சேலத்தில் ஒருங்கிணைந்த கால்நடைப் பூங்கா: இம்மாத இறுதிக்குள் முதல்வர் அடிக்கல்

சேலம் மாவட்டம், கூட்டு ரோடு பகுதியில் தெற்காசிய அளவில் சிறந்த ஒருங்கிணைந்த கால்நடைப் பூங்காவுக்கு முதல்வர் இம் மாத இறுதிக்குள் அடிக்கல் நாட்டி பணிகளைத் தொடங்கி வைக்கவுள்ளார்
சேலத்தில் ஒருங்கிணைந்த கால்நடைப் பூங்கா: இம்மாத இறுதிக்குள் முதல்வர் அடிக்கல்

சேலம் மாவட்டம், கூட்டு ரோடு பகுதியில் தெற்காசிய அளவில் சிறந்த ஒருங்கிணைந்த கால்நடைப் பூங்காவுக்கு முதல்வர் இம் மாத இறுதிக்குள் அடிக்கல் நாட்டி பணிகளைத் தொடங்கி வைக்கவுள்ளார் என கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
 நாமக்கல் மாவட்டத்தில் கால்நடை பராமரிப்புத் துறை சார்பில் ஊரக புழக்கடை கோழி வளர்ப்புத் திட்டத்தின் கீழ், பயனாளிகளுக்கு கோழிக் குஞ்சுகள் வழங்கும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
 அப்போது, அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி: கால்நடை பராமரிப்புத் துறை மூலம் பல்வேறு திட்டங்கள் சிறப்பாகச் செயல்படுத்தப்பட்டு வருவதால், ஏழை, எளிய மக்களின் வாழ்வாதாரம் மேம்பட்டு வருகிறது. தமிழகத்தில் முதன் முறையாக நாமக்கல் மாவட்ட அளவில் இந்தத் திட்டம் தொடங்கப்பட்டு, ஞாயிற்றுக்கிழமை மற்றும் திங்கள்கிழமைகளில் 1.50 லட்சம் கோழிக் குஞ்சுகள் வழங்கப்பட்டுவிடும்.
 சேலம் மாவட்டம், கூட்டுரோடு பகுதியில் ரூ.950 கோடி மதிப்பீட்டில் தெற்காசிய அளவில் சிறந்த ஒருங்கிணைந்த கால்நடை பூங்கா 1,300 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட உள்ளது.
 அதில் கோழி, மீன், பன்றி மற்றும் பல்வேறு கால்நடைகளின் உற்பத்தி, விற்பனை மையம் அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அண்மையில், மத்திய அமைச்சர் ராதாமோகன் சிங்கைச் சந்தித்து நிதி கேட்டுள்ளோம். முதல்கட்டமாக ரூ.350 கோடி விரைவில் வழங்குவதாக மத்திய அமைச்சர் உறுதியளித்துள்ளார். எனவே, இந்த மாத இறுதியில் சின்னசேலம் கூட்டுரோட்டில் ஒருங்கிணைந்த கால்நடைப் பூங்கா அமைக்க முதல்வர் அடிக்கல் நாட்ட இருக்கிறார்.
 தமிழகத்தில் கோமாரி நோய் முழுவதுமாகக் கட்டுப்படுத்தப்பட்டுவிட்டது. திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் மட்டுமே அந்த நோய் இருந்தது. தற்போது அனைத்து மாவட்டங்களிலும் கோமாரி நோய் தடுக்கப்பட்டுவிட்டது. 900 கால்நடை மருத்துவர் பணியிடங்கள் காலியாக இருந்தன. தற்போது 800 பணியிடங்கள் நிரப்பப்பட்டுவிட்டன.
 தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு இதுவரை 146 விண்ணப்பங்கள் வரப்பெற்றுள்ளன. இதில் 87 விண்ணப்பங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. வரும் 19ஆம் தேதி ஈரோடு மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி வழங்கப்பட்டுவிட்டது. நாமக்கல் மாவட்டம், குமாரபாளையத்தில் மார்ச் மாதம் 3ஆம் தேதி அரசு அனுமதியோடு ஜல்லிக்கட்டு போட்டி நடத்த பூர்வாங்கப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன என்றார்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com