மனநல காப்பகத்தில் உள்ளவர்களுக்கு வாக்காளர் அட்டை! தமிழகத்தில் முதன் முறை

சென்னையில் உள்ள அரசு மனநல காப்பகத்தில் சிகிச்சை பெற்று குணமடைந்தவர்களுக்கு வாக்களிக்க வாய்ப்பு அளிக்கும் வகையில் அவர்களது பெயர்களை வாக்காளர் பட்டியலில் இணைத்து

சென்னையில் உள்ள அரசு மனநல காப்பகத்தில் சிகிச்சை பெற்று குணமடைந்தவர்களுக்கு வாக்களிக்க வாய்ப்பு அளிக்கும் வகையில் அவர்களது பெயர்களை வாக்காளர் பட்டியலில் இணைத்து அடையாள அட்டைகள் பெற்றுத் தர திட்டமிடப்பட்டுள்ளது.
 அதன்படி, தன்னார்வ அமைப்பு ஒன்றுடன் இணைந்து அதற்கான நடவடிக்கைகளை மனநல காப்பகம் மேற்கொள்ள உள்ளது.
 முதல்கட்டமாக வாக்களிக்கத் தகுதியான நபர்கள் எவர் என்பதை ஆய்வு செய்து அதற்கான பட்டியல் தயாரிக்கப்படும். அதைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட நபர்களின் முடிவெடுக்கும் திறன் குறித்து பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு அவர்களது பெயர்கள் இறுதி செய்யப்படும்.
 மனநல பிரச்னைகளில் இருந்து மீண்டு வந்தவர்களுக்கு மறுவாழ்வு அளிப்பது வழக்கமான ஒன்றுதான் என்றும், அதேவேளையில், அவர்களுக்கு வாக்குரிமை பெற்றுத் தருவது என்பது மாநிலத்திலேயே இதுவே முதன்முறை என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
 கீழ்ப்பாக்கம் மனநல காப்பகத்தில் சுமார் 900-க்கும் மேற்பட்ட நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். பொதுவாகவே, அங்கு பல்வேறு வகையான மனநல பிரச்னைகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சையளிக்கப்படுகிறது. அவர்களில் பெரும்பாலானோர் பூரண குணமடைந்து வீடு திரும்புகின்றனர். உறவினர்களால் கைவிடப்பட்ட சிலர் அங்கேயே தங்கி தொழிற்பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
 இந்நிலையில், அவ்வாறு குணமடைந்து சரியான மன நிலையில் உள்ளவர்களுக்கு வாக்களிப்பதற்கு உரிய வாய்ப்புகளைப் பெற்றுத் தர திட்டமிடப்பட்டுள்ளது. "டிúஸபிலிட்டி ரைட்ஸ் அல்லயன்ஸ்' என்ற தன்னார்வ அமைப்பானது மனநல காப்பகத்துடன் இணைந்து அதற்கான முயற்சிகளை முன்னெடுக்க உள்ளது.
 ஏற்கெனவே, மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தாவில் உள்ள மனநல மருத்துவக் காப்பகத்தில் இதுபோன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. அதன் தொடர்ச்சியாக தற்போது கீழ்ப்பாக்கம் மனநல காப்பகத்திலும் அத்தகைய திட்டம் நடைமுறைப்படுத்தப்பட இருக்கிறது.
 இதுகுறித்து மனநல காப்பக மருத்துவமனையின் இயக்குநர் டாக்டர் பூர்ண சந்திரிகா கூறியதாவது:
 கீழ்ப்பாக்கம் மனநல காப்பகத்தில் 24 வார்டுகள் உள்ளன. ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு வகையான மன நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.
 குற்றப் பின்னணி கொண்ட மன நோயாளிகளும் இங்கு உள்ளனர். அதாவது குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டு, அதனால் உளவியல் ரீதியாக ஏற்பட்ட பாதிப்பால் மன நலம் குன்றியவர்களுக்கும் சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.
 அவ்வாறு சிகிச்சை பெற்று குணமடைந்தவர்களுக்கு மட்டும் வாக்காளர் அடையாள அட்டை பெற்றுத் தரும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளோம்.
 மனநல காப்பகத்தின் முகவரி அல்லது அவர்களது சொந்த முகவரியின் அடிப்படையில் அதற்கான விண்ணப்பங்கள் அனுப்பப்படும். அடுத்தகட்டமாக அவர்களுக்கு ஆதார் அட்டை பெற்றுத்தரவும் திட்டமிட்டுள்ளோம் என்றார் அவர்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com