ஆலங்குடி கோயிலில் ரூ.6.71 கோடி மதிப்பில் தங்கும் விடுதி

நவகிரக தலங்களில் ஒன்றாக போற்றப்படும் திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் வட்டம், ஆலங்குடி ஆபத்சகாயேசுவரர்
தங்கும் விடுதி அடிக்கல் நாட்டு விழாவில் பங்கேற்ற அமைச்சர் ஆர். காமராஜ். 
தங்கும் விடுதி அடிக்கல் நாட்டு விழாவில் பங்கேற்ற அமைச்சர் ஆர். காமராஜ். 


நவகிரக தலங்களில் ஒன்றாக போற்றப்படும் திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் வட்டம், ஆலங்குடி ஆபத்சகாயேசுவரர் குரு பரிகார கோயிலில், ஆசிய வளர்ச்சி வங்கி நிதியுதவியுடன் ரூ.6.71 கோடி மதிப்பிலான தங்கும் விடுதி (யாத்ரி நிவாஸ்) கட்டுமானப் பணிக்கு முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி, காணொலி காட்சி வாயிலாக வியாழக்கிழமை அடிக்கல் நாட்டினார்.
ஆலங்குடி ஆபத்சகாயேசுவரர் கோயில் நவகிரக தலங்களில் குரு பகவானுக்கு பரிகார தலமாக விளங்குகிறது. ஆண்டுதோறும் குரு பகவான் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு பிரவேசம் செய்யும் நாளில், குரு பெயர்ச்சி விழா இங்கு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். வரலாற்றுச் சிறப்புமிக்க இக்கோயிலுக்கு, விழாக்காலங்களில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும், பிற மாநிலங்களிலிருந்தும், வெளிநாடுகளிலிருந்தும் திரளான பக்தர்கள் வருகை தருகின்றனர்.
வாரந்தோறும் வியாழக்கிழமைகளிலும், விடுமுறை நாள்களிலும் திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய வருகின்றனர். எனவே, பக்தர்களின் நலன் கருதி, தங்கும் விடுதி கட்டப்பட வேண்டும் என கோரிக்கை எழுந்தது.
இதை ஏற்று ஆசிய வளர்ச்சி வங்கியின் நிதி உதவியுடன் ரூ.6.71 கோடி மதிப்பில், ஆலங்குடியில் பக்தர்கள் தங்கும் விடுதி கட்ட தமிழக அரசு முடிவு செய்தது. இதற்கான அடிக்கல் நாட்டு விழா வியாழக்கிழமை நடைபெற்றது. இதையொட்டி, தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி, காணொலி காட்சி வாயிலாக சென்னையில் இருந்தவாறு கட்டடத்துக்கு அடிக்கல் நாட்டினார்.
அர்ச்சகர்கள் வேத மந்திரங்களைச் சொல்லி சிறப்பு பூஜைகளை செய்தனர். இதில், தமிழக உணவுத்துறை அமைச்சர் ஆர். காமராஜ் கலந்துகொண்டார். அறநிலைய உதவி ஆணையர் மற்றும் கோயில் செயல் அலுவலர் தமிழ்ச்செல்வி, அறநிலைய ஆய்வாளர் தமிழ்மணி, வலங்கைமான் வட்டாட்சியர் சந்தான கோபாலகிருஷ்ணன், ஒன்றிய ஆணையர்கள் சிவக்குமார், ஜெயராஜ், வலங்கைமான் மேற்கு ஒன்றிய அதிமுக செயலாளர் சங்கர், கிழக்கு ஒன்றியத் துணைச் செயலாளர் இளவரசன், மாவட்ட மாணவரணி இணைச் செயலாளர் ஜெய இளங்கோவன், மாவட்ட எம்.ஜிஆர். மன்ற துணைத் தலைவர் நடராஜன், ஆலங்குடி ஊராட்சி கழக செயலாளர் துரைராஜ் உள்ளிட்டோர் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com