடி வருகிறோம்; இந்தச் சூழலில்தான் வரும் 12-ம் தேதி பேச்சுவார்த்தைக்கு எங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது; அதில் உடன்பாடு எட்டப்படவில்லை என்றால், வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவோம்' என்றனர்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com