தீவிரவாதிகள் தாக்குதலில் உயிரிழந்த ராணுவ வீரர்களுக்கு வீர வணக்கம்: சிவச்சந்திரன் உடலுக்கு மத்திய அமைச்சர்கள் அஞ்சலி

திருச்சி விமான நிலையத்திற்கு சனிக்கிழமை கொண்டுவரப்பட்ட அரியலூர் வீரர் சிவச்சந்திரன் உடலுக்கு மத்திய அமைச்சர்கள் அஞ்சலி செலுத்தினர்.
தீவிரவாதிகள் தாக்குதலில் உயிரிழந்த ராணுவ வீரர்களுக்கு வீர வணக்கம்: சிவச்சந்திரன் உடலுக்கு மத்திய அமைச்சர்கள் அஞ்சலி

திருச்சி விமான நிலையத்திற்கு சனிக்கிழமை கொண்டுவரப்பட்ட அரியலூர் வீரர் சிவச்சந்திரன் உடலுக்கு மத்திய அமைச்சர்கள் அஞ்சலி செலுத்தினர்.
ஜம்மு-காஷ்மீர் மாநிலம், புல்வாமாவில் நிகழ்த்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலில் உயிரிழந்த தமிழகம், கேரளம், கர்நாடகத்தைச் சேர்ந்த 4 சிஆர்பிஎஃப் வீரர்களின் உடல்கள் புதுதில்லியிலிருந்து இந்திய விமானப் படைக்குச் சொந்தமான விமானத்தில் கொண்டுவரப்படும் என அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து ஆயிரக்கணக்கான மக்கள் தேசியக் கொடியுடன் விமான நிலைய வளாகத்தில் குவியத் தொடங்கினர்.
விமானநிலையத்தில் விஐபி ஓய்விடம் அருகிலுள்ள திறந்தவெளி பகுதியில் 4 வீரர்களின் உடல்களை வைக்க ஏற்பாடு செய்யப்பட்டது. பின்னர், அரியலூர் மாவட்டம், கார்குடியைச் சேர்ந்த வீரர் சிவச்சந்திரனின் உடலை மட்டுமே பொதுமக்கள் பார்வைக்கு வைக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டது. அங்கு சிவச்சந்திரனின் புகைப்படம் வைக்கப்பட்டு மாலை அணிவிக்கப்பட்டிருந்தது.
காலை 10.45 மணிக்கு திருச்சி விமான நிலையம் வந்த பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், விஐபி ஓய்விடத்துக்கு சென்று ஏற்பாடுகள் குறித்து அதிகாரிகளுடன் கேட்டறிந்தார். பின்னர், முற்பகல் 11.15 மணிக்கு வீரர்களின் உடல்களை சுமந்த இந்திய விமானப்படை விமானம், திருச்சி விமான நிலையத்தில் தரை இறங்கியது.
விமானத்தில் இருந்து சிவச்சந்திரன் உடல் மட்டும் இறக்கப்பட்டது. இதர 3 வீரர்களின் உடல்கள் அதே விமானத்தில் மதுரை, கோழிக்கோடு, பெங்களூருக்கு கொண்டு செல்லும் வகையில் தயார் செய்யப்பட்டது.
முற்பகல் 11.54 மணிக்கு சிவச்சந்திரனின் உடல் வெளியே கொண்டுவரப்பட்டு அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. முதலில் சிவச்சந்திரன் உடலுக்கு அவருடைய சித்தப்பா கண்ணன், மைத்துனர் அருண், ஜெயபால், குணவேல் உள்ளிட்டோர் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர்.
முன்னதாக தமிழகக் காவல்துறையின் சார்பில், ஆயுதப்படை காவல் உதவி ஆய்வாளர் மற்றும் 9 காவலர்கள் அடங்கிய குழு வீரவணக்கம் செய்து பாதுகாப்பு மரியாதை செலுத்தியது. இதனைத் தொடர்ந்து, மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
பின்னர், மத்திய திறன்மேம்பாட்டு மற்றும் தொழில்முனைவோர் இணை அமைச்சர் அனந்தகுமார் ஹெக்டே, தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், தமிழக அமைச்சர்கள் வெல்லமண்டி என். நடராஜன், எஸ். வளர்மதி, திருச்சி மக்களவை உறுப்பினர் ப.குமார், எம்எல்ஏ-க்கள் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, அ. சௌந்தரபாண்டியன், செ.ஸ்டாலின்குமார், எம். பரமேஸ்வரி, அம்மா மக்கள் முன்னேற்றக் கழக மாவட்டச் செயலர் ஜெ. சீனிவாசன், எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை மாவட்ட செயலர் ஆர்.சி. கோபி, டாக்டர் எம்.ஏ. அலீம் உள்ளிட்டோர் மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.
பின்னர், முப்படையினர் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். மத்திய மண்டலக் காவல்துறைத் தலைவர் வரதராஜு, திருச்சி மாநகரக் காவல் ஆணையர் அ. அமல்ராஜ், டிஐஜி ஆர். லலிதா லட்சுமி, சிஆர்பிஎப் டி.ஐ.ஜி. சோனல் மிஸ்ரா, மாவட்ட ஆட்சியர்கள் திருச்சி கு.ராசாமணி, அரியலூர் மு. விஜயலட்சுமி, காவல் கண்காணிப்பாளர்கள் திருச்சி ஜியாவுல்ஹக், அரியலூர் ஸ்ரீனிவாசன் மற்றும் ஏராளமான பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர்.
இதைத் தொடர்ந்து, சிவச்சந்திரனின் உடல் ராணுவ வாகனத்தில் ஏற்றப்பட்டு கார்குடிக்கு கொண்டு செல்லப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com