ஏழைத் தொழிலாளர்களுக்கு ரூ.2 ஆயிரம் நிதி தேர்தலுக்காக அல்ல!: திமுக புகாருக்கு முதல்வர் பழனிசாமி விளக்கம்

ஏழைத் தொழிலாளர்களுக்கு சிறப்பு நிதியுதவியாக ரூ.2 ஆயிரம் அறிவிக்கப்பட்டது தேர்தலுக்காக அல்ல என்று முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி விளக்கம் அளித்துள்ளார்.
 சட்டப்பேரவையில் செவ்வாய்க்கிழமை உரையாற்றிய முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி.
 சட்டப்பேரவையில் செவ்வாய்க்கிழமை உரையாற்றிய முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி.


ஏழைத் தொழிலாளர்களுக்கு சிறப்பு நிதியுதவியாக ரூ.2 ஆயிரம் அறிவிக்கப்பட்டது தேர்தலுக்காக அல்ல என்று முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி விளக்கம் அளித்துள்ளார்.
சட்டப் பேரவையில் நிதிநிலை அறிக்கை மீதான விவாதம் செவ்வாய்க்கிழமையும் தொடர்ந்து நடைபெற்றது. அதில், திமுக சார்பில் க.பொன்முடி பேசினார். அப்போது நடந்த விவாதம்:-
க.பொன்முடி: தொழிலாளர்களுக்காக அறிவித்துள்ள ரூ.2 ஆயிரம் நிதி தேர்தலுக்காக அறிவிக்கப்பட்டதாக பத்திரிகைகள் விமர்சித்துள்ளன. எங்களது கட்சியின் (திமுக) தலைவர் கூட, பட்ஜெட்டை நிழல் பட்ஜெட் என விமர்சித்தார். 
அப்போது எனக்கு அர்த்தம் புரியவில்லை. இப்போதுதான் புரிகிறது. நிதியமைச்சர் தாக்கல் செய்தது நிழல் பட்ஜெட். முதல்வர் திங்கள்கிழமை வெளியிட்டது (ரூ.2 ஆயிரம் அறிவிப்பு) நிஜ பட்ஜெட்.
துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்: நாங்கள் நிஜ பட்ஜெட்டை தாக்கல் செய்ததால் தான் ஆண்ட கட்சியே மீண்டும் ஆட்சியைப் பிடித்தது என்ற வரலாற்றைப் படைத்தோம். நிஜ பட்ஜெட்டை தாக்கல் செய்ததால் நாங்கள் ஆளும் கட்சி வரிசையிலும், நீங்கள் (திமுக) எதிர்க்கட்சி வரிசையிலும் உட்கார்ந்து இருக்கிறீர்கள்.
முதல்வர் பழனிசாமி: ரூ.2 ஆயிரம் திட்டமானது, ஏழை மக்களுக்காக வழங்கப்படும் திட்டமாகும். தொழிலாளர்கள் காக்கப்பட வேண்டும். பல்வேறு மாவட்டங்கள் வறட்சி மாவட்டங்களாக உள்ளன. விவசாய தொழிலாளர்களுக்கு போதுமான வருமான கிடைக்கவில்லை.
கஜா புயலால் பாதிக்கப்பட்ட பலரும் போராட்டம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்காத காரணத்தால் வறுமையில் உள்ளனர். இதையெல்லாம் ஆராய்ந்துதான் திட்டத்தை அறிவித்துள்ளோம். இது தேர்தலுக்காக அல்ல. இந்தத் திட்டத்தின்படி வறுமைக் கோட்டுக்குக் கீழுள்ள அனைவருக்கும்  கொடுக்கப்படுகிறது. தமிழகத்தில் இருக்கும் உழைப்பாளிகள், தொழிலாளர்களுக்கு அளிக்கப்படும் நிதியை தவறு என்று சொல்கிறீர்களா?
க.பொன்முடி: தொழிலாளர்களுக்கான இந்த அறிவிப்பு, 2 நாள்களுக்கு முன்பு தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் ஏன் வரவில்லை. 
உங்களுக்குள் (முதல்வர், துணை முதல்வர்) என்ன பிரச்னை என்று எங்களுக்குத் தெரியாது. வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ளவர்களுக்கே நிதி வழங்கப்படுகிறது என்றாலும், அது அறிவிக்கப்பட்ட முறையைத்தான் குற்றம்சாட்டுகிறோம்.
ஓ.பன்னீர்செல்வம்: பேரவை விதி 110-ன் கீழ் முதல்வர் எப்போது வேண்டுமானாலும் அறிவிப்புகளை வெளியிட உரிமை உள்ளது. அதன்படியே அறிவிப்பு செய்யப்பட்டது.

பிப்ரவரி இறுதிக்குள் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும்
வறுமைக்கோட்டுக்குக் கீழ் உள்ள 60 லட்சம் குடும்பங்களுக்கு பிப்ரவரி இறுதிக்குள் ரூ.2 ஆயிரம் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும் என்று, முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி கூறினார்.
சட்டப்பேரவையில் 110-ஆவது விதியின் கீழ் வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ள 60 லட்சம் குடும்பங்களுக்கு ரூ.2 ஆயிரம் வழங்கப்படும் என்று, முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி திங்கள்கிழமை அறிவித்திருந்தார்.
இந்த நிலையில் பேரவையில் செவ்வாய்க்கிழமை நிதிநிலை அறிக்கை மீதான விவாதத்தில் திமுக உறுப்பினர் ஆஸ்டின் பேசியது:
 ஏழைகளுக்கு ரூ.2 ஆயிரம் வழங்கும் திட்டத்துக்கான நிதி 2018-19-ஆம் நிதியாண்டின் துணை மானியக் கோரிக்கையில்  ஒதுக்கீடு செய்வதாக அறிவித்துள்ளீர்கள். 2019-ஆம் ஆண்டின் நிதி ஒதுக்கீடு செய்தாலாவது நிதியை வழங்குவதற்கு கால அவகாசம் இருக்கும் என்றார்.
அப்போது முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி குறுக்கிட்டு பேசியது: திமுக உறுப்பினர் அதைப் பற்றி கவலைப்பட வேண்டாம். பிப்ரவரி இறுதிக்குள் இந்தத் திட்டத்தின் கீழ் பயன்பெறும் அனைவரின் வங்கிக் கணக்கிலும் தலா ரூ.2 ஆயிரம் செலுத்தப்படும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com