
சென்னை திருவான்மியூர் மாநகராட்சிப் பள்ளியில் மாணவர்களுக்கான இலவச காலை உணவுத் திட்டத்தை திங்கள்கிழமை தொடங்கி வைத்து அவர்களுடன் அமர்ந்து உணவருந்திய தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்.
பெருநகர சென்னை மாநகராட்சி, அக்ஷய பாத்ரா தொண்டு நிறுவனம் சார்பில் திருவான்மியூரில் உள்ள மாநகராட்சிப் பள்ளியில் இலவச காலை உணவுத் திட்டத்தை ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் திங்கள்கிழமை தொடங்கி வைத்தார்.
சென்னை மாநகராட்சியின் அடையாறு மண்டலத்துக்கு உள்பட்ட திருவான்மியூரில் மாநகராட்சி மேல்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர்.
இந்தப் பள்ளியில் பயிலும் ஏழை மாணவர்களின் நிலையைக் கருத்தில் கொண்டு பெருநகர சென்னை மாநகராட்சி, அக்ஷய பாத்ரா தொண்டு நிறுவனம் இணைந்து காலை உணவு வழங்க முடிவு செய்யப்பட்டது.
இத்திட்டத்தின் தொடக்க விழா திருவான்மியூர் மாநகராட்சி மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில், ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் கலந்துகொண்டு காலை உணவுத் திட்டத்தைத் தொடங்கி வைத்தார்.
இத்திட்டம் குறித்து அக்ஷய பாத்ரா தொண்டு நிறுவனத்தினர் கூறுகையில், மாணவர்கள் பட்டினியுடன் பள்ளிக்குச் செல்லக் கூடாது என்பதை கருத்தில்கொண்டு இந்தத் திட்டத்தை தொடங்கி உள்ளோம். இந்தக் கல்வி ஆண்டில் சென்னை மாநகராட்சிப் பள்ளிகளில் பயிலும் 5,000 மாணவர்களுக்கும், அடுத்த கல்வி ஆண்டில் 20,000 மாணவர்களுக்கும் காலை உணவு வழங்கத் திட்டமிட்டுள்ளோம். அதன்படி, இட்லி, உப்புமா, பொங்கல் ஆகியவை இலவசமாக வழங்கப்படும் என்றனர்.
இந்த நிகழ்ச்சியில், மீன்வளத் துறை அமைச்சர் டி.ஜெயக்குமார், சமூகநலத் துறை அமைச்சர் டாக்டர் வி.சரோஜா, தென் சென்னை மக்களவை உறுப்பினர் டாக்டர் ஜெ.ஜெயவர்தன், ஆளுநரின் கூடுதல் தலைமைச் செயலர் ராஜகோபால், நகராட்சி நிர்வாகம், குடிநீர் வழங்கல் துறை முதன்மைச் செயலர் ஹர்மந்தர் சிங், பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் ஜி.பிரகாஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.