புயல் தாக்கிய பிறகு பைக்கில் சென்றது ஏன்?: அமைச்சர் ஓ.எஸ்.மணியன் விளக்கம்

கஜா புயல் மிகக் கடுமையான சேதத்தை ஏற்படுத்திய நாகப்பட்டினம் மாவட்டத்தில் எதிர்க்கட்சியினர் பல்வேறு விதமான அரசியல் செய்ததாக கைத்தறி மற்றும்
புயல் தாக்கிய பிறகு பைக்கில் சென்றது ஏன்?: அமைச்சர் ஓ.எஸ்.மணியன் விளக்கம்


கஜா புயல் மிகக் கடுமையான சேதத்தை ஏற்படுத்திய நாகப்பட்டினம் மாவட்டத்தில் எதிர்க்கட்சியினர் பல்வேறு விதமான அரசியல் செய்ததாக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஓ.எஸ். மணியன் குற்றம் சாட்டினார். மேலும், புயலுக்குப் பிறகு காரில் செல்லாமல் பைக்கில் சென்றது ஏன் எனவும் விளக்கினார்.
சட்டப் பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதானவிவாதம் வெள்ளிக்கிழமை தொடங்கியது. இந்த விவாதத்தில் திமுக உறுப்பினர் மெய்யநாதன் பேசினார். அப்போது, குறுக்கிட்ட அமைச்சர் ஓ.எஸ்.மணியன், கஜா புயலின் போது தனக்கு தனிப்பட்ட முறையில் நடந்த விஷயங்களைப் பட்டியலிட்டுப் பேசியது:
கஜா புயல் தாக்கிய நேரத்தில் வேதாரண்யத்தில் உள்ள எம்.எல்.ஏ. அலுவலகத்தில் இருந்து பணிகளை ஒருங்கிணைத்துக் கொண்டிருந்தேன். அதிகாலை 4.30 மணிக்கு அனைத்துத் தொடர்புகளும் துண்டிக்கப்பட்டன. இதைத் தொடர்ந்து, வேதாரண்யத்தில் இருந்து நாகப்பட்டினம் நோக்கி மரங்களை அறுத்துக் கொண்டே சென்றோம். பிற்பகல் 3 மணி வரை சாப்பிடாமல் தொடர்ந்து பணி செய்தோம். எனக்கு சர்க்கரை வியாதி என்பதால் அதற்கு மேல் பணி செய்ய முடியவில்லை. மேலும், நாகையில் இருந்து வேதாரண்யத்துக்கு சாலை வழியாக காரில் செல்ல முடியவில்லை. இதனால், பைக்கில் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. ஆனால், பைக்கில் சென்றதைப் பார்த்து மக்களிடம் இருந்து தப்பித்துச் செல்வதாக செய்தி வெளியிடுகிறார்கள்.
இதனிடையே, கடலூர் மாவட்டத்தில் தானே புயல் அடித்த போது, நாகைக்கு இன்னும் சேதம் இல்லை, இன்னும் மழை வேண்டும் என அப்போது கூறியதை இப்போது கஜா புயலுக்குக் கூறியது போன்று வெட்டி ஒட்டி எதிர்க்கட்சியைச் சேர்ந்தவர்கள் சமூக ஊடகங்கள் வழியாக அவதூறு பரப்பினர். (அமைச்சரின் இந்தக் கருத்துக்கு திமுக உறுப்பினர்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர்)
வாழ்வாதாரத்தை இழந்து மக்கள் தவித்த மூன்றாவது நாளிலேயே சாலை மறியல் செய்யப்பட்டது. அதிகாரிகள், மின்பணியாளர்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை. ஆனால், திமுக தலைவர் ஸ்டாலின் வந்த போது வழிவிட்டார்கள். அப்படியென்றால், சாலை மறியல் செய்தது யார்?
1952-க்குப் பிறகு வரலாறு காணாத அளவில் புயல் கடுமையான அளவில் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே, நாம் அனைவரும் கைகோத்து அரசியல் காழ்ப்புணர்ச்சி இல்லாமல் மக்களைக் காப்பாற்ற வேண்டும். மக்கள் மிகக் கடுமையாக பாதித்த நிலையில், அவர்களை வாழ வைக்க வேண்டும் என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com