தமிழக கோயில் விடுதிகள் முறையாக பராமரிக்கப்படுகிறதா?: உயர்நீதிமன்றம் கேள்வி

 தமிழக கோயில்களுக்குச் சொந்தமான விடுதிகளில் போதிய வசதிகள் உள்ளனவா? முறையாக பராமரிக்கப்படுகின்றனவா? என்பன உள்ளிட்ட கேள்விகளை உயர்நீதிமன்ற நீதிபதிகள் எழுப்பியுள்ளனர்.
தமிழக கோயில் விடுதிகள் முறையாக பராமரிக்கப்படுகிறதா?: உயர்நீதிமன்றம் கேள்வி


 தமிழக கோயில்களுக்குச் சொந்தமான விடுதிகளில் போதிய வசதிகள் உள்ளனவா? முறையாக பராமரிக்கப்படுகின்றனவா? என்பன உள்ளிட்ட கேள்விகளை உயர்நீதிமன்ற நீதிபதிகள் எழுப்பியுள்ளனர்.
மதுரையைச் சேர்ந்த  கே.கே. ரமேஷ், உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொது நல மனுதாக்கல் செய்திருந்தார். அதில், தமிழகத்தில் இந்துஅறநிலையத் துறையின் கீழ் 38,615 கோயில்கள் உள்ளன. இந்தக் கோயில்களுக்கு பல கோடி மதிப்பில் சொத்துகள் உள்ளன.
இந்தச் சொத்துகளை பலர் சட்டவிரோதமாக ஆக்கிரமித்துள்ளனர். மேலும் சிலர் கடைகளை குறைந்த வாடகைக்கு எடுத்து கோயில்களுக்கு வருவாய் இழப்பு ஏற்படுத்தி வருகின்றனர். இதுபோன்ற முறைகேடுகளுக்கு கோயில் ஊழியர்களும் துணையாக உள்ளனர். இதுகுறித்து பல்வேறு புகார்கள் அளித்தும் இதுவரையில் எந்த நடவடிக்கையும் இல்லை.
எனவே கோயில் நிலங்கள், சொத்துகளைப் பாதுகாப்பது குறித்தும், ஆக்கிரமிப்பு இடங்களை மீட்பது குறித்தும் மாவட்ட அளவிலான குழு அமைக்கவும், கோயில் கடைகளில் குறைந்த வாடகையில் இருப்பவர்களை கண்டறிந்து அவர்களை வெளியேற்றவும், கோயில் மற்றும் கோயிலுக்கு சொந்தமான இடங்களில் சிசிடிவி கேமரா பொருத்தி கண்காணிக்கவும், கோயிலுக்கு சொந்தமான இடங்கள், பூஜை கட்டண விவரங்களை கோயில் முன் அனைவரும் பார்க்கும் விதமாக பட்டியல் இட்டு வைக்கவும் உத்தரவிட வேண்டும்.  மேலும், கோயில் பூஜை கட்டணங்கள், வாடகை விவரம், நன்கொடை , செலவினங்கள் என அனைத்தையும் இணையதளத்தில் பதிவிட உத்தரவிட வேண்டும் எனக் கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் கிருபாகரன், எஸ்.எஸ். சுந்தர் அமர்வு முன் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது,  திருப்பதி கோயிலுக்குச் சொந்தமான தங்கும் விடுதிகளில் உள்ள வசதிகள் பழநி, திருச்செந்தூர் உள்ளிட்ட கோயில்களில் உள்ளதா? திருப்பதி கோயில் தங்கும் விடுதிகளை பராமரிப்பதுபோல், இங்குள்ள கோயில் விடுதிகளை ஏன் பராமரிப்பதில்லை.
ராமேசுவரம், ஸ்ரீரங்கம்  உள்ளிட்ட கோயில்களில் தங்கும் விடுதிகள் (காட்டேஜ்) ஏதும் உள்ளதா? எனக் கேள்வி எழுப்பினர்.
மேலும், இதுகுறித்து இந்து அறநிலையத் துறைச் செயலர், வருவாய்த் துறைச் செயலர் ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்திவைத்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com