மீனாட்சி அம்மன் கோயில் சொத்துகள் எவ்வளவு?: அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

மதுரை மீனாட்சி அம்மன் கோயில், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில்களுக்கு எவ்வளவு சொத்துகள் உள்ளன? அதனை அனுபவிப்பவர்கள் யார்?
மீனாட்சி அம்மன் கோயில் சொத்துகள் எவ்வளவு?: அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு


மதுரை மீனாட்சி அம்மன் கோயில், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில்களுக்கு எவ்வளவு சொத்துகள் உள்ளன? அதனை அனுபவிப்பவர்கள் யார்? என்பது குறித்த விரிவான அறிக்கையை இந்து சமய அறநிலையத்துறை தாக்கல் செய்யுமாறு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை புதன்கிழமை உத்தரவிட்டுள்ளது.
 திருத்தொண்டர் சபை நிறுவனர் ராதாகிருஷ்ணன், சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த பொது நல மனு:
மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில்,  திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் ஆகியவற்றுக்கு தர்ம காரியங்களுக்காக சூறாவளி சுப்பையர் கட்டளை சொத்துகள் தானமாக வழங்கப்பட்டன. இந்நிலையில் மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் எதிரே ரூ.4 ஆயிரம் கோடி மதிப்பிலான 80 ஏக்கர் கோயில் சொத்துகள் இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் அனுமதியின்றி விற்பனை செய்யப்பட்டுள்ளன.
இந்தச் சொத்துகளை மீட்க வேண்டும் என மாவட்ட ஆட்சியருக்கு மனு அளித்ததன் பேரில் குழு அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. இதில், கோயில் கட்டளை சொத்துகள் உறுதி செய்யப்பட்டது. எனவே, மதுரை மாவட்ட ஆட்சியர்  தலைமையில் தொடர்புடைய அனைத்து துறைகளும் இணைந்து கோயிலுக்கு சொந்தமான நிலங்களை மீட்க நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் என்.கிருபாகரன், எஸ்.எஸ்.சுந்தர் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள்,  மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலுக்கு சொந்தமாக தற்போது எவ்வளவு சொத்துகள் உள்ளன? அதில் அசையும் மற்றும் அசையா சொத்துகள் விவரம் என்ன?  
கோயிலுக்கு சொத்துகளை தானமாக வழங்கிய சூறாவளி சுப்பையரின் ரத்த பந்தங்கள் நேரில் ஆஜராக வேண்டும். 
அதை மாநகர் காவல் ஆணையர் உறுதிப்படுத்த வேண்டும் என்று உத்தரவிட்டனர். 
இதேபோல  ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீஆண்டாள் கோயிலுக்கு சொந்தமாக உள்ள சொத்துகளின் விவரம், அவற்றில் எவ்வளவு ஆக்கிரமிப்பில் உள்ளன?  ஆக்கிரமிப்புகளை அகற்ற எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன?  ஆகிய விவரங்களையும் அறிக்கையாக தாக்கல் செய்யவேண்டும் என்று தெரிவித்த நீதிபதிகள், கோயிலுக்கு சொந்தமான சொத்துகளில் ஆக்கிரமிப்புகளை அகற்ற, வருவாய்த்துறை, நகராட்சி நிர்வாகத்தினர் உரிய ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். இல்லாவிட்டால் துறைரீதியான நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்படும் என தெரிவித்து விசாரணையை வரும் மார்ச் 13-ஆம்  தேதிக்கு ஒத்திவைத்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com