உறுதியானது அதிமுக, பாமக, பாஜக கூட்டணி: பா.ம.க.வுக்கு 7, பாஜகவுக்கு 5 தொகுதிகள்

மக்களவைத் தேர்தலையொட்டிஅதிமுக தலைமையிலான கூட்டணியில் பா.ஜ.க., பாமக அதிகாரபூர்வமாக இணைந்துள்ளன.
மக்களவைத் தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணியுடன்  தொகுதி உடன்பாடு உறுதியானவுடன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் பாஜக தமிழக தேர்தல் பொறுப்பாள பியூஷ் கோயல், முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி
மக்களவைத் தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணியுடன்  தொகுதி உடன்பாடு உறுதியானவுடன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் பாஜக தமிழக தேர்தல் பொறுப்பாள பியூஷ் கோயல், முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி


மக்களவைத் தேர்தலையொட்டிஅதிமுக தலைமையிலான கூட்டணியில் பா.ஜ.க., பாமக அதிகாரபூர்வமாக இணைந்துள்ளன.  பாமகவுக்கு 7 தொகுதிகளும் ஒரு மாநிலங்களவை இடமும், பா.ஜ.க.வுக்கு 5 தொகுதிகளும்  ஒதுக்கப்பட்டுள்ளன.
பாஜகவுடன் கூட்டணி இறுதி செய்யப்பட்டது தொடர்பான அறிவிப்பை அதிமுகவின் ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான ஓ.பன்னீர் செல்வம், மத்திய அமைச்சரும், பா.ஜ.க.வுக்கான தமிழக தேர்தல் பொறுப்பாளருமான பியூஷ் கோயல் இருவரும் கூட்டாக வெளியிட்டனர்.
முன்னதாக செவ்வாய்க்கிழமை பிற்பகலில் சென்னையில் உள்ளதனியார் நட்சத்திர ஹோட்டலில்   அதிமுகவுடன் கூட்டணி ப் பேச்சுவார்த்தையை பா.ஜ.க. தொடங்கியது. இதில் பா.ஜ.க.வின் தமிழக மேலிட பொறுப்பாளர் பியூஷ் கோயல்,  பா.ஜ.க. முக்கிய தலைவர்களில் ஒருவரான முரளிதரராவ், பொன்.ராதாகிருஷ்ணன், பா.ஜ.க. மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், மாநில பொதுச் செயலாளர் வானதி சீனிவாசன்  உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். அதிமுக சார்பில் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம்,  இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே.பழனிசாமி, அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, தங்கமணி, டி.ஜெயக்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்தப் பேச்சுவார்த்தை சுமார் 2 மணிநேரம் நீடித்தது.
 இதையடுத்து துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பா.ஜ.க.வுக்கு வரும் மக்களவைத் தேர்தலில் 5 இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றும் போட்டியிடும் தொகுதிகள் பின்னர் தெரிவிக்கப்படும் என்றும் தெரிவித்தார். மேலும் 21 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் 21 வேட்பாளர்களுக்கும் பா.ஜ.க. ஆதரவு தெரிவித்துள்ளதாகவும் கூறினார்.
இது தொடர்பாக கருத்து தெரிவித்த பியூஷ் கோயல், கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தை சுமுகமாகவும் பயனுள்ளதாகவும் இருந்ததாகவும் அதிமுக தலைமையில் தமிழகம், புதுச்சேரியில் தேர்தலை எதிர்கொள்ள பா.ஜ.க. தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார். மேலும்  பாமகவும் கூட்டணியில் இடம்பெற்றுள்ளதால்  நாற்பது தொகுதிகளிலும் அதிமுக தலைமையிலான மெகா கூட்டணி வெல்லும் என்றும் தெரிவித்தார்.
முன்னதாக செவ்வாய்க்கிழமை காலையில் அதிமுக பா.ம.க. இடையே தொகுதி உடன்பாடு எட்டப்பட்டது. அதிமுக கூட்டணியில் இணைந்துள்ள பா.ம.க.வுக்கு 7 மக்களவைத் தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இது தவிர ஒரு மாநிலங்களவை இடமும் தர ஒப்புக்கொள்ளப்பட்டது என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்தார்.
அதிமுக சார்பில் அமைச்சர்கள் பி.தங்கமணி, எஸ்.பி.வேலுமணி இருவரும் செவ்வாய்க்கிழமை காலை  திடீரென பாமக நிறுவனர் ராமதாஸ், இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோரை அவர்களது உறவினர் இல்லத்தில் சந்தித்துப் பேசினர். இந்தச் சந்திப்பைத் தொடர்ந்து, அனைவரும் சென்னையில் உள்ள தனியார் நட்சத்திர ஹோட்டலுக்குச் சென்றனர். அங்கு   ஏற்கெனவே முதல்வரும், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி கே.பழனிசாமி, துணை முதல்வரும், அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் மற்றும் பாமக நிர்வாகிகளின் வருகைக்காக காத்திருந்தனர்.
 தனியார் ஹோட்டலுக்கு வந்த ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் ஆகியோருக்கு முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் பொன்னாடை அணிவித்து அதிமுக சார்பில் வரவேற்பு அளித்தனர்.
 இதைத் தொடர்ந்து, சுமார் 40 நிமிடங்கள் வரை ஹோட்டலில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதைத் தொடர்ந்து, கூட்டணியில் இடங்களை ஒதுக்கீடு செய்வது குறித்த அறிவிப்பை   ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டார். 
அதன்படி, பாமகவுக்கு ஏழு மக்களவைத் தொகுதிகளும், நிகழாண்டில் காலியாகவுள்ள ஒரு மாநிலங்களவைத் தொகுதியும் ஒதுக்கப்படுவதாக அறிவித்தார்.
மேலும், காலியாகவுள்ள 21 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கு நடைபெறவுள்ள இடைத் தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களுக்கு பாமக தனது முழு ஆதரவை அளிக்கும் எனவும் பாமகவுடனான கூட்டணி ஒப்பந்தத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக ஓ.பன்னீர்செல்வம் கூறினார். 

அதிமுக எத்தனை தொகுதிகளில் போட்டி?
பாமகவுக்கு ஏழு தொகுதிகளும், பாஜகவுக்கு ஐந்து தொகுதிகளும் ஒதுக்கப்பட்ட நிலையில், கூட்டணிக்குத் தலைமை வகிக்கும் அதிமுகவிடம் 27 தொகுதிகள் உள்ளன. இந்தத் தொகுதிகளில், புதிய நீதிக் கட்சியின் நிறுவனத் தலைவர் ஏ.சி.சண்முகம், இந்திய ஜனநாயக கட்சியின் தலைவர் பாரிவேந்தர் ஆகியோருக்கு தலா ஓர்  இடம் ஒதுக்கப்படும் எனத் தெரிகிறது. இந்தத் தொகுதிகளை போக, மீதமுள்ள 25 தொகுதிகளில் அதிமுக போட்டியிட வாய்ப்புள்ளது. அதிமுக தலைமையிலான கூட்டணியில் விஜயகாந்த் தலைமையிலான தேமுதிக இணைந்தால் அந்தக் கட்சிக்கு 4 முதல் 5 தொகுதிகள் வரை கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கூட்டணிக்குள் தேமுதிக வரும் பட்சத்தில், அதிமுக 20 தொகுதிகள் வரை 
போட்டியிடக் கூடும். 

கூட்டணித் தலைவர்களுக்கு தேநீர் விருந்து   
அதிமுகவுடன் கூட்டணியை இறுதி செய்த பாமக, பாஜக தலைவர்களுக்கு முதல்வரும், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி கே.பழனிசாமி இல்லத்தில் தேநீர் விருந்து அளிக்கப்பட்டது. பாமகவுடனான கூட்டணி இறுதி செய்யப்பட்டவுடன், அடையாறில் இருந்து புறப்பட்ட ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் ஆகியோர் முதல்வர் பழனிசாமி இல்லத்துக்குச் சென்றனர். அங்கு அவர்களுக்கு முதல்வர் பழனிசாமி தேநீர் விருந்து அளித்தார். இதேபோன்று, பாஜகவுடன் மக்களவைத் தேர்தல் கூட்டணி செவ்வாய்க்கிழமை மாலை இறுதி செய்யப்பட்டது. மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் உள்ளிட்ட பாஜக தலைவர்களுக்கும் முதல்வர் பழனிசாமி தனது இல்லத்தில் மாலை நேர தேநீர் விருந்து அளித்தார்.

தொகுதி பங்கீடு ஒப்பந்தத்தை செவ்வாய்க்கிழமை பகிர்ந்து கொள்ளும் பாமக நிறுவனர் ராமதாஸ், முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி. கட்சித் தலைவர் கோ.க.மணி.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com