பிச்சை எடுக்கும் நிலையில் மாநில அரசுகள்: மத்திய அரசு மீது தம்பிதுரை காரசார தாக்கு

ஜிஎஸ்டி வசூலில் தங்களது பங்கை மத்திய அரசிடம் கேட்டு பிச்சை எடுக்கும் நிலையில் மாநில அரசுகள் உள்ளன என்று மக்களவைத் துணைத் தலைவர் மு.தம்பிதுரை கூறியுள்ளார்.
பிச்சை எடுக்கும் நிலையில் மாநில அரசுகள்: மத்திய அரசு மீது தம்பிதுரை காரசார தாக்கு


புது தில்லி: ஜிஎஸ்டி வசூலில் தங்களது பங்கை மத்திய அரசிடம் கேட்டு பிச்சை எடுக்கும் நிலையில் மாநில அரசுகள் உள்ளன என்று மக்களவைத் துணைத் தலைவர் மு.தம்பிதுரை கூறியுள்ளார்.

நாடாளுமன்றத்தில் மத்திய அரசு கடந்த வாரம் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தது.

இந்த இடைக்கால பட்ஜெட் மீதான விவாதம் மக்களவையில் இன்று நடைபெற்றது. இந்த விவாதத்தில் கலந்து கொண்டு பேசிய தம்பிதுரை, மத்திய அரசின் கடந்த 5 ஆண்டு கால ஆட்சியின் குறைபாடுகள் குறித்து காரசாரமாக தனது உரையை முன் வைத்தார்.

அதாவது, மத்திய அரசு கொண்டு வந்த ஜிஎஸ்டி மற்றும் பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் சிறு குறு தொழில்கள் முற்றிலும் நாசமாயின.

மாநில அரசின் உரிமைகளைப் பறிப்பதில் காங்கிரஸ் கட்சிக்கும், பாஜகவுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை. ரூ10 ஆயிரம் கோடிக்கு மேல் தமிழகத்துக்கு மத்திய அரசு நிதியுதவி தர வேண்டியது உள்ளது. தானே, வர்தா, ஒஹி, கஜா உள்ளிட்ட புயல் பாதிப்புகளால் பாதிக்கப்பட்ட தமிழகத்துக்கு மத்திய அரசு நிதியுதவியைக் கூட நிலுவையில் வைத்துள்ளது.

ஜிஎஸ்டி வசூலில் தங்களது பங்கை மத்திய அரசிடம் கேட்டு பிச்சை எடுக்கும் நிலையில் மாநில அரசுகள் உள்ளன. 
மக்களுக்கு மோடி அரசு அளித்த உறுதி மொழிகள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை. நாட்டில் வறுமை முழுமையாக ஒழிக்கப்படவில்லை. விவசாயிகளுக்கு 6 ஆயிரம் உதவித் தொகையை ரூ.12 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும். தேர்தலுக்குகாக விவசாயிகளுக்கு மத்திய அரசு உதவித் தொகை அளித்துள்ளது. 

விவசாயிகள் மீது கரிசனம் இருந்தால் கடந்த பட்ஜெட்டிலேயே விவசாயிகளுக்கு ஏன் உதவித் தொகை வழங்கப்படவில்லை. கிராமப்புறங்களில் விவசாய தொழிலாளர்கள் வேலையின்றி தவிக்கின்றனர். 100 நாள் வேலை திட்டம் தோல்வி அடைந்துவிட்டது. நூறு நாள் வேலை திட்டக் குளறுபடியால் கிராமங்களுக்குச் செல்லும் போது கிராம மக்கள் என்னை சூழ்ந்து கொண்டு கேள்வி எழுப்புகிறார்கள்.

கிராமங்களில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் கட்டப்பட்டிருக்கும் கழிவறைகள் மக்கள் வசிக்கும் பகுதியில் இருந்து 1 கி.மீ. தொலைவில் உள்ளது. எனவே மத்திய அரசு கட்டிய கழிப்பறைகளால் மக்களுக்கு எந்த பயனும் இல்லை. 

மேக் இன் இந்தியா திட்டம் என்று திட்டத்துக்குப் பெயர் வைக்கிறீர்கள். ஆனால் சீனப் பட்டாசு இந்தியாவுக்குள் இறக்குமதியாவதைத் தடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. சீனாவில் இருந்து பட்டாசுகள் இறக்குமதி செய்யப்படுவதால், சிவகாசி பட்டாசுகளுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 

ஜிஎஸ்டியால் தமிழகம் உள்ளிட்ட மாநிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளது.  வேலையில்லா திண்டாட்டம் குறையவில்லை. 10 ஆண்டுகளில் 3 லட்சம் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர் என்று கடுமையான குற்றச்சாட்டுகளை முன் வைத்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com