பொங்கலுக்கு பின்னரும் விடுபட்டவர்களுக்கு ரூ.1,000 பொங்கல் பரிசு வழங்கப்படும்: அமைச்சர் காமராஜ்

பொங்கல் பண்டிகைக்கு பின்னரும், விடுபட்டவர்களுக்கான பொங்கல் பரிசுத் தொகை ரூ.1,000 வழங்கப்படும் என உணவுத்துறை அமைச்சர் காமராஜ்
பொங்கலுக்கு பின்னரும் விடுபட்டவர்களுக்கு ரூ.1,000 பொங்கல் பரிசு வழங்கப்படும்: அமைச்சர் காமராஜ்


சென்னை: பொங்கல் பண்டிகைக்கு பின்னரும், விடுபட்டவர்களுக்கான பொங்கல் பரிசுத் தொகை ரூ.1,000 வழங்கப்படும் என உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்தார். 

பொங்கல் பண்டிகையையொட்டி அரிசி, சர்க்கரை பெறும் குடும்ப அட்டைதாரர்களான 1.98 கோடி பேருக்கு ஆயிரம் ரூபாயுடன் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது. அதன்படி கடந்த 7 ஆம் தேதி முதல்  நியாய விலை கடைகளில் தினமும் 200, 300 குடும்ப அட்டைகள் வீதம் பொங்கல் பொருட்கள் மற்றும் பரிசுத் தொகை வழங்கப்பட்டன. ஒரு வார காலமாக நடந்து வந்த வினியோகம் இன்றுடன் முடிகிறது. 

ஒவ்வொரு மாதத்தின் முதல் மற்றும் இரண்டாவது வெள்ளிக்கிழமைகள் நியாய விலைக் கடைகளுக்கு விடுமுறையாகும். அதன்படி, கடந்த வெள்ளிக்கிழமை நியாய விலைக் கடைகளுக்கு வார விடுமுறை விடப்பட்டிருக்க வேண்டும். பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் பணி காரணமாக கடந்த வெள்ளிக்கிழமை நியாய விலைக் கடைகள் செயல்பட்டன. எனவே, அந்த பணி நாளுக்குப் பதிலாக வரும் 16 ஆம் தேதியன்று நியாய விலைக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது. 

பொங்கல் பண்டிகை அரசு விடுமுறை என்பதால் 15-ஆம் தேதியும் கடைகள் இருக்காது. எனவே, பொங்கல் பரிசுத் தொகுப்பை பெற விரும்புவோர் வரும் ஞாயிறு மற்றும் திங்கள்கிழமைகளில் நியாய விலைக் கடைகளுக்கு சென்று பொருள்களை பெற்றுக் கொள்ளலாம் என உணவுத் துறை அதிகாரிகள் தெரிவித்திருந்தனர். 

சென்னையில் 19 லட்சம் குடும்ப அட்டைத்தாரர்கள் உள்ளனர். அதில், 95 சதவீத அட்டைத்தாரர்களுக்கு பொருட்கள் மற்றும் ரூ.1000 வழங்கப்பட்டு விட்டன. ஒவ்வொரு ரே‌ஷன் கடைகளிலும் 10-க்கும் குறைவானவர்கள்தான் பொங்கல் பொருட்கள் வாங்காமல் இருந்தனர். விடுபட்டவர்களில் பெரும்பாலானோர் இன்று வாங்கி வருகின்றனர். 

இந்நிலையில், திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் இன்று உணவுத்துறை அமைச்சர் காமராஜ் செய்தியாளர்களிடம் பேசுகையில், 97 சதவீதம் ஆயிரம் ரூபாயுடன் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டுவிட்டதாகவும், மாநகரங்களில் இருந்து முன்னதாகவே வெளியூர் சென்றிருக்கும் மக்களுக்கு பொங்கல் முடிந்த பின்னரும் பொங்கல் பரிசு வழங்கப்படும் என்று தெரிவித்தார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com