30 அடி மேம்பாலத்திலிருந்து சொகுசுப் பேருந்து கவிழ்ந்து விபத்து

சேலத்தில் புதன்கிழமை அதிகாலை 28 பயணிகளுடன் பொள்ளாச்சி நோக்கிச் சென்ற தனியார் சொகுசுப் பேருந்து கொண்டலாம்பட்டி மேம்பாலத்தில் இருந்து 30 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், பயணி ஒருவர்
சேலம் கொண்டலாம்பட்டி பட்டர்பிளை மேம்பாலத்தில் இருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளான தனியார் சொகுசுப் பேருந்து.  (நடுவில்) பேருந்து கவிழ்ந்ததில் கீழே விழுந்துக் கிடக்கும் சரக்கு மூட்டைகள்.  
சேலம் கொண்டலாம்பட்டி பட்டர்பிளை மேம்பாலத்தில் இருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளான தனியார் சொகுசுப் பேருந்து.  (நடுவில்) பேருந்து கவிழ்ந்ததில் கீழே விழுந்துக் கிடக்கும் சரக்கு மூட்டைகள்.  


சேலத்தில் புதன்கிழமை அதிகாலை 28 பயணிகளுடன் பொள்ளாச்சி நோக்கிச் சென்ற தனியார் சொகுசுப் பேருந்து கொண்டலாம்பட்டி மேம்பாலத்தில் இருந்து 30 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், பயணி ஒருவர் உயிரிழந்தார். 16 பேர் காயமடைந்தனர்.
 பெங்களூரிலிருந்து 28 பயணிகளை ஏற்றிக்கொண்டு தனியார் சொகுசுப் பேருந்து செவ்வாய்க்கிழமை இரவு  பொள்ளாச்சி நோக்கி புறப்பட்டது.  இப் பேருந்தில் 3 டன் அளவுக்கு சரக்கு ஏற்றப்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது.  
பேருந்தை சேலம் மாவட்டம்,  ஜலகண்டாபுரம் பகுதியைச் சேர்ந்த சரவணன் (35) ஓட்டி வந்துள்ளார்.  இந்தப் பேருந்து அதிகாலை 4.30 மணி அளவில் சேலத்தைக் கடந்து, கொண்டலாம்பட்டி பட்டர்பிளை மேம்பாலத்தில் சென்ற போது,  எதிர்பாராதவிதமாக  30 அடி உயரத்தில் இருந்து பள்ளத்தில் கவிழ்ந்தது. இதனால்,  பேருந்தில் சிக்கிய பயணிகள் கூச்சலிட்டனர்.  
இதையடுத்து, அருகில் இருந்தவர்கள் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர்.
இதைத் தொடர்ந்து,  போலீஸார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.  சேலம் மாநகர காவல் ஆணையர் சங்கர்,  துணை ஆணையர்கள் தங்கதுரை,  சியாமளா தேவி ஆகியோர் விரைந்து வந்து மீட்புப் பணிகளை துரிதப்படுத்தினர்.  
மேம்பாலத்தின் கீழ்ப்பகுதியில் முள்புதர் அதிகமாக இருந்ததால், பயணிகளை மீட்பதில் சிரமம் ஏற்பட்டது.  இதில் இடிபாடுகளில் சிக்கியவர்களை போலீஸார் மீட்டனர் . திருப்பூரைச் சேர்ந்த தனசேகரன் (42) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். 
இச்சம்பவத்தில் பேருந்து ஓட்டுநர் சரவணன்,  பெங்களூரைச் சேர்ந்த பைசல் கான், சிவசங்கர், ஜெயலட்சுமி,  பிரபாகரன், திருச்சியைச் சேர்ந்த சாந்தி, கிருஷ்ணகிரியைச் சேர்ந்த ரவி, பழனியைச் சேர்ந்த ஈஸ்வரி,  ஈரோட்டை சேர்ந்த அஸ்வின், துரைசாமி,  வாணியம்பாடியைச் சேர்ந்த சையத்,  திருப்பூரை சேர்ந்த வாசுதேவன், அபினாஷ், தில் முகமது உள்ளிட்ட 16 பேர் காயமடைந்தனர்.
இதையடுத்து, காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு, சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.  இதில் 4 பேருக்கு கை கால்களில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
இந்த விபத்துக்கு அளவுக்கதிகமான வேகமும், பேருந்து கூரையின் மீது ஏற்றப்பட்ட சரக்குகளுமே காரணம் எனக் கூறப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com