புதிய பேருந்து வடிவமைப்பின் அசௌகரியம்: விசில் அடிப்பவருக்கே இந்த கதியா?

ரைட் ரைட்.. என்றபடியே விசில் சத்தம் கேட்காமல் பேருந்து பயணத்தை நிறைவு செய்யவே முடியாது. 
புதிய பேருந்து வடிவமைப்பின் அசௌகரியம்: விசில் அடிப்பவருக்கே இந்த கதியா?


ரைட் ரைட்.. என்றபடியே விசில் சத்தம் கேட்காமல் பேருந்து பயணத்தை நிறைவு செய்யவே முடியாது. 

ஒரு பாதையில் புதிய பேருந்துகளை இயக்கும் போது பயணிகளுக்கு அது பல வகைகளில் வரப்பிரசாதமாக இருக்கும். ஆனால் அதுவே சற்று மோசமாக வடிவமைக்கப்பட்ட புதிய பேருந்தாக இருந்தால் அதில் பயணிக்கும் பயணிகளுக்கு சில மோசமான அனுபவங்களும் கிடைக்கலாம்.

அதுபோலத்தான் தற்போது சென்னையில் இயக்கப்படும் புதிய பேருந்துகளின் மோசமான வடிவமைப்பினால் ஒருசில அசௌகரியங்களை சந்தித்து வருகிறார்கள் பயணிகள். பயணிகள் மட்டுமல்ல, பாவம் நடத்துநரும் கூட.

அதாவது பேருந்து என்றால் முன் பகுதியில் ஓட்டுநரின் இருக்கையும், பின் பகுதியில் நடத்துநருக்கு என தனி இருக்கையும் இருக்கும். ஆனால் இதில் நடத்துநருக்கான இருக்கையே இல்லை. இல்லை என்று அப்பட்டமாகச் சொல்லி விட முடியாது. இருக்கிறது. ஆனால் இல்லை. அப்படித்தான் சொல்ல வேண்டும்.

அதாவது நடத்துநருக்கான இருக்கையை வழக்கமான முறையில் அமைக்காமல், இரு நபர் அமரும் வகையிலேயே இருக்கையை அமைத்திருக்கும் பேருந்து வடிவமைப்பாளர்கள், இந்த இருநபர் இருக்கையின் ஒன்றில் நடத்துநர் அமர்ந்து கொள்ளலாம் என்று வாய்மொழியாகக் கூறிவிட்டார்கள்.

சரி, அது நடத்துநருக்கான இருக்கையாகவே இருக்கட்டும். ஆனால், அதில் மற்றொரு இருக்கையில் பெண் பயணிதான் அமர முடியும். இரு பயணிகள் நிம்மதியாக தாராளமாக அமர்ந்து வர இயலாத குறுக்கலான இருக்கையில் பெண் பயணியோடுதான் ஒரு நடத்துநர் அமர்ந்து வர வேண்டும். அவர் டிக்கெட்டுகளை கொடுக்கும் போது நிச்சயம் பெண் பயணி அசௌகரியமாகவே உணர்வார். இதனால் பிரச்னை கூட ஏற்படலாம்.

பொதுவாகவே அனைத்து இருக்கைகளும் மிகக் குறுகியதாக இருப்பதால் இரண்டு பெண்களும், இரண்டு ஆண்களுமே சௌகரியமாக பயணிக்க முடியாத நிலையில், இந்த கடினமான பயணத்தை தினந்தோறும் நடத்துநர் சந்திக்க வேண்டிய துர்பாக்கிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.

அவருக்கே அமர்வதற்கான இருக்கை பல பிரச்னைகளை ஏற்படுத்தும் நிலையில், பேருந்தில் பயணிக்கும் பயணிகளும், என்ன இப்படி சீட் சின்னதாக இருக்கிறதே என்று அவரிடம் குறை கூறிவிட்டுச் செல்லும் போது அவர் யாரிடம் சொல்வது, என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்தேப் போய்விடுகிறார்.

இது குறித்து சென்னை மாநகராட்சிப் போக்குவரத்துக் கழக மூத்த அதிகாரிகளிடம் கேட்டபோது, இந்திய தர நிர்ணய ஆட்டோமோட்டிவ் ரிசர்ச் அசோசியேஷனால் வடிவமைக்கப்பட்டதுதான் இந்த புதிய பேருந்துகள். இவை அனைத்தையும் மத்திய அரசு தான் தயாரித்து அனுப்புகிறது. இது பற்றி நாம் எதுவும் கூற முடியாது என்கிறார்.

பேருந்தை வடிவமைக்கும் போது மாற்றி யோசியுங்கள். ஆனால் மாற்றி மாற்றி யோசித்து பேருந்தில் பயணிக்க வேண்டுமா? என்று பயணிகளை யோசிக்க வைத்து விடாதீர்கள்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com