தொடரும் இழுபறி: அதிமுக கூட்டணியில் இடம்பெறுமா தேமுதிக?

தொகுதிப் பங்கீட்டில் இழுபறி நீடிப்பதால் நாடாளுமன்றத் தேர்தலுக்கான அதிமுக கூட்டணியில் தேமுதிக இடம்பெறுமா என்ற கேள்வி எழுந்திருக்கிறது.
தொடரும் இழுபறி: அதிமுக கூட்டணியில் இடம்பெறுமா தேமுதிக?


தொகுதிப் பங்கீட்டில் இழுபறி நீடிப்பதால் நாடாளுமன்றத் தேர்தலுக்கான அதிமுக கூட்டணியில் தேமுதிக இடம்பெறுமா என்ற கேள்வி எழுந்திருக்கிறது. 
2019 மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில்,  கூட்டணியை இறுதி செய்வதிலும், தொகுதிப் பங்கீட்டிலும் அரசியல் கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன. தமிழகத்தைப் பொருத்தவரை மக்களவைத் தேர்தல் கூட்டணியை இறுதி செய்து அறிவிக்கும் பேச்சுவார்த்தையை முதல் கட்சியாக அதிமுக செவ்வாய்க்கிழமை தொடங்கியது.
சென்னை தனியார் ஹோட்டலில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் முதல் கட்டமாக அதிமுக - பாமக இடையேயான கூட்டணி இறுதி செய்யப்பட்டு, தொகுதிப் பங்கீடு குறித்த அறிவிப்பும் வெளியிடப்பட்டது. அதிமுக தரப்பில் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம்,  இணை ஒருங்கிணைப்பாளர் கே.எடப்பாடி பழனிசாமி மற்றும் அமைச்சர்கள் பங்கேற்றனர். பாமக தரப்பில் அதன் நிறுவனர் ராமதாஸ், இளைஞரணித் தலைவர் அன்புமணி மற்றும் கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர். அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 7 மக்களவைத் தொகுதிகளும், ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவியும் ஒதுக்கப்பட்டன.
அதனைத் தொடர்ந்து அதிமுக - பாஜக கூட்டணி மற்றும் தொகுதிப் பங்கீடு இறுதி செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டது. பேச்சுவார்த்தையில் பாஜக தமிழக தேர்தல் பொறுப்பாளர் பியூஷ் கோயல், மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், தமிழக பாஜக தலைவர் தமிழிசை செளந்தரராஜன் மற்றும் தலைவர்கள் பங்கேற்றனர். பேச்சுவார்த்தை முடிவில் அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு 5 மக்களவைத் தொகுதிகள் ஒதுக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து அன்றைய தினமே,  அதிமுக - தேமுதிக உடனான கூட்டணி மற்றும் தொகுதிப் பங்கீடு இறுதிசெய்யப்பட்டு அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தேமுதிக தரப்பில் யாரும் அங்கு வரவில்லை. இதற்கிடையே, அதிமுக வுடனான தொகுதிப் பங்கீடு இறுதி செய்யப்பட்ட பின்னர், அங்கிருந்து சென்னை சாலிகிராமத்தில் உள்ள தேமுதிக தலைவர் விஜயகாந்தின் வீட்டுக்குச் சென்ற பியூஷ் கோயல்,  விஜயகாந்த் மற்றும் தேமுதிக முக்கிய நிர்வாகிகளுடன் கூட்டணியை இறுதி செய்வது தொடர்பாக பேச்சு நடத்தினார். இந்தச் சந்திப்புக்குப் பின்னர், அமெரிக்காவில் சிகிச்சை பெற்று திரும்பிய விஜயகாந்திடம் உடல் நலம் குறித்து விசாரிக்கவே வந்ததாகப் பியூஸ் கோயல் பேட்டியளித்தார்.
ஆர்வமில்லாத அதிமுக: இரண்டு மாதங்களாக அமெரிக்காவில் சிகிச்சை பெற்று திரும்பிய தேமுதிக தலைவர் விஜயகாந்தின் உடல்நிலையில் பெரிய அளவில் முன்னேற்றம் இல்லை என்றே கூறப்படுகிறது. அவர் தொடர்ந்து ஓய்வெடுத்து வருவதால், தேர்தல் பிரசாரங்களிலும் அவர் பங்கேற்க வாய்ப்பில்லை. இது தேமுதிக தொண்டர்களிடையேயும், நிர்வாகிகளிடையேயும் பெரும் சோர்வை ஏற்படுத்தியிருக்கிறது. 
விஜயகாந்த் பிரசாரத்துக்கு வரமுடியாது என்பதால், தேமுதிக-வுக்கு ஒதுக்கப்படும் இடங்களிலும் அதிமுக தலைவர்களே முழுமையாகப் பிரசாரம் செய்யும் நிலை ஏற்படும். இதனால் ஏற்படும் பல்வேறு சிக்கல்களை எண்ணியும், அதிமுகவுக்கு எதிரான தேமுதிகவின் கடந்த கால செயல்பாடுகளைக் கருத்தில் கொண்டும், தேமுதிகவை கூட்டணியில் சேர்த்துக்கொள்ள அதிமுக முன்னணி நிர்வாகிகள் ஆர்வம் காட்டவில்லை என்றே கூறப்படுகிறது.
அதுமட்டுமின்றி பாமகவுக்கு ஒதுக்கியதுபோல ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவியும், குறைந்தபட்சம் 4 மக்களவைத் தொகுதிகளும் ஒதுக்கவேண்டும் என தேமுதிக எதிர்பார்க்கிறது. ஆனால், தேமுதிகவுக்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவியைத் தர அதிமுக தயாராக இல்லை.
இதுபோன்ற காரணங்களால், அதிமுக - பாமக- பாஜக கூட்டணியில் தேமுதிக இடம்பெறுவது சந்தேகம்தான் என்கின்றனர் அரசியல் நோக்கர்கள்.
நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை: இந்தச் சூழலில், கூட்டணி தொடர்பாக அடுத்து என்ன முடிவு எடுப்பது என்பது குறித்து சென்னையில் கட்சி நிர்வாகிகளுடன் தேமுதிக துணைச் செயலர் சுதீஷ் புதன்கிழமை ஆலோசனை மேற்கொண்டுள்ளார். மேலும், தொலைபேசி மூலமாக அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி ஆகியோரிடம் ஆலோசித்ததாகவும் கூறப்படுகிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com