மியான்மரில் தமிழ்ப் பல்கலை. மூலம் ஆசிரியர்களுக்குப் பயிற்சி

மியான்மர் நாட்டில் தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழக ஒருங்கிணைப்பில் தமிழ் இலக்கிய - இலக்கணப் பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றன.
மியான்மரில் நடைபெறும் பயிலரங்கில் பங்கேற்றுள்ளவர்கள்.
மியான்மரில் நடைபெறும் பயிலரங்கில் பங்கேற்றுள்ளவர்கள்.


மியான்மர் நாட்டில் தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழக ஒருங்கிணைப்பில் தமிழ் இலக்கிய - இலக்கணப் பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றன.
இதுகுறித்து தமிழ்ப் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: மியான்மரில் அரசுப் பள்ளிகளில் தமிழ்மொழி பயிற்றுவிக்கப்படுவது நிறுத்தப்பட்டு, ஏறத்தாழ 50 ஆண்டுகள் கடந்து விட்ட நிலையில், சில ஆண்டுகளாகத் தமிழ்க் கல்வி வளர்ச்சி மையம் மாலை நேர தமிழ் வகுப்புகளை நடத்தி வருகிறது. 
இச்சூழலில் மியான்மரில் தமிழாசிரியர்களுக்கு முறையான பயிற்சிகளை அளிக்க வேண்டுமென்று அங்குள்ள தமிழ் அமைப்புகள் தொடர்ந்து தமிழக அரசுக்கு 30 ஆண்டுகளுக்கும் மேலாக கோரிக்கை விடுத்து வந்தன.  
இந்நிலையில் இத்திட்டத்தை, தமிழ்ப் பல்கலைக்கழகம் மூலமாக நிறைவேற்றிட உதவும் வகையில் ரூ. 7 லட்சத்தை தமிழக முதல்வர் ஒதுக்கீடு செய்தார். 
இதைத்தொடர்ந்து, தமிழக அரசின் நிதி நல்கையுடனும், தமிழ் வளர்ச்சித் துறை ஒத்துழைப்புடனும் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் அயல்நாட்டுத் தமிழ்க் கல்வித் துறையின் ஒருங்கிணைப்பில் இப்பயிலரங்கம் செவ்வாய்க்கிழமை தொடங்கியது.
மியான்மர் தமிழ்க் கல்வி வளர்ச்சி மையத்தின் ஒருங்கிணைப்புடன் நடைபெறும் இப்பயிலரங்கில் ஏறத்தாழ 135 தமிழாசிரியர்களுக்குத் தமிழ் இலக்கிய - இலக்கணப் பயிற்சிகளும், 100 இளந்தமிழ் மாணவர்களுக்குத் தமிழ்ப் பண்பாட்டுப் பயிற்சியும் அளிக்கப்படுகிறது. இதில், மியான்மரின் 7 மாகாணங்களைச் சேர்ந்த ஆசிரியர்கள் பங்கேற்றுள்ளனர்.
இதுதொடர்பாக மியான்மர் தலைநகர் யாங்கோனில் உள்ள தமிழ் சோசியல் மன்றத்தில் நடைபெற்ற தொடக்க விழாவில் சிறப்புரையாற்றிய தமிழர் நிதி சேமிப்பு நிறுவனப் பொறுப்பாளர் முருகன், தமிழ்க் கல்வி வளர்ச்சி மையத்தின் தலைவர் எல்.ஆர்.ஜி. இளங்கோவன், தமிழ்ப் பள்ளிகளின் நன்கொடையாளர் பெருவணிகர் செளந்தரராஜன் ஆகியோர் தமிழக அரசின் நிதி நல்கையில் நடத்தப்படும் இப்பயிற்சித் திட்டத்தைப் பாராட்டி நன்றி தெரிவித்தனர். இத்திட்டம் மியான்மரில் 50 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழ் செழித்து மலர்ந்திட உயிரூட்டம் அளித்துள்ளதாகவும் அவர்கள் குறிப்பிட்டனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com