தேசிய மருத்துவ ஆணையத்தால் மருத்துவத் துறையை மேம்படுத்த முடியுமா?

இந்திய மருத்துவ கவுன்சிலை கலைத்துவிட்டு தேசிய மருத்துவ ஆணையத்தை மத்திய அரசு ஏற்படுத்த முயற்சிப்பதால், மருத்துவத் துறை மேம்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
தேசிய மருத்துவ ஆணையத்தால் மருத்துவத் துறையை மேம்படுத்த முடியுமா?

இந்திய மருத்துவ கவுன்சில் மூன்றில் இரண்டு பகுதி உறுப்பினர்கள், அதாவது 80 சதவீதம் பேர் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களும், 20 சதவீதம் பேர் நியமன உறுப்பினர்களும் ஆவர். உறுப்பினர்கள் அனைவரும் மருத்துவர்களாக இருப்பர். அவர்களின் பரிந்துரையின் பேரிலேயே புதிய மருத்துவக் கல்லூரிக்கு அனுமதி கிடைக்கும்.
 கோவை: இந்திய மருத்துவ கவுன்சிலை கலைத்துவிட்டு தேசிய மருத்துவ ஆணையத்தை மத்திய அரசு ஏற்படுத்த முயற்சிப்பதால், மருத்துவத் துறை மேம்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
 இந்திய சுகாதாரம், மருத்துவக் கல்விக் கொள்கைகளை உருவாக்குவது, மருத்துவமனைகள், நுகர்வோருக்கான மருத்துவ சேவைகள், மருத்துவர்களின் தொழில் நெறி ஆகியவற்றை வரையறுப்பதில் இந்திய மருத்துவ கவுன்சில் என்ற தன்னாட்சி அமைப்பு முக்கிய பங்கு வகித்து வந்தது. இந்த தன்னாட்சி அமைப்பு இந்திய மருத்துவ கவுன்சில் சட்டம் 1993 -இன் படி 1934-ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது.
 அனைவருக்கும் ஒரே மாதிரியான மற்றும் தரமான மருத்துவ சிகிச்சையும், மருத்துவக் கல்வியும் கிடைக்க வேண்டும் என்பதே அமைப்பின் பிரதான நோக்கம் ஆகும். நாடு சுதந்திரம் அடைந்த பிறகு மருத்துவக் கல்லூரிகளின் எண்ணிக்கை படிப்படியாக உயரத் தொடங்கின. வேகமான வளர்ச்சியை நோக்கிச் சென்ற மருத்துவக் கல்வியின் சவாலை சமாளிக்க வேண்டிய சூழல் உருவானது. இதையடுத்து, மருத்துவக் கவுன்சில் சட்டம் என்பது 1956, 1964, 1993, 2001 ஆகிய ஆண்டுகளில் மாற்றி அமைக்கப்பட்டது.
 இதில் மருத்துவக் கல்வியின் தரத்தை நிர்வகிப்பதும், மருத்துவக் கல்லூரிகளின் தரத்தை ஆய்வு செய்து, நடவடிக்கை மேற்கொள்வதும், புதிய மருத்துவக் கல்லூரிகளுக்கு அனுமதி அளிப்பதும், மருத்துவக் கல்லூரிகளில் பட்டப் படிப்புகளுக்கான இடங்களின் எண்ணிக்கையை நிர்ணயிப்பதும், வெளிநாடுகளில் இருந்து பெறப்படும் மருத்துவப் பட்டங்களின் தரத்தைப் பரிசோதிப்பது உள்ளிட்ட பல்வேறு பணிகளை இந்த அமைப்பு மேற்கொண்டு வந்தது.
 இந் நிலையில், இந்திய மருத்துவ கவுன்சில் அமைப்பை கலைத்துவிட்டு அதற்கு மாற்றாக தேசிய மருத்துவ ஆணையம் அமைப்பதற்கான மசோதாவை மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஜே.பி.நட்டா, நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார்.
 இதைத் தொடர்ந்து இந்திய மருத்துவ கவுன்சில் மேற்கொண்டு வந்த அனைத்துப் பணிகளையும், ஆணையத்தின் கீழ் உருவாகப்படவுள்ள 4 தன்னாட்சி அமைப்புகளே மேற்கொள்ளும்.
 இதில் இளநிலை மருத்துவப் பட்டப்படிப்பு வாரியம், முதுநிலை மருத்துவப் பட்ட மேற்படிப்பு வாரியம், மருத்துவக் கல்லூரி ஆய்வு மற்றும் மதிப்பீடு வாரியம், மருத்துவ நெறி மற்றும் மருத்துவப் பதிவு வாரியம் போன்ற நான்கு வாரியங்கள் அமைக்கப்படும். ஒவ்வொரு வாரியத்துக்கும் தலைவர், இரண்டு உறுப்பினர்கள் என மூன்று பேர் இடம்பெறுவார்கள்.
 தேசிய மருத்துவ ஆணையத்தில் மொத்தம் 25 பேர் உறுப்பினர்களாகப் பதவி வகிப்பார்கள். அவர்களில் தலைவர், செயலாளர், நான்கு வாரியத்தின் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள் என மொத்தமுள்ள 14 பதவிகளுக்கான நபர்கள் மத்திய அரசால் நியமிக்கப்படுவார்கள்.
 இவர்களது பதவிக் காலம் 4 ஆண்டுகள் ஆகும். மீதமுள்ள 11 பேர் பகுதிநேர உறுப்பினர்கள் ஆவர். இவர்களது பதவிக் காலம் 2 ஆண்டுகள். மேலும் ஆணையத்துக்கு ஆலோசனை வழங்க மருத்துவ ஆலோசனை கவுன்சில் என்ற அமைப்பும் ஏற்படுத்தப்படும்.
 இதில் மாநிலம் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இருந்து ஒரு நியமன உறுப்பினர் என 36 பேரும், தேசிய மருத்துவ ஆணையத்தின் 14 முழு நேர உறுப்பினர்களும் இடம்பெறுவார்கள். இந்த கவுன்சிலின் தலைவராக, ஆணையத்தின் தலைவரே இருப்பார். மருத்துவ ஆணையத்துக்கு ஆலோசனை வழங்கும் அதிகாரம் மட்டுமே கவுன்சில் உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த கவுன்சிலில் இடம்பெற்றுள்ள 36 மாநிலங்களின் நியமன உறுப்பினர்களில் 6 பேர் மட்டுமே சுழற்சி முறையில் ஆணையத்தின் உறுப்பினர்களாக செயல்படுவார்கள்.
 தற்போது மாற்றி அமைக்கப்பட்டுள்ள விதிகளின்படி புதிய மருத்துவக் கல்லூரிகளுக்கு அனுமதி வழங்குவது, உள்கட்டமைப்பு மற்றும் செயல்பாட்டை ஆய்வு செய்வது, தண்டனை வழங்குவது மருத்துவக் கல்லூரி ஆய்வு மற்றும் மதிப்பீடு வாரியமே மேற்கொள்ளும். இந்த ஆய்வுகளை தனியார் தர ஆய்வு நிறுவனங்களே மேற்கொள்ளும் எனக் கூறப்படுகிறது.
 மேலும் கல்லூரிகளில் மருத்துவ இடங்களுக்கு ஆணையம் அனுமதி மட்டுமே அளிக்கும், கல்லூரிகளே தன்னிச்சையாக மருத்துவ இடங்களை உயர்த்திக் கொள்ளலாம். கல்லூரிகளில் 40 சதவீத இடங்களுக்கு மட்டுமே கல்விக் கட்டணம் நிர்ணயம் செய்ய முடியும். மீதமுள்ள 60 சதவீத இடங்களுக்கான கட்டணத்தை கல்லூரி நிர்வாகமே நிர்ணயம் செய்து கொள்ளலாம்.
 எம்.பி.பி.எஸ். மருத்துவப் படிப்பு முடித்த பிறகு, பதிவு செய்து மருத்துவத் தொழிலில் ஈடுபட வேண்டுமானால் தேசிய உரிமத் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி மருத்துவம் பயின்றவர்கள் 6 மாதம் இணைப்பு படிப்பு படித்தால் ஆங்கில மருத்துவம் செய்யலாம். தேசிய மருத்துவ ஆணையம் மற்றும் வாரியங்களின் செயல்பாடு மற்றும் முடிவுகளில் நேரடியாகத் தலையிடும் அதிகாரம் மத்திய அரசுக்கு உள்ளது.
 மேலும் மருத்துவ ஆலோசனைக் குழுவில் இருந்து 6 பேர் மட்டுமே பகுதி நேர உறுப்பினர்களாக ஆணையத்தில் இடம்பெற முடியும். அவ்வாறு ஆணையத்தில் உறுப்பினர்களாக நியமனம் செய்யப்படும்போது ஒரு மாநிலத்துக்கு 10 ஆண்டுகள் அல்லது 15 ஆண்டுகள் ஒருமுறை மட்டுமே வாய்ப்பு கிடைக்கும்.
 ஆனால், இந்திய மருத்துவ கவுன்சிலில் மூன்றில் இரண்டு பகுதி உறுப்பினர்கள், அதாவது 80 சதவீதம் பேர் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களும், 20 சதவீதம் பேர் நியமன உறுப்பினர்களும் ஆவர்.
 இதில் உறுப்பினர்கள் அனைவரும் மருத்துவர்களாக இருப்பர். அவர்களின் பரிந்துரையின் பேரிலேயே புதிய மருத்துவக் கல்லூரிக்கு மத்திய அரசு அனுமதி அளிக்கும். மருத்துவக் கல்லூரிகளில் உரிய ஆய்வுக்கு பிறகே இடங்களை அதிகரிக்க அனுமதி அளிக்கப்படும். மருத்துவ கவுன்சிலில் பதிவு செய்யாமல் மருத்துவத் தொழிலில் ஈடுபட முடியாது என்பன போன்ற பல்வேறு கட்டுப்பாடுகள் இருந்தன.
 இதுகுறித்து இந்திய மருத்துவக் கவுன்சிலின் முன்னாள் உறுப்பினர் டாக்டர் எல்.பி.தங்கவேலு கூறியதாவது: இந்திய மருத்துவ கவுன்சிலில் முறைகேடுகள் உள்ளது என்பதை மறுக்க முடியாது. ஆனால், இதனை காரணமாகக் கொண்டே மத்திய அரசு தேசிய மருத்துவ ஆணையத்தை கொண்டு வர முயற்சிக்கிறது. இந்திய மருத்துவ கவுன்சில் மூலமே நாட்டில் உள்ள மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவக் கல்வியின் தரத்தையும், செயல்பாட்டையும் சரியாக நிர்ணயம் செய்து வரமுடிந்தது.
 ஆனால், தற்போது தேசிய மருத்துவ ஆணையத்தில் 80 பேர் நியமன உறுப்பினர்கள், 20 பேர் மட்டுமே தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள். இந்த நியமன உறுப்பினர்கள் ஐ.ஏ.எஸ்., வழக்குரைஞர்கள் என மருத்துவர் அல்லாத பிற துறைகளைச் சேர்ந்தவர்களே நியமிக்கப்படுவார்கள். அவ்வாறு நியமிக்கப்படும் போது மருத்துவக் கல்லூரி, மருத்துவக் கல்வியின் தரத்தையும் செயல்பாட்டையும் மேம்படுத்த முடியாது. மேலும் முறைகேடுகள் அதிகரிக்கவே வாய்ப்பு உள்ளது. மேலும் மாநிலத்துக்கு உரிய பிரதிநிதித்துவம் கிடைக்காது. அவ்வாறு கிடைக்கவில்லை என்றால் நமது குறைகள் குறித்து ஆணையத்தில் முறையிட வாய்ப்பு கிடைக்காது. புதிய கல்லூரிகளுக்கு அனுமதி, மருத்துவ இடங்களுக்கு, புதிய பாடப் பிரிவுக்கு அனுமதி, கல்வி கட்டணம் அதிகரிப்பதற்கு எவ்வித கட்டுப்பாடும் இருக்காது. மேலும் நிர்வாக ஒதுக்கீட்டின் கீழ் மருத்துவ படிப்புக்கான இடத்துக்கு பல லட்சம் வசூலிக்க வழிவகை செய்யும்.
 எனவே, இந்திய மருத்துவ கவுன்சிலில் முறைகேடுகள் இருப்பின் அதனை களைந்து நேர்மையான முறையில் செயல்படத் தேவையான நடவடிக்கைகள் எடுப்பதே சரியானத் தீர்வாகும். மாறாக மருத்துவர்களே அல்லாத உறுப்பினர்களைக் கொண்டு தேசிய மருத்துவ ஆணையத்தை அமைப்பதால் மருத்துவத் துறைக்கு பின்னடைவே தவிர எவ்வித ஏற்றமும் ஏற்படப் போவதில்லை என்றார்.
 -ந.கார்த்திக் பிரபு
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com