தமிழகத்தில் ஒரே கட்டமாக தேர்தல் நடத்த வேண்டும்: அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் கோரிக்கை

தமிழகத்தில் மக்களவைத் தேர்தலை ஒரே கட்டமாக நடத்த வேண்டுமென அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன.
தமிழகத்தில் ஒரே கட்டமாக தேர்தல் நடத்த வேண்டும்: அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் கோரிக்கை


தமிழகத்தில் மக்களவைத் தேர்தலை ஒரே கட்டமாக நடத்த வேண்டுமென அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன. 
 தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்ய பிரத சாகு தலைமையில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிப் பிரதிநிதிகளுடன் தலைமைச் செயலகத்தில் வெள்ளிக்கிழமை ஆலோசனை நடத்தப்பட்டது.
இக்கூட்டத்தில், அ.தி.மு.க.  (துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன்,  இன்பதுரை எம்.எல்.ஏ.),  தி.மு.க., (வழக்குரைஞர் கிரிராஜன்), காங்கிரஸ் (தாமோதரன், பொன்.கிருஷ்ணமூர்த்தி),  இந்திய கம்யூனிஸ்ட் (மாநில செயற்குழு உறுப்பினர் பெரியசாமி) ஆகியோரும்,  பாஜக,  தேசியவாத காங்கிரஸ்,  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், பகுஜன் சமாஜ் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். 
அதிமுக: தமிழகத்தில் ஒரே சமயத்தில் தேர்தல் நடத்த வேண்டுமென வலியுறுத்தினோம். மற்ற அரசியல் கட்சிகளும் அதே கருத்தைக் கூறியுள்ளன. தேர்தலைக்  காரணம் காட்டி, குடிநீர்த் திட்டங்களுக்கான அத்தியாவசியப் பணிகளை நிறுத்தக் கூடாது. புதிய பணிகளையும் அனுமதிக்க வேண்டுமென கேட்டுக் கொண்டோம்.

தேர்தல் பணிகளில் அனைத்துத் தரப்புப் பணியாளர்களையும் ஈடுபடுத்த வேண்டும். கூட்டுறவுத் துறை பணியாளர்கள்,  கிராம நிர்வாக அலுவலர்கள்,  ஊராட்சிச் செயலாளர்களையும் அமர்த்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளோம். தேர்தல் நேரம் என்பதால் ஆசிரியர்களுக்கு பணிச் சுமை அதிகமாக இருக்கும். எனவே, தேர்தல் பணியில் மற்றவர்களையும் ஈடுபடுத்த வேண்டும்.
திமுக: சிறப்பு முகாம்கள் நடத்துவது குறித்து அழைத்திருந்தார்கள். பல்வேறு கருத்துகள் எடுத்துரைக்கப்பட்டன. வாக்காளர் பட்டியலில் குளறுபடிகள் தொடர்ந்த நிலையில் உள்ளன. ஆர்.கே.நகர் பகுதியில் 15 பாகங்களில் இரட்டைப்பதிவு, பல முறை பதிவு என பல நிகழ்வுகள் உள்ளன. இதற்கான ஆதாரங்களை அளித்துள்ளோம். 
நீக்குவதற்கான ஏற்பாடுகளைச் செய்வதாக தலைமைத் தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார். பல இடங்களில் பதிவு இருக்கும்பட்சத்தில் அவற்றை மனுக்களாக அளித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்தல் அதிகாரி உறுதி அளித்துள்ளார். சென்னையில் 38 ஆயிரம் பேர் ஆன்-லைன் மூலமாக வாக்காளர்களாகப் பெயர் சேர்க்கப் பதிவு செய்துள்ளனர். அதுகுறித்து முறையான நடவடிக்கைகளை தேர்தல் ஆணையம் மேற்கொள்ளவில்லை.
இந்திய கம்யூனிஸ்ட்: வரும் மக்களவைத் தேர்தலைச் சுதந்திரமாகவும், வெளிப்படையாகவும் சந்தேகத்தின் நிழல் தேர்தல் ஆணையத்தின் மீது விழாமலும் நடத்த வலியுறுத்தினோம். ஒரே நாளில் முதல் கட்டமாக தேர்தல் நடத்தப்பட வேண்டும் என வலியுறுத்தினோம். 21 தொகுதிகளில் இடைத் தேர்தலையும் சேர்த்து நடத்த வேண்டும். வாக்காளர் பட்டியல் குளறுபடிகளையும், கடந்த காலங்களில் செய்த தவறுகளையும் சுட்டிக்காட்டினோம். வாக்குப் பதிவு அதிகாரிகள் வாக்காளர் பட்டியலை வெளியிடும் அதிகாரம் கொண்டவர்கள். அவர்கள் களஅளவில் வரக் கூடிய திருத்தங்களையும், பெயர் சேர்க்க, நீக்கப்பட வேண்டிய விண்ணப்பங்களை திருத்தம் செய்து 
வெளியிடுவதில்லை. குறைபாடுகளைக் களைய வேண்டும் என வலியுறுத்தியுள்ளோம். வாக்குப் பதிவு நேரம் கடுமையான கோடை காலம் என்பதால் அனைத்து வாக்குச் சாவடிகளிலும் குடிநீர் வசதி செய்து தர வேண்டும். பந்தல் அமைத்து நிழல் ஏற்பாடு செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்தோம். 
தேர்தல் தொடர்பான புகார்கள் மீது உடனடியாகச் செயல்பட வேண்டும். நவீன விஞ்ஞானப்பூர்வ விஷயங்களை தேர்தல் ஆணையம் அறிமுகப்படுத்துவதாகக் கூறினாலும், தேர்தல் நேரத்தில் அவை உரிய முறையில் செயல்படுத்தப்படுவதில்லை என்று தெரிவிக்கப்பட்டது.
இதே கருத்துகளை கூட்டத்தில் கலந்து கொண்ட மற்ற கட்சிகளும் தெரிவித்தன.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com