ஆண்டுக்கு 100 பில்லியன் டாலர் ஏற்றுமதி இலக்கு: தமிழக அரசு

அடுத்த 5 ஆண்டுகளில் ஆண்டுக்கு 100 பில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.7 லட்சம் கோடி) என்ற அளவில் பொருள்களை

அடுத்த 5 ஆண்டுகளில் ஆண்டுக்கு 100 பில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.7 லட்சம் கோடி) என்ற அளவில் பொருள்களை ஏற்றுமதி செய்வதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. 
இந்திய அளவில் வர்த்தக வளர்ச்சிக்கான குழுவின் நான்காவது கூட்டம், தில்லியில் மத்திய தொழில் மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் சுரேஷ் பிரபு தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் தமிழக அரசின் சார்பில் மாநிலத் தொழில் துறை அமைச்சர் எம்.சி. சம்பத் பங்கேற்றுப் பேசியதாவது:
அடுத்த 5 ஆண்டுகளில் ஆண்டுக்கு 100 பில்லியன் டாலர் என்ற அளவில் பொருள்களை ஏற்றுமதி செய்வதற்கு பல்வேறு நடவடிக்கைகளை எடுக்கத் திட்டமிட்டுள்ளோம். குறிப்பாக ஏற்றுமதி தொழில்சார் பகுதிகளில் உள்ள உள்கட்டமைப்பு இடைவெளியைக் குறைப்பதற்குத் திட்டமிட்டுள்ளோம். 
தமிழகத்தில் உள்ள 19 சிறிய அளவிலான துறைமுகங்களை மேம்படுத்தவுள்ளோம். சிறு குறு தொழில் நிறுவனங்களுக்கு உதவும் வகையில், மாவட்டத் தொழில் மையங்களில் தனிப் பிரிவுகளை தமிழக அரசு ஏற்படுத்தியுள்ளது. ஏற்றுமதி தொழில் நிறுவனங்களுக்கு தடையில்லா மின்சாரம் வழங்கப்படுகிறது.
தமிழகத்தில் 38 சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் செயல்பட்டு வருகின்றன. புதிய சிறப்புப் பொருளாதார மண்டலங்களுக்கு ஊக்கம் அளித்து வருகிறோம். தோல், ஜவுளி, வாகன உதிரி பாகங்கள் உள்ளிட்ட ஏற்றுமதி தொழில் நிறுவனங்களில் திறமையான தொழிலாளர்களைப் பணியமர்த்தும் வகையில், தமிழக அரசு திறன்மேம்பாட்டுத் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
ஏற்றுமதியை இரட்டிப்பாக்க வேண்டுமானால், உள்கட்டமைப்புசார் பிரச்னைகளுக்கு தீர்வு காண வேண்டியுள்ளது. ஏற்றுமதி உள்கட்டமைப்பு நிதியாக மாநிலங்களுக்கு தலா ரூ. 50 கோடி முதல் ரூ.60 கோடியை மத்திய அரசு வழங்கி வந்தது. இந்த நிதி 2015-16 ஆண்டில் நிறுத்தப்பட்டது. கடந்த நிதியாண்டில் மட்டும் தமிழகத்தில் உற்பத்தி செய்யப்பட்ட ஏற்றுமதிப் பொருள்களின் மதிப்பு ரூ. 1 லட்சத்து 90 ஆயிரத்துக்கு 285 கோடியாகும்.
இவற்றுக்கு மாநில சரக்குகள் மற்றும் சேவைகள் வரியை (எஸ்ஜிஎஸ்டி) 9 சதவீதமாகக் கருத்தில் கொண்டால்கூட ரூ. 17,125 கோடி அளவுக்கு பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளது. இதை கருத்தில் கொண்டு, ஏற்றுமதிசார் உள்கட்டமைப்பை மேம்படுத்த மத்திய அரசு 1 சதவீத நிதியை மாநிலங்களுக்கு அளிக்க வேண்டும். ஏற்றுமதி பொருள்களுக்கான வருமான வரி விலக்கு தொடர்பாக 2010-ஆம் ஆண்டிலிருந்து அமல்படுத்த மத்திய அரசு உத்தேசித்துள்ள திட்டத்தை 5 ஆண்டுகளுக்கு ஒத்திவைக்க வேண்டும் என்றார் அமைச்சர் எம்.சி. சம்பத்.
இக்கூட்டத்தில், தமிழக அரசின் கூடுதல் தலைமைச் செயலரும் தொழில்துறை செயலருமான ஆர்.ஞானதேசிகன், தமிழக இல்லத்தின் உள்ளுறை ஆணையர் ஹிதேஷ்குமார் எஸ்.மக்வானா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com