முதல்வரின் கோரிக்கைகளை மக்கள் முன்னிலையில் விவாதிக்கத் தயார்

புதுவை முதல்வர் நாராயணசாமியின் கோரிக்கைகள் தொடர்பாக, பொதுமக்கள் முன்னிலையில் விவாதம் நடத்தத் தயாராக உள்ளதாக துணைநிலை ஆளுநர் கிரண் பேடி தெரிவித்தார்.
முதல்வரின் கோரிக்கைகளை மக்கள் முன்னிலையில் விவாதிக்கத் தயார்

புதுவை முதல்வர் நாராயணசாமியின் கோரிக்கைகள் தொடர்பாக, பொதுமக்கள் முன்னிலையில் விவாதம் நடத்தத் தயாராக உள்ளதாக துணைநிலை ஆளுநர் கிரண் பேடி தெரிவித்தார்.
 புது தில்லியில் முகாமிட்டுள்ள ஆளுநர் கிரண் பேடி தனது கட்செவி அஞ்சல் மூலம் புதுவை மக்களுக்கு சனிக்கிழமை வெளியிட்ட கடிதத்தின் விவரம்: கடந்த இரண்டரை ஆண்டுகளாக புதுவை மக்களுக்கு சுத்தமான குடிநீர், வேளாண்மைக்கான வளர்ச்சிப் பணி உள்பட பல்வேறு துறைகளில் ஆளுநர் மாளிகை கடமையாற்றி வருகிறது. நலத் திட்டப் பணிகள் அனைத்தும் புதுவை சட்டப்பேரவையில், நிதிநிலை அறிக்கையில் ஒதுக்கப்பட்ட நிதியைக் கொண்டே செயல்படுத்தப்படுகின்றன.
 விவசாயிகளின் நலன் கருதி, தனியார் நிறுவனங்களில் நிதியைக் கொடையாகப் பெற்று பாசனக் கால்வாய்களைச் சீரமைத்துள்ளோம். இதுவரை என்னால் (ஆளுநர்) நடத்தப்பட்ட 216 கள ஆய்வுகளில் மக்களின் பிரச்னைகளுக்கு தீர்வுகள் காணப்பட்டுள்ளன. இதற்கு உறுதுணையாக இருந்த புதுவை மக்களுக்கு எனது நன்றி.
 ஏழைகளுக்கான நிதியை வேறு திட்டங்களுக்கு மடைமாற்றம் செய்யக் கூடாது என்பதில் ஆளுநர் மாளிகை கவனமாக இருந்து வருகிறது. எந்தத் திட்டத்துக்கு நிதி ஒதுக்கப்பட்டதோ, அந்தத் திட்டத்துக்கே அதைப் பயன்படுத்த வேண்டும். சரியான நிதி நிர்வாகம் காரணமாக, சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தில் தொழிலாளர்களின் வருங்கால வைப்பு நிதி ரூ. 1 கோடி சேமிக்கப்பட்டுள்ளது. மானிய நிதி சேமிக்கப்படுவதால், மற்ற தொழிலாளர்களுக்கு பணிக் கொடை வழங்க முடிகிறது. மானிய உதவிக்கான நிதி விதிகள் ஏற்கெனவே மீறப்பட்டுள்ள நிலையில், தற்போது அது தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. இந்த விதிகளை முதல்வர்தான் தொடர்ந்து மீறி வருகிறார்.
 தலைமைச் செயலர், நிதித் துறைச் செயலரின் சிறந்த நிர்வாகத்தால் ஏழைகளின் இலவச அரிசிக்கான நிதி பாதுகாக்கப்பட்டுள்ளது. இல்லையெனில், அந்த நிதி மடை மாற்றம் செய்யப்பட்டிருக்கும்.
 நிதி விவகாரம் தொடர்பாக பொதுமக்கள் மத்தியில் முதல்வர், அமைச்சர்களுடன் விவாதம் நடத்தத் தயாராக உள்ளேன். தலைமைச் செயலர், நிதித் துறைச் செயலர், சட்டப்பேரவை உறுப்பினர்கள் இந்தக் கூட்டத்தில் பங்கேற்க வேண்டும். விவாதம் நடத்துவதற்கான இடத்தை முதல்வரே தேர்வு செய்யலாம். வெளிப்படைத்தன்மை, ஏழைகளுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதில் ஆளுநர் மாளிகை உறுதியாக இருக்கிறது. சாலை விபத்துகளில் அதிக எண்ணிக்கையில் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாகவும் விவாதம் நடத்தலாம்.
 முதல்வர் நாராயணசாமியுடன் வருகிற 21-ஆம் தேதி காலை 10 மணிக்கு பேச்சுவார்த்தை நடைபெறும். போராட்டம் தொடர்பாக ஆளுநர் மாளிகையைச் சுற்றியுள்ள சாலைகளில் போக்குவரத்து இடையூறு ஏற்பட்டதற்காக பொதுமக்களிடம் நான் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன் என அந்தக் கடிதத்தில் அவர் கூறியுள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com