புதுச்சேரியில் பரபரப்பு: பாதுகாப்புப் படையினர் பாதுகாப்புடன் தில்லி புறப்பட்டார் கிரண்பேடி!

கடந்த சில நாள்களாக வெளியூர் பயணங்களில் இருந்த அவர் புதன்கிழமை காலை சட்டப்பேரவைக்கு வந்தார். உடனடியாக அமைச்சர்களைப் பேரவைக்கு
புதுச்சேரியில் பரபரப்பு: பாதுகாப்புப் படையினர் பாதுகாப்புடன் தில்லி புறப்பட்டார் கிரண்பேடி!


புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண் பேடியைக் கண்டித்து, ஆளுநர் மாளிகை வாயிலில் முதல்வர் வே.நாராயணசாமி தலைமையில் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் 2வது நாளாக தர்னாவில் ஈடுபட்டு வரும் நிலையில், ஆளுநர் மாளிகையில் இருந்து வெளியே வந்த துணை நிலை ஆளுநர் கிரண்பேடி பாதுகாப்புப்படையினரின் பாதுகாப்புடன் இன்று தில்லி புறப்பட்டு சென்றார். 

புதுச்சேரியில் யாருக்கு கூடுதல் அதிகாரம் என்பதில் ஆளுநர் கிரண் பேடி- முதல்வர் நாராயணசாமி இடையே கடந்த 3 ஆண்டுகளாக பனிப்போர் நிலவி வருகிறது. இந்நிலையில், மக்கள் நலத்திட்டங்களின் கோப்புகளுக்கு துணைநிலை ஆளுநர் கிரண்பேடி ஒப்புதல் அளிக்காதது, கட்டாய தலைக்கவச சட்டத்தை அமல்படுத்த ஆளுநர் கிரண் பேடி, டிஜிபி சுந்தரி நந்தாவிடம் உத்தரவிட்டார். தனது கட்டுப்பாட்டில் உள்ள காவல் துறையில் ஆளுநர் கிரண் பேடி தலையிட்டதாலும், தலைக்கவசம் அணியாமல் இரு வாகனங்களை ஓட்டியதாக, 3 நாள்களில் 30 ஆயிரம் பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டதாலும், இதன்மூலம் வரும் மக்களவைத் தேர்தலில் காங்கிரஸுக்கு எதிராக மக்களின் கவனம் திரும்பும் என முதல்வர் நாராயணசாமி கருதினார்.

கடந்த சில நாள்களாக வெளியூர் பயணங்களில் இருந்த அவர் புதன்கிழமை காலை சட்டப்பேரவைக்கு வந்தார். உடனடியாக அமைச்சர்களைப் பேரவைக்கு வரவழைத்து ஆலோசனை நடத்தினார். 

பின்னர், முதல்வர் நாராயணசாமி கருப்புச் சட்டை, வேட்டி அணிந்தார். அமைச்சர்கள் சிலரும் கருப்புச் சட்டைக்கு மாறினர். எம்எல்ஏக்கள் கருப்புத் துண்டு அணிந்தனர். பின்னர், பேரணியாக ஆளுநர் மாளிகைக்குக் சென்ற அவர்கள், வாயிலில் அமர்ந்து தர்னாவில் ஈடுபட்டனர்.

அப்போது, அங்கு திரண்ட காங்கிரஸ் நிர்வாகிகள், தொண்டர்களை போலீஸார் தடுத்து நிறுத்தினர். இதனால், அவர்கள் ஆளுநருக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.

முதல்வர் நாராயணசாமி, அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் உள்ளிட்டோர் ஆளுநர் மாளிகை முன் விடியவிடிய நடத்தி வரும் தர்னா போராட்டம் 2வது நாளாக இன்று வியாழக்கிழமை (பிப்.14) தொடர்கிறது. இரவு ஆளுநர் மாளிகைக்கு வந்த டிஜிபி சுந்தரி நந்தா, பேச்சுவார்த்தை நடத்தியும் போராட்டத்தை கைவிட முதல்வர் நாராயணசாமி மறுத்துவிட்டார்.

இந்நிலையில், முதல்வர் நாராயணசாமி 2வது நாளாக தர்னாவில் ஈடுபட்டுள்ள நிலையில் புதுச்சேரியில் சட்ட ஒழுங்கு பிரச்னை ஏற்பட்டு விடக் கூடாது என்பதால் தலைமைச்செயலாளரின் கோரிக்கையை ஏற்று உள்துறை அமைச்சகம் பாதுகாப்பு படைகளை அனுப்பி வைத்துள்ளது.

சென்னை, நெய்வேலியிலிருந்து புதுச்சேரிக்கு அதிவிரைவு அதிரடிப்படை மற்றும் தொழில் பாதுகாப்பு படையினர் ஆளுநர் மாளிகையில் குவிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், அதிவிரைவு அதிரடிப்படை, தொழில் பாதுகாப்புப்படையினரின் பாதுகாப்புடன் ஆளுநர் மாளிகையில் இருந்து வெளியே வந்த ஆளுநர் கிரண்பேடி, அவசரமாக தில்லி புறப்பட்டுச் சென்றார். முதல்வர் தர்னா போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் கிரண்பேடியின் திடீர் தில்லி பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

ஆளும் கட்சியினர் திடீர் தர்னா போராட்டத்தால் புதுச்சேரி அரசியலில் உச்சகட்ட பரபரப்பு நிலவி வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com