அதிமுக - பாமக கூட்டணி: பாமக முன்வைத்த 10 கோரிக்கைகள் என்ன தெரியுமா? 

மக்களவைத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைப்பதற்கான அதிமுக - பாமகவுடனான கூட்டணி குறித்த பேச்சுவார்த்தையில் ஒப்பந்தம் ஏற்பட்டு
அதிமுக - பாமக கூட்டணி: பாமக முன்வைத்த 10 கோரிக்கைகள் என்ன தெரியுமா? 

மக்களவைத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைப்பதற்கான அதிமுக - பாமகவுடனான கூட்டணி குறித்த பேச்சுவார்த்தையில் ஒப்பந்தம் ஏற்பட்டு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளது. 

மக்களவைத் தேர்தலுக்கான அதிமுக சார்பில் மெகா கூட்டணி தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஓரிரு நாளில் வெளியிடப்படும். உறுதியாக ஓரிரு தினங்களில் உங்கள் எண்ணங்களை பூர்த்தி செய்யும் வகையில் நல்ல முறையில் அந்த அறிவிப்பு அமையும் என்று அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்திருந்தார். 

இந்நிலையில், ஆளும் அதிமுக அரசை கடுமையாக விமர்சித்து வந்த பாமக, இன்று அக்கட்சியுடன் முறைப்படி கூட்டணி அமைத்துள்ளது. இதற்கான ஒப்பந்தம் சென்னை நந்தனத்தில் உள்ள கிரவுன் பிளாசா ஹோட்டலில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு சுமூகமாக முடிவடைந்த நிலையில் ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.

அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய துணை முதல்வர் ஓ.பி.எஸ், “பாமகவுக்கு 7 மக்களவையில் தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. மாநிலங்களவையில் 1 இடம் அளிக்கப்பட்டுள்ளது. இதுதவிர, 21 சட்டப்பேரவை இடைத்தேர்தலிலும் அதிமுகவுக்கு பாமக ஆதரவு அளிக்கும். 7 தொகுதிகள் என்னென்ன என்பது குறித்து பின்னர் அறிவிக்கப்படும்” என்றும் தெரிவித்தார்.

அடுத்து பேசிய பாமக நிறுவனர் ராமதாஸ், “இந்த அதிமுக-பாமக கூட்டணி மக்கள் நல கூட்டணி, மெகா கூட்டணியாக அமையும். 40 தொகுதிகளிலும் வெற்றிப் பெறும். பாமக சார்பில் ஜாதி வாரியான கணக்கெடுப்பு நடத்த வேண்டும், பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட 10 கோரிக்கைகளை முன்வைத்தே அதிமுக கூட்டணியில் இணைந்துள்ளோம். அரசு அதனை நிறைவேற்றும் என நம்புகிறோம்” என்றார்.

தமிழக உரிமைகளை மீட்டெடுக்க அதிமுக அரசிடம் பாமக முன்வைத்த அந்த 10 கோரிக்கைகள் முழு விவரம்:-
1. காவிரி: காவிரி பாசன பகுதியை பாதுகாக்கப்பட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும். 
2. தமிழ்நாட்டின் கோதாவரி உள்ளிட்ட முக்கிய 20 நீர்ப்பாசன திட்டங்களை நிறைவேற்ற வேண்டும்.
3. இடஒதுக்கீட்டை காக்க ஜாதி வாரியான கணக்கெடுப்பு நடத்த வேண்டும்.
4. ஏழு தமிழர்கள் விடுதலை.
5. தமிழ்நாட்டில் படிப்படியாக மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும்.
6. நீர்வளம் காக்க மணல் குவாரிகள் படிப்படியாக மூட வேண்டும்.
7. அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தையே அமல்படுத்த வேண்டும்.
8. காவிரியில் மேகதாது அணைக்கு தடை.
9. வேளாண் கடன்கள் தள்ளுபடி மற்றும் உழவர் ஊதியக்குழு அமைத்தல்
10. நீட் தேர்விலிருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு.

இதில், 7 தமிழர்கள் விடுதலை செய்யப்பட வேண்டும் என்பது மிகமுக்கியமான கோரிக்கை என்று பாமக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com