பிரதமர் பயிர் காப்பீட்டுத் திட்டம்: பேரவையில் முதல்வர் பழனிசாமி விளக்கம்

பிரதமர் பயிர் காப்பீட்டுத் திட்டம் குறித்து தமிழக சட்டப்பேரவையில் முதல்வர் பழனிசாமி விளக்கம் அளித்தார்.
பிரதமர் பயிர் காப்பீட்டுத் திட்டம்: பேரவையில் முதல்வர் பழனிசாமி விளக்கம்


சென்னை: பிரதமர் பயிர் காப்பீட்டுத் திட்டம் குறித்து தமிழக சட்டப்பேரவையில் முதல்வர் பழனிசாமி விளக்கம் அளித்தார்.

அவர் அளித்த விளக்கத்தில், வறட்சியிலிருந்து விவசாயிகளை பாதுகாக்கத்தான் காப்பீட்டு திட்டத்திலே விவசாயிகளை இடம்பெற செய்திருக்கின்றோம். ஆகவே, வறட்சி வருகின்றபோது, இப்படி விவசாயிகள் பாதிக்கப்படுகின்ற போது, இந்த காப்பீட்டுத் திட்டத்தின் மூலமாக அவர்களுக்கு இந்த இழப்பீட்டுத் தொகை பெற்றுத் தருவதற்கு தான் அரசு உரிய நடவடிக்கை எடுத்து வருகிறது. 

ஆகவே, இன்றைக்கு பார்த்தீர்களானால், மாநிலம் முழுவதும் என்று சொன்னால், கிட்டத்தட்ட காப்பீட்டு நிறுவனங்களால் 3527 கோடி ரூபாய் பயிர் காப்பீட்டு இழப்பீட்டுத் தொகையாக 12 லட்சத்து 9 ஆயிரத்து 844 விவசாயிகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு இதுவரை 11 லட்சத்து 88 ஆயிரத்து 501 விவசாயிகளுக்கு 3399 கோடி ரூபாய் விடுவிக்கப்பட்டுள்ளது. இதில் 11 லட்சத்து 69 ஆயிரத்து 826 விவசாயிகளின் வங்கிக் கணக்கில் 3 ஆயிரத்து 370 கோடி ரூபாய் நேரடியாக வரவு வைக்கப்பட்டுள்ளது. 2016-17ஆம் ஆண்டுக்கு இது. 

அதேபோல 2017-18ஆம் ஆண்டு, காப்பீட்டு நிறுவனங்களால் 1128 கோடி ரூபாய் பயிர் காப்பீட்டு இழப்பீட்டு தொகையாக 6 லட்சத்து 7 ஆயிரத்து 822 விவசாயிகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு, 996 கோடி ரூபாய் விடுவிக்கப்பட்டுள்ளது. இதில் 3 லட்சத்து 72 ஆயிரத்து 717 விவசாயிகளின் வங்கிக் கணக்கில் 747 கோடி ரூபாய் நேரடியாக வரவு வைக்கப்பட்டுள்ளது. 

மீதம் உள்ள இழப்பீட்டுத் தொகையினை விவசாயிகளின் வங்கிக் கணக்கில் வரவு வைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
 
2018-19ஆம் ஆண்டு நடப்பாண்டில் பிரதமர் பயிர் காப்பீட்டுத் திட்டத்தில் இதுவரை 23 லட்சம் விவசாயிகள் 34 லட்சம் ஏக்கர் பயிர் சாகுபடி பரப்பில் பதிவு செய்துள்ளார்கள். எதற்காக சொல்கிறேன் என்றால், இயற்கை சீற்றத்தினால், பருவமழை பொய்க்கின்ற போது, வறட்சியால் ஏற்படுகின்ற பாதிப்பு விவசாயிகளை பாதிக்கின்றது. ஆகவே, அப்படிப்பட்ட பாதிப்பிலிருந்து விவசாயிகள் மீள்வதற்காக காப்பீட்டுத் திட்டத்தின் வாயிலாக விவசாயிகளுக்கு இழப்பீட்டுத் தொகை பெற்றுத்தரப்படும் என்பதை தங்கள் வாயிலாக உறுப்பினர் அவர்களுக்கு தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com