தாமிரவருணியில் தொழிற்சாலைகளுக்கு தண்ணீர் எடுக்க இடைக்கால தடை: உச்ச நீதிமன்றம் உத்தரவு

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் தாமிரவருணி ஆற்றில் தண்ணீர் எடுக்க 21 தொழிற்சாலைகளுக்கு இடைக்காலத் தடை விதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தாமிரவருணியில் தொழிற்சாலைகளுக்கு தண்ணீர் எடுக்க இடைக்கால தடை: உச்ச நீதிமன்றம் உத்தரவு


புது தில்லி: தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் தாமிரவருணி ஆற்றில் தண்ணீர் எடுக்க 21 தொழிற்சாலைகளுக்கு இடைக்காலத் தடை விதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தாமிரவருணியின் குறுக்கேக் கட்டப்பட்டிருக்கும் ஸ்ரீவைகுண்டம்  அணையில் இருந்து தண்ணீர் எடுக்க தமிழ்நாடு குடிநீர் வழங்கல் மற்றும் வடிகால் வாரியத்துக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டது.

இந்த நிலையில் 2011ம் ஆண்டு தூத்துக்குடியில் உள்ள 21 தொழிற்சாலைகளுக்கு தண்ணீர் அளிக்கும் நடைமுறை இருந்து வருகிறது. இந்த திட்டத்தின்படி, ராட்சத மோட்டார்கள் மூலம் தண்ணீரை எடுத்து குடிநீராக சுத்திகரித்து தொழிற்சாலைகளுக்கு 1000 லிட்டர் தண்ணீர் வெறும் 15 ரூபாய்க்கு வழங்கப்பட்டு வந்தது.

இதனை எதிர்த்து வழக்குரைஞர் எஸ். ஜோயல் பொது நலன் வழக்குத் தொடர்ந்தார். விசாரணையின் முடிவில் எந்த தொழிற்சாலைக்கும் தண்ணீர் வழங்கக் கூடாது என்றும், பொதுமக்களின் குடிநீர்  தேவைக்கு மட்டுமே வழங்க வேண்டும் என்று தேசிய பசுமைத் தீர்ப்பாயம் தீர்ப்பு வழங்கியது.

இந்த உத்தரவுக்குத் தடை விதிக்கக் கோரி தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், ஸ்ரீவைகுண்டம் தாமிரவருணி அணைக்கட்டில் இருந்து 20 எம்ஜிடி திட்டத்தில் தூத்துக்குடி அனல்மின் நிலையத்துக்கும் மற்றும் குடிநீர் தேவைக்கும் மட்டுமே தண்ணீர் எடுக்க வேண்டும். எக்காரணம் கொண்டும் தூத்துக்குடியில் எந்த தொழிற்சாலைக்கும் தண்ணீர் கொடுக்கக் கூடாது என்று இடைக்கால தடை உத்தரவு பிறப்பித்தனர்.

மேலும், மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம் இது தொடர்பாக விரிவாக அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டு வழக்கு விசாரணையை 21ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com