சென்னைக்கு தினமும் 550 மில்லியன் லிட்டர் குடிநீர்: அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உறுதி

சென்னையில் குடிநீர்த் தட்டுப்பாட்டைப் போக்க தினமும் 550 மில்லியன் லிட்டர் குடிநீர் வழங்கப்படும் என்று உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உறுதி அளித்தார். சட்டப் பேரவையில் புதன்கிழமை கேள்வி நேரத்
சென்னைக்கு தினமும் 550 மில்லியன் லிட்டர் குடிநீர்: அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உறுதி


சென்னையில் குடிநீர்த் தட்டுப்பாட்டைப் போக்க தினமும் 550 மில்லியன் லிட்டர் குடிநீர் வழங்கப்படும் என்று உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உறுதி அளித்தார். சட்டப் பேரவையில் புதன்கிழமை கேள்வி நேரத்துக்குப் பிறகு குடிநீர்த் தட்டுப்பாடு குறித்த பிரச்னையை எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் எழுப்பினார். அப்போது, அவர் பேசியது:-
தமிழகத்தில் குடிநீர் பஞ்சம் மிக கடுமையாகும் ஒரு சூழ்நிலை உருவாகியுள்ளது. சென்னை குடிநீர் வடிகால் வாரியத்தின் கட்டுப்பாட்டில் இருக்கக்கூடிய பூண்டி ஏரி, சோழவரம் ஏரி, ரெட்ஹில்ஸ் ஏரி, செம்பரம்பாக்கம் ஏரி ஆகிய அனைத்து ஏரிகளின் நீர் மட்டம் படுபாதாளத்திற்கு போய் விட்டது.
குறிப்பாக, சென்னை மாநகர மக்களுக்குக் கிடைக்க வேண்டிய மழை அளவு 55 சதவீதம் குறைந்து விட்டதால் குடிநீருக்கு பெரும் அவதிப்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. 
ஏற்கெனவே, இந்தாண்டு நிதி நிலை அறிக்கையில் தடையின்றி தண்ணீர் வழங்க வேண்டுமென்பதற்காக ரூ.157 கோடி  ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதாக அறிவிப்பு வெளியிடப்பட்டு இருக்கிறது. இது போதாது. மேலும், கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் ஏறக்குறைய ரூ.15 ஆயிரம் கோடிக்கு குடிநீர் திட்டங்களை நிறைவேற்றப் போவதாக நிதி ஒதுக்கீடுகள் செய்யப்பட்டன.
எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா அறிவிப்புகளில் ஐந்து கடல் நீரை குடிநீராக்கும் திட்டங்கள் அறிவிக்கப்பட்டன. எனவே, குடிநீர்த் திட்டங்களின் நிலைகள் குறித்து அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்றார்.
அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பதில்: இதற்கு, உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அளித்த பதில்:
கடந்த 2011 முதல் 2016 வரையிலான 5 ஆண்டுகளில் குடிநீர் திட்டப் பணிகளுக்கென ரூ.14,708 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு வரலாற்று சாதனை படைக்கப்பட்டது. 
வரும் மே மற்றும் ஜூன் மாதங்களில் குடிநீர் தட்டுப்பாட்டைப் போக்க மோட்டார் திறனை அதிகரித்தல், ஆழ்துளைக் குழாய் கிணறுகளை சுத்தப்படுத்துதல், ஆழப்படுத்துதல், புதிய ஆழ்துளைக் குழாய் கிணறுகள் அமைத்தல், லாரிகள் மூலம் குடிநீர் வழங்குதல் உள்ளிட்ட 39 ஆயிரத்து 257 பணிள் மேற்கொள்ள ரூ.1015.34 கோடியில் செயல் திட்டம் தயாரிக்கப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
கடந்த 142 ஆண்டுகளில் இல்லாத வகையில் வரலாறு காணாத கடும் வறட்சி ஏற்பட்டுள்ளது. இந்தச் சூழ்நிலையில், குடிநீர்ப் பற்றாக்குறையைச் சமாளிக்க பல முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன. 
நிகழாண்டில் கிருஷ்ணா நீரை தமிழகம் பெறுவதற்காக ஆந்திர மாநில அரசிடம் கோரிக்கை வைத்தோம். அதன்படி, கண்டலேறு நீர்த்தேக்கத்தில் இருந்து கடந்த 10-ஆம் தேதி முதல் பூண்டி நீர்தேக்கத்துக்கு கிருஷ்ணா நதிநீர் பெறப்படுகிறது. ஜனவரி முதல் ஏப்ரல் வரையிலான காலத்தில் 2 டி.எம்.சி., தண்ணீர் கிடைக்கப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடுமையான வறட்சி ஏற்பட்டாலும், தமிழக அரசின் பல்வேறு குடிநீர் திட்டப் பணிகளால் சென்னை மாநகருக்கு வரும் டிசம்பர் வரை தினமும் 500 மில்லியின் லிட்டர் குடிநீர் அளிக்கப்படும் என்று அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உறுதி அளித்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com