அனுமதியின்றி பொங்கல் சிறப்புக் காட்சி திரையிட்டால் அபராதம்

அனுமதி பெறாமல் பொங்கல் திரைப்பட சிறப்புக் காட்சி திரையிடும் திரையரங்குகளுக்கு ரூ. 50 ஆயிரம் அபராதம் விதிக்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக, அமைச்சர் கடம்பூர்
அனுமதியின்றி பொங்கல் சிறப்புக் காட்சி திரையிட்டால் அபராதம்


அனுமதி பெறாமல் பொங்கல் திரைப்பட சிறப்புக் காட்சி திரையிடும் திரையரங்குகளுக்கு ரூ. 50 ஆயிரம் அபராதம் விதிக்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக, அமைச்சர் கடம்பூர் செ. ராஜு தெரிவித்தார். 
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியையடுத்த நாலாட்டின்புத்தூரில் செய்தியாளர்களிடம் அவர் வியாழக்கிழமை கூறியது: பொங்கல் திரைப்பட சிறப்புக் காட்சிக்கு தமிழக அரசு அனுமதி அளிக்கவில்லை. சில தவறான தகவல், ஆன்லைன் டிக்கெட் முன்பதிவு காரணமாக சில திரையரங்குகளில் சிறப்புக் காட்சிகள் திரையிடப்பட்டுள்ளன. அந்தத் திரையரங்குகளுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், ரூ. 50 ஆயிரம் அபராதம் விதிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும். சிறப்புக் காட்சிக்கு அனுமதி கேட்டால் பரிசீலிக்கப்படும்.
அம்மா திரையரங்கம் மாநகராட்சிக்கு மட்டும்தான் அறிவிக்கப்பட்டிருந்தது. தமிழகம் முழுவதும் அம்மா திரையரங்கம் அமைப்பது குறித்து பேரவை மானியக் கோரிக்கையின்போது அரசு பரிசீலிக்கும். 
திரையரங்குகளில் விற்கப்படும் உணவுப் பொருளுக்கு அதிகக் கட்டணம் வசூலிக்கக் கூடாது, வெளியிலிருந்து கொண்டுசெல்லும் உணவுப் பொருள், குடிநீரைத் தடைசெய்யக் கூடாது என ஏற்கெனவே திரையரங்கு உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதற்கு நிரந்தரத் தீர்வு காண திரையரங்கு உரிமையாளர்கள், விநியோகஸ்தர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தப்படும். 
பாஜகவுடன் அதிமுக கூட்டணி இல்லை என தம்பிதுரை கூறியது அவரது சொந்தக் கருத்து. அவருக்கு அதிகாரமில்லை எனச் சொல்ல மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணனுக்கு அதிகாரமில்லை. தேர்தல் அறிவிப்புக்குப் பின், கூட்டணி தொடர்பான நிலைப்பாட்டை கட்சி ஒருங்கிணைப்பாளர், துணை ஒருங்கிணைப்பாளர் அறிவிப்பர். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக, ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகச்சாமி விசாரணை கமிஷன் விசாரித்துவருவதால் இப்போது எந்தக் கருத்தையும் தெரிவிக்க முடியாது. விசாரணை கமிஷன் அறிக்கை வந்தபின்பு உண்மைகள் வெளிவரும் என்றார் அவர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com