தமிழகத்தில் ரூ.14 ஆயிரம் கோடிக்கு புதிய தொழில் திட்டங்கள்: அடிக்கல் நாட்டினார் முதல்வர் பழனிசாமி

தமிழகத்தில் ரூ.14 ஆயிரம் கோடிக்கு 12 புதிய தொழில் திட்டங்களுக்கு முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி அடிக்கல் நாட்டினார்.  


தமிழகத்தில் ரூ.14 ஆயிரம் கோடிக்கு 12 புதிய தொழில் திட்டங்களுக்கு முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி அடிக்கல் நாட்டினார்.  இதன் மூலம் 12 ஆயிரத்து 294 வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
இதுகுறித்து, தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பு:
சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் உலக முதலீட்டாளர் மாநாடு கடந்த மாதம் நடைபெற்றது. இம்மாநாட்டில் பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டன. அதன்படி, ஹூண்டாய் நிறுவனம் காஞ்சிபுரம் மாவட்டம் இருங்காட்டுக்கோட்டை சிப்காட் தொழிற்பூங்காவில் ரூ.7 ஆயிரம் கோடி முதலீட்டில் மின்சக்தி பேட்டரி கார் உற்பத்தித் தொழிற்சாலை மற்றும் கார் உற்பத்தி ஆலையின் விரிவாக்கத் திட்டத்துக்கும்,  எம்.ஆர்.எஃப். நிறுவனம் பெரம்பலூர் மாவட்டம் நாரணமங்கலம் கிராமத்தில் டயர் உற்பத்தி விரிவாக்கத் திட்டத்துக்கும்,  சுந்தரம் க்ளேடன் குழுமம்,  ஒசூர்,  ஒரகடம் ஆகிய இடங்களில் இருசக்கர வாகனம் மற்றும் வாகன உதிரி பாகங்கள் தயாரிக்கும் விரிவாக்கத் திட்டத்துக்கும் தமிழக அரசுடன் ஒப்பந்தம் செய்தன.
  வீல்ஸ் இந்தியா நிறுவனம், தேர்வாய்கண்டிகை சிப்காட் பூங்காவில் வாகன உதிரி பாகங்கள் தயாரிக்கும் திட்டத்துக்கும்,  மேண்டோ ஆட்டோமோடிவ் இந்தியா நிறுவனம் காஞ்சிபுரம் மாவட்டம் இருங்காட்டுக்கோட்டை சிப்காட் தொழிற் பூங்காவில் வாகன உதிரி பாகங்கள் தயாரிக்கும் திட்டத்துக்கும், செல்காம்ப் உற்பத்தி நிறுவனம்,  காஞ்சிபுரம் மாவட்டம் நோக்கியா டெலிகாம் சிறப்புப் பொருளாதார மண்டலத்தில் கைபேசி மின்னேற்றிகள் உற்பத்தி செய்யும் விரிவாக்கத் திட்டத்துக்கும்,  லட்சுமி மெஷின் ஒர்க்ஸ் லிமிடெட் நிறுவனம்,  கோவையில் தனது ஆலையை விரிவாக்கம் செய்யும் திட்டத்துக்கும் அரசுடன் ஒப்பந்தம் செய்துள்ளது.
ரூட்ஸ் இந்தியா லிமிடெட் நிறுவனம், கோவை மாவட்டத்தில் வானூர்தி,  வாகனம் மற்றும் பிற பொறியியல் தொழில்களில் அதிநுட்பபாகங்கள் தயாரிக்கும் திட்டத்துக்கும்,  ரூட்ஸ் மல்டிக்ளீன் லிமிடெட் நிறுவனம் கோவையில் தொழிற்சாலைகள்,  நகர சாலைகள்,  விமான ஓடு பாதைகள்,  வீடுகள் உள்ளிட்ட இடங்களை சுத்தம் செய்யும் அதிநவீன கருவிகளை உற்பத்தி செய்யும் திட்டத்துக்கும்,  ப்யூர் கெமிக்கல்ஸ் நிறுவனம், திருவள்ளூர் மாவட்டம் தேர்வாய்கண்டிகை சிப்காட் தொழிற்பூங்காவில் சிறப்பு வேதிப் பொருள்களை உற்பத்தி செய்யும் திட்டத்துக்கும், ஜெஎஸ் ஆட்டோ காஸ்ட் பவுண்டரீஸ் லிமிடெட் நிறுவனம், ஈரோடு பெருந்துறை சிப்காட் தொழிற்பூங்காவில் வாகன உற்பத்திக்கான வார்ப்பட பாகங்களை உற்பத்தி செய்யும் திட்டத்துக்கும், சாஸ்த்ரா நிகர்நிலைப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர் மாவட்டத்தில் உயர்கல்விக்கான தங்கும் விடுதி வசதிகளுடன் கூடிய ஒருங்கிணைந்த கல்விக்கூடம் அமைக்கும் திட்டத்துக்கும் தமிழக அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்களைச் செய்துள்ளன.
இந்த ஒப்பந்தங்களின் அடிப்படையில், மொத்தம் ரூ.14 ஆயிரத்து 71 கோடி முதலீட்டில் 12 திட்டப் பணிகளுக்கு முதல்வர் பழனிசாமி புதன்கிழமை அடிக்கல் நாட்டினார். இதன் அடிப்படையில், 12 ஆயிரத்து 294 பேருக்கு வேலைவாய்ப்புகள் அளிக்கப்பட உள்ளன.
வணிக உற்பத்தி தொடக்கம்: கடந்த 2015-ஆம் ஆண்டு முதலாவது உலக முதலீட்டாளர் மாநாடு நடந்தது. அதில், புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்த நிறுவனங்களில் ஷெக் லாங் பயோடெக் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனம், திருவள்ளூர் மாவட்டம் தேர்வாய்கண்டிகை சிப்காட் தொழில்பூங்கா மற்றும் காஞ்சிபுரம் மாவட்டம் கடப்பாக்கம் கிராமம் ஆகிய இடங்களில் 170 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையிலான புதிய தொழிற்சாலையின் வணிக உற்பத்தியை முதல்வர் பழனிசாமி தொடக்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில், அமைச்சர்கள் டி.ஜெயக்குமார், எம்.சி.சம்பத், தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், தொழில்துறை முதன்மைச் செயலாளர் என்.முருகானந்தம் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com