திமுக கூட்டணியில்  முஸ்லிம் லீக்குக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு

மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
திமுக கூட்டணியில்  முஸ்லிம் லீக்குக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு


மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இதற்கான தொகுதி உடன்பாட்டு ஒப்பந்தத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசியத் தலைவர் கே.எம்.காதர் மொகிதீனும் கையெழுத்திட்டனர்.
அண்ணா அறிவாலயத்தில் திமுக பொருளாளர் துரைமுருகன் தலைமையிலான தொகுதிப் பங்கீட்டுக் குழுவினருடன் கே.எம்.காதர் மொகிதீன் தலைமையிலான குழுவினர் வெள்ளிக்கிழமை இரவு 7 மணியளவில் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்தப் பேச்சுவார்த்தை சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக நீடித்தது.
முஸ்லிம் லீக் சார்பில் 2 தொகுதிகள் கேட்கப்பட்டன. ஆனால், ஒரு தொகுதி மட்டுமே ஒதுக்க திமுக முன் வந்தது. இது தொடர்பாக பேச்சுவார்த்தை நீடித்து, கடைசியில் ஒரு தொகுதியை ஏற்றுக் கொள்வதாக முஸ்லிம் லீக் ஒப்புக் கொண்டது. அதைத் தொடர்ந்து தொகுதி உடன்பாட்டு ஒப்பந்தத்தில் மு.க.ஸ்டாலினும், கே.எம்.காதர் மொகிதீனும் கையெழுத்திட்டனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் காதர் மொகிதீன் கூறியது: மக்களவைத் தேர்தலில் அதிக இடங்களை ஒதுக்க வேண்டும் என்று கேட்டிருந்தோம். ஆனால், கூட்டணியில் அதிக கட்சிகள் உள்ளதால், ஒரு தொகுதியை ஏற்றுக்கொள்ளுமாறு திமுக தரப்பில் கூறப்பட்டது. அதை, முழு மனதாக ஏற்றுக் கொண்டு, ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு வந்துள்ளோம். ஒரு தொகுதியை ஒதுக்கி தந்ததற்காக மு.க.ஸ்டாலினுக்கும், துரைமுருகனுக்கும் நன்றி. 
எந்தத் தொகுதியில் போட்டியிடுவோம் என்பதை திமுக விரைவில் அறிவிக்கும். 40 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றி பெறும்.
எங்கள் கட்சியின் சின்னம் ஏணி. அந்தச் சின்னத்தில்தான் போட்டியிடுவோம்.
சிறுபான்மை மக்கள் மட்டுமல்ல, இந்தியாவில் உள்ள எல்லாச் சமுதாய மக்களும் பாஜகவுக்கு வாக்களிக்க மாட்டார்கள். தமிழகத்தில் அதிமுக தலைமையிலான கூட்டணி தோல்வியைத் தழுவும் என்றார்.
தொகுதி எது?: ராமநாதபுரம் தொகுதியை ஒதுக்கி தருமாறு முஸ்லிம் லீக் சார்பில் அழுத்தம் கொடுத்து கேட்கப்பட்டுள்ளது. இதே தொகுதியைக் காங்கிரஸும் கேட்டு வருகிறது. எனினும், முஸ்லிம் லீக் கட்சிக்கு பரிசீலிப்பதாக திமுக தரப்பில் உறுதி அளிக்கப்பட்டுள்ளது. 
தொடரும் பேச்சுவார்த்தை: புதுச்சேரி உள்ளிட்ட 40 தொகுதிகளில்  காங்கிரஸ் கட்சிக்கு 10 தொகுதிகளை ஏற்கெனவே திமுக ஒதுக்கியுள்ளது. தற்போது முஸ்லிம் லீக் கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டது. இவை போக 29 தொகுதிகளில் மதிமுக, மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள், மனித நேய மக்கள் கட்சி உள்ளிட்ட கட்சிகளுக்கு தொகுதிகளை ஒதுக்குவதற்காக பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டதுபோக மீதமிருக்கும்  தொகுதிகளில் நிற்க திமுக முடிவு செய்துள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com